minnampalam :உத்தரப் பிரதேச மாநிலத்தில் தொடர்ந்து கொலை, கொள்ளை, வன்கொடுமை, பாலியல்
பலாத்காரம் எனக் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. 2019 ஆண்டில்,
ஜனவரி முதல் ஜூலை வரை 2,204 கொலைகளும், இதே காலகட்டத்தில் 2020ல் 2,032
கொலைகளும் நடந்துள்ளதாக மாநில அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.மாநிலத்தில் குற்றச்சம்பவங்களைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநில அரசு அறிவித்தாலும், அவை குறைந்த பாடில்லை. இந்நிலையில், உபியைச் சேர்ந்த ரவுடி கும்பல் ஒன்று குற்றம் செய்வதற்கான விலைப் பட்டியலை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மார்க்கெட்டில் காய்கறிகளுக்கு விலைபட்டியல் வைத்திருப்பது போன்று, யாரையாவது மிரட்ட வேண்டுமா ரூ. 1000, அடிக்க ரூ.5,000, தாக்கி காயப்படுத்த வேண்டுமா ரூ.10,000 கொலை செய்ய ரூ.55,000 வசூலிக்கப்படும் எனக் குற்றம் செய்வதற்கான விலைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதோடு இந்த போஸ்டரில் தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி நம்பரும், இளைஞர் ஒருவர் கருப்பு உடையில் துப்பாக்கி வைத்திருப்பதும் இடம்பெற்றுள்ளது.
இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் பரவவே, போலீசாரின் கவனத்துக்கும் சென்றுள்ளது. போலீஸ் விசாரணையில் இந்த போஸ்ட்டரை சமூக வலைதளத்தில் பதிவேற்றியவர், சர்தவால் காவல் நிலைய பகுதியில் உள்ள சவுக்கடா கிராமத்தில் வசிப்பது தெரியவந்துள்ளது.
மேலும் அந்த போஸ்டரில் இடம்பெற்ற நபர் அதே கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரரின் மகன் என்பதும் தெரியவந்துள்ளது.
விரைவில் இந்த இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உபி போலீசார் கூறியுள்ளனர். தொழில் போட்டி காரணமாக இவ்வாறு செய்திருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-பிரியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக