மின்னம்பலம் : சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகத்தின் நிரந்தர வைப்பு நிதியில் ரூ.45 கோடி பணம் மோசடி செய்த விவகாரத்தில் இந்தியன் வங்கி கிளை முன்னாள் மேலாளர் உட்பட 11 பேரை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது.
சென்னை கோயம்பேட்டில் உள்ள இந்தியன் வங்கிக் கிளையில் கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகத்தின் சார்பில் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு, நிரந்தர வைப்பு நிதியாக ரூ.100 கோடி செலுத்தப்பட்டது.
டெபாசிட் செய்யப்பட்ட ஓரிரு நாட்களிலேயே கணேஷ் நடராஜன் என்பவர் சென்னை துறைமுகத்தின் துணை இயக்குநர் என்று கூறிக்கொண்டு, போலியாக பல்வேறு ஆணவங்களை வங்கியில் சமர்ப்பித்து, சென்னை துறைமுகத்தின் நிரந்தர வைப்பு கணக்கில் இருக்கும் ரூ.100 கோடியை இருவேறு நடப்பு கணக்குகளுக்கு மாற்ற வேண்டும் என்று வங்கியை அணுகியுள்ளார்.
இதைப் பரிசீலனை செய்த வங்கி நிர்வாகம், தலா ரூ.50 கோடியாக இருநடப்பு கணக்குகளுக்கு பணத்தை மாற்றியது. பின்பு, அந்த வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் 34 வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டது.
இதனிடையே நிரந்தர வைப்பு கணக்கில் இருந்து திடீரென பணம் மாற்றப்பட்டு வருவதை அறிந்த, துறைமுக அதிகாரிகள், வங்கி அதிகாரிகளைத் தொடர்புகொண்டு விசாரித்தனர். அப்போதுதான் ஒரு மோசடி கும்பல் போலி ஆவணங்களைக் கொடுத்து பணத்தை மோசடி செய்திருப்பது வெளிச்சத்திற்கு வந்தது.
உடனடியாக வங்கி நிர்வாகம், அந்தப் பணப் பரிமாற்றம் அனைத்தையும் நிறுத்தியது. இருப்பினும், ரூ.45 கோடி வரை பல்வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டது.
இதுதொடர்பாக அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை நடத்திய நிலையில், துறைமுகப் பொறுப்புக் கழகம் தொடர்புடைய விவகாரம் என்பதால் இவ்வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ நடத்திய விசாரணையில் பண மோசடியில் தொடர்புடைய இந்தியன் வங்கி கிளை முன்னாள் மேலாளர் சேர்மதி ராஜா, கணேஷ் நடராஜன், மணிமொழி உள்ளிட்ட 11 பேரை கைது செய்து அவர்களுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி ஆவணங்களைக் கைப்பற்றினர்.
இதனிடையே சட்ட விரோதப் பணபரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத் துறை தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தது.
இதுகுறித்து அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சென்னை துறைமுகக் கழகத்துக்கு சொந்தமான ரூ.45 கோடி பணம் மோசடி செய்தது தொடர்பாக பி.வி.சுடலைமுத்து, எம்.விஜய் ஹெரால்டு, எம்.ராஜேஷ் சிங், எஸ்.சியாத், கே.ஜாகீர் உசேன், சுரேஷ்குமார், கணேஷ் நடராஜன், வி.மணிமொழி, ஜெ.செல்வகுமார், ஏ.சேர்மதிராஜா, அருண் அன்பு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக சென்னை சிபிஐ பதிவு செய்த எஃப்ஐஆர் அடிப்படையில் பணமோசடி விசாரணையை அமலாக்கத் துறை தொடங்கியது. 2021 ஜூன் மாதம் தமிழகம் முழுவதும் 15 இடங்களில் சோதனை நடத்தியது.
இவ்வழக்கில் பண மோசடியில் ஈடுபட்டவர்கள் பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றிய 45 கோடி ரூபாயை சுமார் 230 ஏக்கர் நிலங்கள், வாகனங்கள், தங்க நகைகள் உள்ளிட்ட பல்வேறு சொத்துகளில் முதலீடு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், இவர்கள் சென்னை துறைமுகத்தில் பணம் டெபாசிட் செய்யப்பட்டதற்கான போலியான வைப்பு ரசீதுகளைச் சமர்ப்பித்துவிட்டு, தங்களிடம் இருந்த அசல் வைப்பு ரசீதுகளின் உதவியுடன், நிரந்தர வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை வேறு வங்கிகளுக்கு மாற்றி மோசடி செய்ததும் தெரிய வந்துள்ளது.
சென்னை போர்ட் டிரஸ்ட் - ஜெனரல் இன்சூரன்ஸ் ஃபண்ட் என்ற பெயரில் தொடங்கப்பட்ட போலி நடப்புக் கணக்குக்கு ரூ.45 கோடிக்கு மேல் பணம் மாற்றப்பட்டு மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரூ.45 கோடியில் 15.25 கோடி ரூபாய் பணம் மாற்றப்பட்ட போலி நடப்பு வங்கிக் கணக்கில் இருந்து துணை இயக்குநர் என நாடகமாடிய கணேஷ் நடராஜன் என்பவரால் எடுக்கப்பட்டதும், மீதமுள்ள 31.65 கோடி ரூபாய் பணம் 49 பணப் பரிமாற்றங்கள் மூலம் பல்வேறு வங்கிக் கணக்குகளில் மாற்றப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ஏற்கனவே சிபிஐயால் கைது செய்யப்பட்ட 11 பேரை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. மேலும், விரைவில் 11 பேரையும் தங்களது காவலில் எடுத்து விசாரிக்கவும் அமலாக்கத் துறை முடிவு செய்துள்ளது.
-வினிதா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக