செவ்வாய், 3 நவம்பர், 2020
ராமேஸ்வரம் கோயில் நகைத்திருட்டு அம்பலம் குருக்கள்கள், மணியம் உள்ளிட்ட 30 பேர்கள் மீது சந்தேகம்
இந்துக்களின்
முக்கிய புனித தலங்களில் ஒன்றாக விளங்கிவருவது ராமேஸ்வரம். காசிக்கு
நிகராக விளங்கும் இந்தத்தளத்திலுள்ள அருள்மிகு ராமநாதசுவாமி கோயிலுக்கு
நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இலங்கை மன்னர்
பராக்கிரம பாகுவால் சிறிய அளவில் உருவாக்கப்பட்ட இந்தக் கோயில், பின்னர்
ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களால் உலகப் பிரசித்தி பெற்ற மூன்றாம்
பிராகரத்துடன் உருவானது. மன்னர்களுக்குச் சொந்தமான கோயிலாக இருந்ததால்,
இந்தக் கோயிலில் பழைமைவாய்ந்த தங்கம், வெள்ளி, பவளம், முத்து, வைரம்,
வைடூரியம் உள்ளிட்ட 65 வகையான ஆபரணங்கள் கருவூலத்தில்
பாதுகாக்கப்பட்டுவருகின்றன.
விலைமதிப்பற்ற இந்த ஆபரணங்கள், கோயிலில் நடைபெறும் ஆடி, மாசி உள்ளிட்ட திருவிழாக்களின்போது சுவாமி - அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அணிவிக்கப்படும். இந்தநிலையில், கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் ராமேஸ்வரம் கோயிலுக்குச் சொந்தமான நகைகள் காணாமல்போனதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கைத் தொடர்ந்து கோயில் நகைகளை ஆய்வு செய்யவும், நகைகள் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருக்கின்றனவா என ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டது. இதனடிப்படையில் நகை மதிப்பீட்டாளர்கள் மூலம் கடந்த ஆண்டு கோயிலின் நகைகள் மறு மதிப்பீடு செய்யப்பட்டன. இவற்றுடன் கோயிலிலுள்ள தங்கம் மற்றும் வெள்ளியிலான பல்லக்குகள், தேர்கள் ஆகியவையும் மறு மதிப்பீடு செய்யப்பட்டு அவற்றின் எடையும் சரிபார்க்கப்பட்டது.
இந்த ஆய்வில் சுவாமி மற்றும் அம்பாளுக்கு அணிவிக்கும் பல்வேறு நகைகளின் எடை குறைந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து நகையக் கையாளக்கூடிய குருக்கள்கள், மணியம் உள்ளிட்ட 30 பணியாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், எடை குறைவான நகைகளுக்கு ஈடாக ரூ.5,000 முதல் ரூ.12 லட்சம் வரை அபராதம் செலுத்த வேண்டும் எனவும் திருக்கோயில் நிர்வாகம் ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. இவர்களில் பணி ஓய்வுபெற்ற பணியாளர்களும் இருக்கிறார்கள்.
திருக்கோயில் இணை ஆணையரின் முழுப்பொறுப்பில் கோயில் கருவூலத்தில் வைக்கப்பட்டிருக்கும் நகைகளில் எடைக் குறைவு ஏற்பட்டதற்கு கோயில் ஊழியர்கள் மட்டுமே காரணம் என்ற வகையில் அவர்களுக்கு அபராதம் விதித்து நோட்டீஸ் அனுப்பியிருக்கும் நடவடிக்கை கோயில் ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுகுறித்து திருக்கோயில் அதிகாரி கூறுகையில்,``கோயில் நகைகளில் தேய்மானம் ஏற்பட்டு எடை குறைந்திருக்கிறது. இதுகுறித்து விளக்கமளிக்க நகைகளைப் பராமரிக்கும் பணியில் இருந்த ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. இது வழக்கமான நடைமுறைதான்'' என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக