BBC :கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த தமிழ்நாட்டின் வேளாண் துறை அமைச்சர் ஆர். துரைக்கண்ணு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 72. கொரோனா தொற்றால் நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்த அமைச்சர், சிகிச்சை பலனின்றி அக்டோபர் 31ஆம் தேதி இரவு 11.15 மணியளவில் உயிரிழந்தார் என அவருக்கு சிகிச்சையளித்துவந்த காவிரி மருத்துவமனை தெரிவித்துள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தா யார் கடந்த 12ஆம் தேதி இரவு சேலத்தில் மரணம் அடைந்தார். அவரது இறுதி சடங்கில் கலந்துகொள்வதற்காக துரைக்கண்ணு காரில் புறப்பட்டார். விழுப்புரம் அருகே சென்று கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்ற அவர், சென்னைக்கு கொண்டுவரப்பட்டார்.
சென்னையிலுள்ள காவிரி மருத்துவனையில் சேர்க்கப்பட்டபோது அவருக்கு மூச்சுத் திணறல் இருந்தது. இதையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கொரோனோ தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு கொரோனாவுக்கான சிகிச்சையும் அதன் பாதிப்புகளுக்கான சிகிச்சையும் தொடர்ந்து வழங்கப்பட்டன. இருந்தபோதும் அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்துவந்தது.
அவருக்கு எடுக்கப்பட்ட சி.டி. ஸ்கேனில் அவரது நுரையீரல் 90 சதவீதம் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் அவருக்கு பல இணை நோய்களும் இருந்துவந்தன. அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததையடுத்து அவருக்கு எக்மோ கருவி பொறுத்தப்பட்டது.
அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்ததால், 24 மணி நேரத்திற்குப் பிறகே அவரது உடல்நலம் குறித்துத் தெரியவரும் என வியாழக்கிழமையன்று மருத்துவமனை அறிவித்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமையன்று இரவு 11.15 மணியளவில் அவர் மரணமடைந்தார்.
1948ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் ராஜகிரியில் பிறந்தவர் துரைக்கண்ணு. இவருக்கு மனைவியும் இரண்டு மகன்களும் நான்கு மகள்களும் உள்ளனர். 2016ஆம் ஆண்டு பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று வேளாண்துறை அமைச்சராகப் பதவியேற்றார். அதே தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் 2006, 2011 தேர்தல்களிலும் போட்டியிட்டு வெற்றிபெற்றாலும் இந்த முறைதான் அவருக்கு அமைச்சர் பதவி கிடைத்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக