திங்கள், 11 செப்டம்பர், 2017

BBC "எச்.ராஜா சாரணர் இயக்க தலைவர் ? செங்கோட்டையன் பழனிசாமி கூட்டு முயற்சி!

தமிழகத்தின் பள்ளிக் கல்வித் துறையின் தரத்தை மேம்படுத்தும் நோக்குடனேயே தான் இப்பதவிக்குப் போட்டியிடுவதாக கூறும் எச் ராஜா
இந்திய சாரணர் மற்றும் சாரணியர் இயக்கத்தின் தமிழ்நாடு மாநிலத் தலைவருக்கான தேர்தலில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலர் எச்.ராஜாவுக்கு வாக்களிக்குமாறு கல்வித்துறை அதிகாரிகள் மிரட்டப்படுவதாகவும், அவருக்கு அப்பதவியைத் தாரை வார்க்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், கல்வி அமைச்சர் செங்கோட்டையனும் முயற்சிப்பதாக திமுக பொருளாளரும் தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் கூறியிருப்பதற்கு ராஜா மறுப்புத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், "அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல, தமிழகத்தில் எது நடந்தாலும் அதற்கு பாரதிய ஜனதாவைக் குறை கூறும் மன நோய் ஸ்டாலினுக்கு உள்ளது," என்று கூறினார்.
சாரணர் மற்றும் சாரணியர் இயக்கத்தின் புரவலராக இருக்கும் ஆளுநரும், துணைப் புரவலராக இருக்கும் கல்வி அமைச்சரும், அதன் மாநிலத் தலைவர் பதவியை பாரதிய ஜனதா கட்சிக்குக் கொடுத்து, மாணவர்களின் பிஞ்சு உள்ளத்தில் காவி நஞ்சை விதைக்க திரைமறைவு முயற்சிகள் நடைபெறுவதாகக் கல்வியாளர்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று ஸ்டாலின் திங்களன்று விடுத்திருக்கும் அறிக்கையில் கூறியிருந்தார்.

பிரிக்கப்படாத ராமநாதபுரம் மாவட்டத்தின் சாரணர்-சாரணியர் இயக்கத்தில் தனது தந்தை பணியாற்றியதால், சிறு வயதில் இருந்தே தனக்கு அந்த அமைப்புடன் தொடர்பு இருப்பதாகவும், நண்பர்கள் கேட்டுக்கொண்டதன்பேரில் போட்டியிட ஒப்புக்கொண்டதாகவும் ராஜா கூறினார். >"மாணவர்கள் மனதில் காவி எண்ணங்களை விதைக்கும் முயற்சி என்று அவர் கூறுவது முற்றிலும் தவறானது. இது ஒரு கௌரவப் பதவி மட்டுமே. தேவையில்லாமல் ஸ்டாலின்தான் இந்த விவகாரத்தை அரசியலாக்குகிறார். நான் போட்டியிடுவதில் என்ன தவறு என்று அவர்தான் கூறவேண்டும்," என்றும் ராஜா தெரிவித்தார்.
தமது பள்ளிக்காலத்தில் தான், தேசிய மாணவர் படையில் இருந்ததால் சாரணர் இயக்கத்தில் இருந்ததில்லை. ஆனால், அதில் தனக்கு பல நண்பர்கள் உள்ளனர் என்றார் ராஜா.

பாரத சாரணர் மற்றும் சாரணியர் இயக்கத்தின் தமிழ்நாடு மாநிலத்த தலைவருக்கான தேர்தலில் மனு தாக்கல் செய்திருந்த ஐந்து பேரில், தற்போது எச்.ராஜா மற்றும் முன்னாள் பள்ளி கல்வி துறை இயக்குனர் பி.மணி ஆகியோர் மட்டுமே களத்தில் உள்ளனர். மற்ற மூவரும் போட்டியில் இருந்து விலகிக்கொண்டனர்.
இந்த விவகாரம் குறித்த மணியின் கருத்தை அறிய பிபிசி தமிழ் அவரைத் தொடர்பு கொண்டபோது, தமிழகத்தின் பள்ளிக் கல்வித் துறையின் தரத்தை மேம்படுத்தும் நோக்குடனேயே தான் இப்பதவிக்குப் போட்டியிடுவதாகவும், இப்பதவிக்கான தேர்தலைச் சுற்றி நடக்கும் அரசியலுக்கும் தமக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என்றும் கூறினார்.e>மேற்கொண்டு பேசிய அவர், மற்ற மூவரும் தங்கள் வேட்பு மனுக்களைத் திரும்பப்பெற்றுக் கொண்டதற்கான காரணம் தமக்குத் தெரியாது என்றும் தனது வேட்பு மனுவைத் திரும்பப் பெற எவ்விதமான அழுத்தங்களும் கொடுக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.
தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட பாரத சாரணர் மற்றும் சாரணியர் இயக்கத்தின் தமிழ்நாடு மாநிலக் கிளைக்கான தேர்தல் வரும் செப்டெம்பர் 16 அன்று நடைபெறவுள்ளது.

கருத்துகள் இல்லை: