செவ்வாய், 12 செப்டம்பர், 2017

கலைஞர், எம்ஜியார் ,ஜெயலலிதாவால் எதிர்க்கப்பட்ட நவோதயா! வீரமணி

ஹிந்தித் திணிப்புக்காக மட்டும் அதனை எதிர்க்கவில்லை:வீரமணி . நவோதயா கல்வி எங்கள் மாநிலத்துக்குத் தேவையில்லை என்று 1986இல் தமிழ்நாடு அரசால் அறுதியிட்டு அறிவித்த பிறகு அரசின் இந்த கொள்கை முடிவில், உயர்நீதிமன்றம் தலையிட்டு, நவோதயா கல்விக் கூடத்தை திறக்கச் சொல்லி உத்தரவிடலாமா? இதன் மீது தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:தமிழ்நாடு அரசு கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பின்பற்றி வரும் கொள்கை - இருமொழிக் கொள்கையாகும். தமிழ் - ஆங்கிலம் ஆகிய மொழிகள் தான் பாடத்திட்டமாக இருக்கும்; மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் ஹிந்தித்திணிப்பை. ஏற்கவே முடியாது என்று 1967ஆம் ஆண்டே அன்றைய தமிழக முதல்வர் அறிஞர் அண்ணா அவர்கள் திட்டவட்டமான கொள்கை முடிவாக இதனை அறிவித்தார்.


கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவால் எதிர்க்கப்பட்ட நவோதயா

அக்கொள்கையைத்தான் தமிழ்நாட்டில் ஏற்பட்ட தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு ஆட்சிகளும், முதல் அமைச்சர்களாக கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் மாறி மாறி வந்த போதிலும் - கட்சி - ஆட்சி மாறினாலும் இக்கொள்கை முடிவு இன்று வரை மாறாது உறுதியாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.

இதனை மாற்றிட அவ்வப்போது மத்தியில் ஆண்ட அரசும், ஆளும் அரசும் மத்தியில் ஹிந்தி சமஸ்கிருத ஆதிக்கத்தை நுழைத்து, மொழிப் பண்பாட்டை சீர்குலைத்து, ஒரு படையெடுப்பை தமிழ்நாட்டின் மீது நடத்திட அவ்வப்போது தொடர் முயற்சிகளை நடத்தி வருகின்றன. அதில் ஒன்று தான் 1986இல் அப்போதைய மத்திய அரசு நவோதயா பள்ளிக்கூடம் என்ற ஒரு திட்டத்தைக் கொண்டு வந்த போது தமிழ்நாடும், தமிழ்நாட்டிலுள்ள அத்தனைக் கட்சிகளும் கடுமையாக அத்திட்டத்தினை எதிர்த்தன.

எழுத்தறிவின்மை ஒழிக்கப்பட்டதா?

ஹிந்தித் திணிப்புக்காக மட்டும் அதனை எதிர்க்கவில்லை.

இன்னமும் குறைந்தபட்ச கல்வி எழுத்தறிவு பெறாதவர்கள் எண்ணிக்கை முழுமை அடையாத நிலையில், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கொள்கை வழிகாட்டும் நெறியில் உள்ள 41ஆவது பிரிவின் படியும் மற்ற 45, 46 ஆவது பிரிவுகளின் படியும் கல்வி எழுத்தறிவு பெறப்பட வேண்டியது அடிப்படை உரிமையும் ஆகும்.

10 ஆண்டுகளில் இது நிறைவேற்றப்பட வேண்டும் என்றாலும் சட்ட வழிகாட்டும் நெறிமுறைப்படி இது பின்பற்றப் படாத நிலையே 50 ஆண்டுகளாக இருந்தது.

பிறகுதான் சில ஆண்டுகளுக்கு முன் இது ஆரம்பக் கல்வி கட்டாயமாக்கப்படும் வகையில் சட்டம் நாடாளுமன்றத்தில் முந்தைய அய்க்கிய முன்னணி அரசால் நிறைவேற்றப்பட்டதுடன் எழுதப்படிக்கத் தெரியாத மாணவர்கள் இல்லாத வகையில் செய்ய மாநில அரசுகள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகள் அல்லாதவற்றிலும் கட்டாயமாக சேர்ப்பதுடன் அவர்களுக்கு 25 விழுக்காடு இடம் தர  வற்புறுத்துவதோடு, அவர்களுக்கான கட்டணத்தை மாநில அரசு மூலம் மத்திய அரசே வழங்கும் என்று அறிவித்து, அது நடைமுறைப்படுத்தப்பட்டும், 100க்கு 100 எழுத்தறிவு - கேரளா - ஒரு மாநிலத்தைத் தவிர,  எந்த மாநிலத்திலும் நிறைவேறாத நிலையே உள்ளது.

கரும் பலகை, கழிவறை இல்லாத பள்ளிகள் இன்றும் உள்ளனவே!

பல கிராமப்புறப் பள்ளிகளிலும், அரசுப் பள்ளிகளிலும் சரியான கட்டடங்களோ, ஏன் கரும் பலகை, கழிப்பறை வசதிகள் கூட சரிவர இல்லாத ஆரம்பப்பள்ளி, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் நூற்றுக்கணக்கில் உள்ளனவே.

அதுமட்டுமல்ல 1966ஆம் ஆண்டு கோத்தாரி கமிஷன் பரிந்துரைப்படி, மாணவர் - ஆசிரியர் விகிதாச்சாரம் 30-1 வகுப்பு என்பதோ மற்ற அடிப்படைக் கட்டுமான வசதியோ இல் லாத நிலையே பல கிராமங்களில். இன்னமும் இந்நிலை உண்டு.

இந்த லட்சணத்தில், மாவட்டத்திற்கு ஒரு நவோதயா - 30 ஏக்கர் நிலத்தில் - நுழைத்தேர்வு நடத்தி - மாணவர் சேர்க்கை அதில் ஹிந்தியை மிகவும் தந்திரமாக எந்த மாநில அரசின் பாடத்திட்டத்தில் செய்ய முடியாதோ அதை ஒரு புதிய வர்க்கத்தினை உருவாக்கி செய்யும் திட்டமே நவோதயா பள்ளித்திட்டம்.

கட்சிகளுக்கு அப்பாற்பட்ட முறையில் கல்வி அறிஞர் நெ.து.சு. போன்ற கல்வியாளர்ககளின் கனிந்த அனுபவம், நமது தெளிவான அறிவுறுத்தல்கள் காரணமாகவே தமிழக அரசுகள் தொடர்ந்து நவோதயா பள்ளிகளுக்கு கதவு திறக்க இசைவு தர மறுத்து கொள்கை முடிவை எடுத்துப் பின்பற்றி வருகின்றன. அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடலாமா?

அதில் மூக்கை நுழைக்க உயர்நீதிமன்றத்தின் சில நீதிபதிகள் முயற்சித்து, 8 வாரங்களுக்குள் தடையில்லாச் சான்று வழங்க வேண்டும் என்று கட்டளை வழங்குவதும் தவறான - சட்ட விரோத தீர்ப்பு ஆகும்!

பல உச்சநீதிமன்ற தீர்ப்புகள் - அரசின் கொள்கை முடிவுகளில் நாங்கள் தலையிட முடியாது என்ற திட்டவட்டமாக உச்சநீதிமன்ற  தீர்ப்புகள் வழங்கியதை ஏனோ இந்த இரு நீதிபதிகள் கவனிக்கத் தவறி ராஜாவை (உச்சநீதிமன்றத்தை) மீறிய ராஜவிசுவாசிபோல் தீர்ப்பு வழங்கியுள்ளார்கள் என்பது அதிர்ச்சிக்கும், வியப்புக்கும் உரியதாகும்!
தமிழ்நாடு அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் இது கொள்கை முடிவு என்று சுட்டிக்காட்டியும் இருக்கிறார்!

இதனை எதிர்த்து மக்கள் இயக்கம் உருவாவது தவிர்க்க இயலாதது! முதல் அமைச்சராக செல்வி ஜெயலலிதா இருந்தபோது எடுக்கப்பட்ட கொள்கை முடிவுகளை தலைகீழாக மாற்ற அ.தி.மு.க.  அரசு முயலக் கூடாது? அ.தி.மு.க.வினர் பதில் கூறட்டும்!

தமிழ்நாடு அரசு என்ன செய்ய வேண்டும்?

உடனடியாக இதனைக் கண்டு தலையாட்டி விடாமல், உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதோடு, அழுத்தம் திருத்தமாக இது எங்கள் கொள்கை முடிவு, பல ஆண்டு காலமாகப் பின்பற்றிய திட்டவட்டக் கொள்கை என்று பிரதமருக்கும், மற்ற சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கும் உடனடியாக காலதாமதம் செய்யாமல் எழுதிட வேண்டும். 

மதுரைக் கிளையின் தீர்ப்புக்குத் தடையாணையை உச்சநீதிமன்றத்தில் பெற்றே தீரவேண்டும். இது கொள்கை முடிவு என்ற உச்சநீதிமன்ற பழைய தீர்ப்புகளையே அடிப்படையாகக் கொண்டு வாதிடல் வேண்டும், இது அவசரம்!நக்கீரன் 

கருத்துகள் இல்லை: