இரண்டு மனுக்களையும் சேர்த்து விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வின் முன்பு மத்திய அரசின் தொல்லியல் வழக்கறிஞா் விக்டோரியா கவுரி மற்றும் செல்லபாண்டியன் ஆஜரானார்கள்.
மத்திய அரசின் தொல்லியல் வழக்கறிஞா் விக்டோரியா கவுரி, ஆதிச்சநல்லூா் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை ‘காா்பன் டேட்டிங்’ சோதனைக்கு உட்படுத்தியபோது, அந்தப் பொருட்கள் கி.மு 696 முதல் கி.மு 540 வரை மற்றும் கி.மு 806 முதல் கி.மு 906 வரையிலான ஆண்டுகளுக்கு உட்பட்டதாகத் தெரிகிறது என தெரிவித்தார். மேலும் ஆதிச்சநல்லூா், புலிகட்டு, மலையடிப்பட்டி மற்றும் கீழடியில் நடைபெற்ற அகழாய்வுகளுக்கான அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும், விரைவில் அந்த அறிக்கைகள் வெளியிடப்படும் என்றும் கூறினார்.
மேலும் கொடுமணல் அகழாய்வில் எடுக்கப்பட்ட 10 பொருட்கள் ‘காா்பன் டேட்டிங்’ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. கொடுமணல் அகழாய்வில் 96 பொருள்கள் கிடைத்துள்ளன. அவற்றில் 356 தமிழ் பிராமி எழுத்துகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற அகழாய்வுகளில் கொடுமணல் அகழாய்வில் முதன்முறையாக ‘ஆ’, ‘ஈ’ போன்ற தமிழ் நெடில் எழுத்துகள் கிடைத்துள்ளன.
அப்போது நீதிபதிகள், ”அதிக கல்வெட்டுகள் தமிழில் இருக்கும் போது ஏன் சமஸ்கிருதத்திற்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது?” என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லபாண்டியன் பதிலளித்த போது, ”தமிழகத்தில் இதுவரை 11 ஆயிரம் கல்வெட்டு படிமங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இதில் பல கல்வெட்டுகள் 15 அடி உயரத்துக்கும் மேல் இருப்பதால் அவற்றை படிமம் செய்வதில் சிரமம் உள்ளது. அதற்கான தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட புராதானப் பகுதிகளாக 92 இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போது புதிதாக 54 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” என்று கூறினாா்.
இதையடுத்து நீதிபதிகள், கொடுமணல் அகழாய்வில் கிடைத்த பொருட்களை ‘காா்பன் டேட்டிங்’ சோதனைக்காக அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திற்கு 10 நாட்களில் அனுப்பவும், இதற்கான செலவை தமிழக அரசு ஏற்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனா்.
மேலும் மதுரையில் உள்ள ஆனைமலை சமண சமய அடையாளமாக இருக்கிறது. அங்கு புதிதாகக் கட்டப்பட்ட வழிபாட்டு கட்டமைப்புகளை அகற்றவும், பழங்கால சின்னங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக