ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் நீட் தேர்வு என்ற அறிவிப்பு வெளிவந்தவுடன் முதலில் அதை எதிர்த்தது திமுக. நுழைவுத்தேர்வை ரத்து செய்து பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளில் தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை நிலை நாட்டி, சமூக நீதியைக் காப்பாற்றிய திமுக அரசு என்றைக்கும் நீட் தேர்வை ஆதரிக்காது என்பதை தம்பிதுரை போன்றவர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
அது மட்டுமின்றி ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இருந்த நேரத்திலேயே 18.7.2013 அன்று இந்த நீட் தேர்வு கொண்டு வரும் மருத்துவக் கவுன்சில் அறிவிக்கைகள் உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது என்பதும் தம்பிதுரைக்குத் தெரியவில்லை. அப்படி ரத்து செய்யப்பட்ட நீட்தேர்வைத்தான் இப்போது பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்துள்ளது என்பது கூட இவரது நினைவுக்கு வரவில்லை என்றால், முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா ஒரு முறை சொன்னது போல் திமுகவை மட்டும் விமர்சிக்கும் செலக்டிவ் அம்னெசியாவில் தம்பிதுரை சிக்கித் தவிக்கிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது.
உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட நீட் தேர்வை மீண்டும் கொண்டு வந்தது மத்தியில் உள்ள பாஜக அரசு என்பதை மறைப்பதற்காக திமுக மீது வீண்பழி போட்டு பாஜகவையும் காப்பாற்றுகிறார், அதிமுக ஆட்சியையும் காப்பாற்றுகிறார் என்றுதான் தோன்றுகிறது.
'பாஜகவின் புதிய செய்தி தொடர்பாளராக' மாறியிருக்கும் தம்பிதுரை நீட் தேர்வு குறித்த தகவல்களை தெரிந்து கொண்டு பேட்டி கொடுப்பது அவர் வகிக்கும் பதவிக்கு அழகு என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் ரத்து செய்யப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மீதான சீராய்வு மனு 21.1.2016 அன்று விசாரிக்கப்பட்டு, 16.3.2016 அன்று தீர்ப்புக்காக ஒத்தி வைக்கப்பட்டு, 11.4.2016 அன்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த காலகட்டங்களில் தமிழகத்தில் இருந்தது அதிமுக ஆட்சி. மத்தியில் இருப்பது பாஜக தலைமையிலான ஆட்சி என்பதை தம்பிதுரை தனது சுயநலத்திற்காக மறைக்கிறார்.
சீராய்வு மனுவின் விசாரணை முடிவதற்கு முன்பு திரும்பப் பெறப்பட்ட தீர்ப்பின் விளைவாகத்தான் இன்றைக்கு தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தப்பட்டு, அதில் பங்கேற்கச் சென்ற மாணவர்களின் முழுக் கை சட்டையை பிளேடு வைத்து வெட்டி, மாணவிகள் அணிந்திருந்த தோடுகளை கழற்றி அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் தேர்வு மையங்களில் நடைபெற்றுள்ளது. மாணவ மாணவிகளுக்கு இந்த அவமானங்கள் ஏற்பட்டது அதிமுக ஆட்சியில்தான் என்பதை தம்பிதுரையால் மறுக்க முடியுமா?
ஆகவே நீட் தேர்வை அவசர அவசரமாக புகுத்திய மத்திய பாஜக அரசையும், நீட் தேர்வு என்ற பெயரில் மாணவ மாணவிகளை துன்புறுத்தியவர்களை கண்டிக்காத அதிமுக அரசையும் எதிர்த்துப் பேசுவதற்கு நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரைக்கு துணிச்சலும் இல்லை. திராணியும் இல்லை. அதனால் நீட் தேர்வு விவகாரத்தில் திமுகவை வம்புக்கு இழுத்து ஒரு பேட்டி கொடுத்து விட்டுப் போயிருக்கிறார்.
தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று இரு மசோதாக்களை திமுகவும் ஆதரித்து சட்டப்பேரவையில் நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடாத தம்பிதுரை திமுக மீது குற்றம் சுமத்த துளிகூட தகுதியில்லாதவர்.
அதைவிட கொடுமையாக அந்த மசோதாக்கள் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கே உள்துறை அமைச்சகத்தில் இருந்த அனுப்பப்படவில்லை என்று தெரிந்த பிறகும் மக்களவை துணை சபாநாயகர் என்ற முறையில் உள்துறை அமைச்சரையோ, குடியரசுத் தலைவரையோ சந்தித்து நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல் பெற்றுக் கொடுக்க முயற்சிக்காதது அவர் வகிக்கும் மக்களவை துணை சபாநாயகர் பகுதிக்கு அழகல்ல என்பதைக் கூட அவர் உணர மறுக்கிறார்.
பிரதமரை சந்திக்கச் சென்று காத்திருந்து, அவரது அதிகாரிகளை மட்டும் சந்தித்தே பெரிய புண்ணியம் என்று மகழ்ச்சியடையும் தம்பிதுரை திமுகவை வீணாக வம்புக்கு இழுப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். யாருக்கு வேண்டுமானாலும் ஜால்ரா போடுங்கள். யாரிடம் வேண்டுமானாலும் மண்டியிடுங்கள். ஆனால் திமுகவை சீண்டிப் பார்க்காதீர்கள் என்று தம்பிதுரையை எச்சரிக்க விரும்புகிறேன்'' என்று தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக