Chinniah Kasi : தீக்கதிர் : 1915 ஆம் ஆண்டில் கடலில் மூழ்கி காணாமல் போன அண்டார்டிக் ஆய்வாளர் சர் எர்னஸ்ட் ஷேக்லெட்டனின் என்டூரன்ஸ் கப்பல் 107 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கண்டுபிடிக்கப்பட்டது.
கடல்சார் வரலாற்றில் மிக உயரமான கப்பல் விபத்துகளில் ஒன்று அண்டார்டிகா கடற்கரையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
1915 ஆம் ஆண்டில் அண்டார்டிக் கண்டத்தை கடக்க ஒரு பயணத்தில் ஈடுபட்டிருந்தபோது எண்டூரன்ஸ் கப்பல் பனிக்கட்டியால் நசுக்கப்பட்டது.
தற்போது இந்த கப்பலை கண்டறிய 2022 பிப்ரவரி ஒரு பயணக் குழு, பெருமளவில் சேதமடையாத நிலையில் இந்த கப்பலை அப்படியே 3,008 மீட்டர் ஆழத்தில் கண்டுபிடித்துள்ளது.
மூழ்கிய அந்த கப்பலின் கேப்டன் ஃபிராங்க் வோர்ஸ்லி முதலில் பதிவு செய்த இடத்தில் இருந்து தோராயமாக நான்கு மைல் தெற்கே இந்த கப்பல் இப்போது கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய இந்த ஆய்வின் இயக்குனர் மென்சன் பவுண்ட், “எண்டூரன்ஸ் கப்பலை கண்டுபிடித்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி. அந்த கப்பலின் பிம்பம் அப்படியே இருக்கிறது. இதுவரை நாங்கள் பார்த்த மிகச்சிறந்த மரக்கப்பல் சிதைவு இதுதான். இந்த கப்பல் சிதைவுகள் அடிபரப்பில் அற்புதமான பாதுகாப்பில் உள்ளது.
இந்த கண்டுபிடிப்பு துருவ வரலாற்றில் ஒரு மைல்கல் ஆகும்” என தெரிவித்தார்.
அண்டார்டிக் ஆய்வாளர் சர் எர்னஸ்ட் ஷேக்லெட்டன் மற்றும் அவரது என்டூரன்ஸ் கப்பல் குழுவினர் அண்டார்டிகாவின் நிலப்பரப்பை அடைய 1915 ஆம் ஆண்டு டிசம்பர் 5 அன்று புறப்பட்டனர். ஜனவரி 18 அன்று அக்கப்பல் அடர்த்தியான கடலின் பனிக்கட்டியில் சிக்கிக்கொண்டது. அடுத்த 10 மாதங்களுக்கு கப்பல் பனிக்கட்டிக்குள் சிக்கி நவம்பர் 21 அன்று கடலில் மூழ்கியது. இதில் பயணித்த 28 பேர் கொண்ட குழுவினர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்து தெற்கு ஜார்ஜியாவுக்கு திரும்பினர்.
இந்நிலையில் சர் எர்னஸ்ட் ஷேக்லெட்டன் இறந்த 100வது ஆண்டு நினைவு தினத்திற்கு ஒரு மாதத்திற்குப் பிறகு, தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் இருந்து இந்த கப்பலை கண்டுபிடிக்கும் பணியில் இறங்கிய எண்டூரன்ஸ் 22 என்ற குழுவால் இந்த கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கிட்டதட்ட 107 ஆண்டுகளுக்கு பிறகு சர் எர்னஸ்ட் ஷேக்லெட்டனின் என்டூரன்ஸ் கப்பல் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக