திங்கள், 2 நவம்பர், 2020

வேளாண் அமைச்சராக கே.பி.அன்பழகன்: பகுதியை வென்ற சாதி!

வேளாண் அமைச்சராக கே.பி.அன்பழகன்: பகுதியை வென்ற சாதி!
Add caption
minnambalam :    கே.பி.அன்பழகனுக்கு வேளாண் துறை கூடுதல் பொறுப்பாக ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக வேளாண் துறை அமைச்சராக இருந்த துரைக்கண்ணு உடல்நலக் குறைவால் நேற்று இரவு சென்னை காவேரி மருத்துவமனையில் காலமானார். இதனால் புதிய வேளாண் துறை அமைச்சர் யார் என்கிற கேள்வி எழுந்தது. துரைக்கண்ணு வன்னியர் என்பதால் அவரது பதவியை அதே சமுகத்தைச் சேர்ந்த தனக்கு அளிக்க வேண்டும் என அமைச்சர் சி.வி.சண்முகமும், பகுதி ரீதியாக டெல்டா பகுதியைச் சேர்ந்த தனது ஆதரவாளருக்கு அளிக்க வேண்டும் என வைத்திலிங்கமும் முதல்வரை வலியுறுத்தியதாக தகவல்கள் வந்தன. இதுபற்றி அடுத்த வேளாண் அமைச்சர் யார்? அதிமுகவில் பரபரப்பு! என செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில் ஆளுநர் மாளிகை இன்று (நவம்பர் 1) வெளியிட்ட செய்திக் குறிப்பில், “அமைச்சர் துரைக்கண்ணு மறைந்ததால் காலியாக உள்ள வேளாண் துறை, உயர் கல்வித் துறை அமைச்சராக இருக்கும் கே.பி.அன்பழகனுக்கு கூடுதல் பொறுப்பாக அளிக்கப்படுகிறது. இனி அவர் உயர்கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சர் என அழைக்கப்படுவார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் மணிகண்டன் நீக்கப்பட்ட போது அவரிடம் இருந்த தகவல் தொழில்நுட்பத் துறை இலாகா அவரது சமுகத்தைச் சேர்ந்த ஆர்.பி.உதயகுமாரிடம் வழங்கப்பட்டது. அதேபோல சி.வி.சண்முகம் கேட்ட நிலையில், அதே சமூகத்தைச் சேர்ந்த கே.பி.அன்பழகனிடம் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதனால் சி.வி.சண்முகம் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க டெல்டா பகுதியைச் சேர்ந்த அதிமுகவினரும் இதனால் அதிருப்தியில் இருக்கிறார்கள். டெல்டா பகுதிக்கு வேளாண் துறையை அளித்தால் பொருத்தமாக இருக்கும் என்பதால்தான் பாபநாசத்தைச் சேர்ந்த துரைக்கண்ணுவுக்கு அளித்தார் ஜெயலலிதா. அவர் மறைந்த பிறகு அதே டெல்டாவைச் சேர்ந்த அமைச்சர்கள் காமராஜ், ஓ.எஸ்.மணியன் ஆகியோரில் ஒருவருக்கு அல்லது வைத்திலிங்கம் கைகாட்டுபவருக்கு வேளாண் துறை ஒதுக்கப்படும் என எதிர்பார்த்தோம்.

ஆனால், அண்ணா பல்கலைக் கழக விவகாரம், கவுன்சிலிங் என கடும் பணிச் சுமையில் இருக்கும் உயர்கல்வித் துறை அமைச்சருக்கு கூடுதல் பொறுப்பாக வேளாண் துறையையும் ஏன் ஒதுக்க வேண்டும் எனக் கேள்வி எழுப்புகிறார்கள்.

எழில்

கருத்துகள் இல்லை: