திங்கள், 11 செப்டம்பர், 2017

பிறந்த குழந்தை கீழே விழுந்து உயிரிழப்பு ! மருத்துவர்கள் அலட்சியம்:.. ஹைதராபாத்


ஹைதராபாத்தில் மருத்துவர்கள் அலட்சியத்தால் கர்ப்பிணி பெண் ஒருவர் பெஞ்சிலேயே குழந்தை பெற்று, அந்த குழந்தை கீழே விழுந்து இறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கம்மம் மாவட்டம் அருகே பல்லேகுடம் பகுதியைச் சேர்ந்தவர் நாகமணி. நேற்று (செப்டம்பர் 10) நாகமணிக்குப் பிரசவ வலி ஏற்பட்டதால், அவருடைய கணவர் கம்மம் அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்றுள்ளார்.ஆனால், பிரசவ தேதி அக்டோபர் 26ஆம் தேதிதான் என்பதால் தற்போது குழந்தை பிறக்க வாய்ப்பில்லை, மருத்துவமனையை விட்டுக் கிளம்புங்கள் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், வலி அதிகமாக இருந்ததால் நடக்க முடியாமல் நாகமணியை மருத்துவமனை வாசலில் போடப்பட்டிருந்த பெஞ்சில் அவரது உறவினர்கள் படுக்கவைத்தார்கள். இது குறித்து நாகமணியின் கணவர் மருத்துவர்களிடம் எடுத்துக் கூறியும், அவர்கள் எதையும் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. கடைசியில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், சிறிய பெஞ்ச் என்பதால் இடப்பற்றாக்குறையால் குழந்தை உருண்டு கீழே விழுந்ததில் பலத்த அடிபட்டது.

இதையடுத்து, நாகமணி போட்ட அலறல் சத்தத்தால் அந்த இடத்துக்கு வந்த மருத்துவர்கள் குழந்தையை எடுத்துச் சென்று, பரிசோதித்ததில் குழந்தை இறந்துவிட்டது தெரியவந்தது.
இது குறித்து கம்மம் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் மதன் சிங் கூறுகையில், அந்த பெண் எட்டு மாதத்திலேயே மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டுவரப்பட்டார். அதனால், குறைப்பிரசவத்தில்கூடக் குழந்தை பிறந்திருக்கலாம். ஒருவேளை, குழந்தை தாயின் வயிற்றிலேயே இறந்திருக்கலாம். இருப்பினும், அந்த பெண்ணைப் அனுமதிப்பதற்கும்,படுக்கை வசதி ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் தாமதம் ஏற்பட்டதை ஒப்புக்கொள்கிறோம். ஏனெனில், அவருக்குப் பிரசவம் பார்க்க வேண்டிய மருத்துவர், மற்றொரு அறுவை சிகிச்சையில் ஈடுபட்டிருந்தார். அதனால், அவரால் இந்தப் பெண்ணுக்குப் பிரசவம் பார்க்க முடியவில்லை. ஆனால், மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் இந்த சம்பவம் நடந்தது என நிரூபிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ள தெலங்கானா அமைச்சர் தும்மல நாகேஸ்வர ராவ், மருத்துவர்கள், நிர்வாகிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. minnambalam

கருத்துகள் இல்லை: