Sharmila Seyyid : சட்டம் பயின்ற/ பயின்று கொண்டிருக்கும் இளைய சமுதாயத்தவர்களுக்கும், மார்க்கம் பயின்ற/ பயின்று கொண்டிருக்கும் இளைய சமுதாயத்தவர்களுக்கும் இஸ்லாமிய திருமண விவாக விவாகரத்துச் சட்டத் திருத்தங்களின் ( Muslim Marriage Divorce and Acts - MMDA Reform) அவசியம் குறித்து அறிவூட்டும் இரு நாள் வதிவிட நிகழ்வொன்று கொழும்பில் நடந்தபோது நானும் அங்கு இருந்தேன்.
”எங்களுக்கு மெய்யாகவே இஸ்லாமிய விவாக விவாகரத்துச் சட்டம் குறித்துத் தெரியவில்லை” என்பதை பெரும்பாலான சட்டம் படித்தவர்களும், மார்க்கம் படித்தவர்களும் வெளிப்படையாக ஒப்புக் கொண்டதைக் காண முடிந்தது.
அனுபவமிக்க சட்டத்தரணிகளையும், மார்க்க அறிஞர்களையும் கொண்டு இவர்களுக்கான முதல்நாள் நிகழ்வு நெறிப்படுத்தப்பட்டிருந்தபோதும் இரண்டாம் நாள் நிகழ்வின் கலந்துரையாடல் பகுதியில் சில இளைஞர்கள் எழுப்பிய கேள்விகள் பெரும் ஏமாற்றத்தையே அளிப்பதாக இருந்தன.
முக்கியமாக ஹாதி நீதிபகளாகப் பெண்கள் நியமிக்கப்படுவதற்கு இவர்கள் ஆதரவளிப்பவர்களாக இருக்கவில்லை. அதற்கு அவர்கள் முன்வைத்த காரணங்களில் ”இலங்கையில் முஸ்லிம்கள் சிறுபான்மைச் சமூகம். இங்கு பெண்கள் ஹாதி நீதிபதிகளாக இருக்கும்போது அவர்களுக்குப் பிரச்சினைகள், சவால்கள் வரும். அவற்றிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகள் எம்மிடம் இல்லை” என்பதும் ஒரு காரணமாக இருந்தது.
உலகிலுள்ள இஸ்லாமிய நாடுகளில் திருமண விவாக விவாகரத்துச் சட்டம் எவ்வாறெல்லாம் திருத்தியமமைக்கப்பட்டுள்ளது , எந்தெந்த நாடுகளெல்லாம் பெண்களை ஹாதி நீதிபதிகளாக நிமியமித்துள்ளது என்ற சமர்ப்பணம் செய்யப்பட்டதன் பிற்பாடான கேள்வி பதில்களின்போதே இந்தக் கருத்தும் முன்வைக்கப்பட்டது.
இப்படியான அபத்தமான முடிவுகள் பொதுவான சமூகத்திடம் இருப்பதற்கும் சட்டத்தையும் மார்க்கத்தையும் கற்றவர்களிடம் இருப்பதற்கும் பாரிய இடைவெளி உண்டு.
அவர்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டியது,
1) முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத் திருத்தத்தில் பெண்களை ஹாதி நீதிபதிகளாக நியமிக்கின்ற முன்மொழிவானது யாரோ பெண்களை எல்லாம் பிடித்து இழுத்து அமர்த்துவதல்ல. சட்டம் பயின்ற மார்க்க ஞானமுள்ள, அல்லது அதற்கு ஈடான தகைமையுள்ள பெண்களை நியமிப்பதையே இந்த முன்மொழிவு குறிப்பிடுகின்றது.
2) நாம் சிறுபான்மைச் சமூகம் என்பதற்காக நமக்கான சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடியாதென்பது அபத்தமான கருதுகோள். முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் இந்தியாவில்கூட முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. முஸ்லிம் பெண்கள் ஹாதி நீதிபதிகளாக ஏன், திருமணப் பதிவாளராக கூட நியமிக்கப்பட்டுள்ளார்கள். இலங்கையில் திருமண விவாக விவாகரத்துச் சட்டத்திற்கு சிங்களவர்களோ தமிழர்களோ எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். எதிர்ப்பு முஸ்லிம் சமூகத்திற்குள்ளும் முஸ்லிம் அரசியல் வாதிகளிடமிருந்துமே.
3) பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்பது பொதுவாக எல்லா நாடுகளிலும் எல்லா நிலைகளிலுமான சவால். முஸ்லிம் பெண்கள் ஹாதி நீதிபதிகளாக நியமிக்கப்படுவதால் "மட்டும்" அவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உருவாகும் என்று நம்புவதாக இருந்தால், முஸ்லிம் சமூகம் அத்தனை பிற்போக்கான மோசமான சமூகம், பெண்களைக் கொல்லவும் தயங்காத ஒரு சமூகம் என்பதை ஏற்றுக் கொள்வதற்குச் சமன்.
பெரும்பாலானவர்கள் இஸ்லாமிய விவாக விவாகரத்துச் சட்ட திருத்தத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டுக்கு முடிவில் வந்துவிட்டிருந்தபோதும் பெண்களைக் ஹாதிகளாக நியமிப்பதற்கு உடன்பாடற்றவர்களாக இருந்தனர்.
அதற்கு அவர்கள் முன்வைத்த விசித்திரமான காரணம் பெண் உலமாக்கள் நம்மிடம் இல்லை என்பது.
”உலமா” என்ற ”அறிஞர்களை” குறிக்கும் பதம் ஆண் சமுதாயம் மட்டுமே குத்தகைக்கு எடுத்துக் கொண்டதாக இவர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
ஹாதி நீதிபதிகளாக இருக்கும் பத்தாம் வகுப்பு பாஸாகாதவரை ”உலமா” என்று ஏற்றுக் கொள்ள முடியும் என்றால், சட்டத்தரணியாகப் பட்டம் பெற்ற, மார்க்க ஞானமுள்ள பெண்களை ”உலமா”வாக ஏற்க முடியாதா?
சிந்தனைப் பள்ளிகளில் பயின்றாலும், சட்டக் கல்லூரியில் பயின்றாலும் முஸ்லிம் ஆண்களின் மூளைகள் ஒரே விதமாகத்தான் யோசிக்கின்றன (விதிவிலக்குகள் இருக்கலாம்) என்பதற்கு சான்றாகவே இந்த நிகழ்வும் வாதப் பிரதிவாதங்களும் இருந்தன.
நிழற்படம்: இந்தியாவின் முஸ்லிம் ஹாதி நீதிபதி ஹக்கீமா காத்துன் இந்த ஆண்டு ஜனவரி 5இல் கல்கத்தாவில் திருமணமொன்றைப் பதிவு செய்து நடத்திவைத்தபோது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக