மின்னம்பலம் : தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் நிர்வாக இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணாவை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக சித்ரா ராமகிருஷ்ணா 2013ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை செயல்பட்டார்.
அப்போது இமயமலையில் வசிக்கும் சாமியார் ஒருவரிடம் பங்குச்சந்தை தொடர்பாக ஆலோசனை பெற்று சித்ரா ராமகிருஷ்ணா செயல்பட்டதாக அவர் மீது செபி குற்றம்சாட்டியது. அந்தச் சாமியாரின் ஆலோசனைப்படிதான் ஆனந்த் சுப்ரமணியனை தேசிய பங்குச் சந்தையின் சீஃப் ஸ்ட்ரேடஜிக் அதிகாரியாக சித்ரா ராமகிருஷ்ணா நியமித்ததாகவும் தெரிவித்தது.
சித்ரா ராமகிருஷ்ணன் ஆலோசனை பெற்ற அந்த இமயமலை சாமியார் யார் என்று தெரியாத நிலையில் ஒருவேளை அது ஆனந்த் சுப்ரமணியனாக கூட இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது.
2014-2016 வரை மின்னஞ்சல் மூலம் சாமியாரும், சித்ரா ராமகிருஷ்ணாவும் பேசி வந்ததன் அடிப்படையில் இத்தகவலைச் செபி வெளியிட்டது.
இந்த சூழலில் ஆனந்த் சுப்பிரமணியன் சிபிஐ அதிகாரிகளால் கடந்த மாதம் 25ஆம் தேதி சென்னையில் வைத்து கைது செய்யப்பட்டார். இதனிடையே 2018ஆம் ஆண்டு தேசிய பங்குச் சந்தையின் சர்வர் பயன்பாட்டை சில முக்கிய வர்த்தகர்களுக்கு மறைமுகமாக அளிக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது.
கோ- லொகேஷன் முறையில் பங்கு வர்த்தக தகவல்கள் பகிரப்பட்டதாகக் கூறப்பட்டது. அதாவது தேசிய பங்குச் சந்தையின் சர்வர்கள் வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் வர்த்தகம் புரியும் பங்குச்சந்தையின் வர்த்தகர்களின் சர்வர்களையும் வைத்து வணிகம் செய்யும் முறை கோ- லொகேஷன் ஆகும்.
இதுபோன்று பங்கு தரகர் சஞ்சய் குப்தாவின் ஓபிஜி செக்யூரிட்டி லிமிடெட் நிறுவனத்திற்கு, கோ- லொகேஷன் முறையில் பங்குச்சந்தை தரவுகள் பகிரப்பட்டதாக சிபிஐ குற்றம்சாட்டுகிறது.
இவ்வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணாவை நேற்று டெல்லியில் உள்ள அவரது வீட்டில் வைத்து சிபிஐ கைது செய்தது. அவரை 14 நாட்கள் சிபிஐ காவலில் விசாரிக்கக் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
-பிரியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக