திங்கள், 8 மே, 2017

வெளிநாடுகளில் உயர்தொழில் நுட்ப பணிபுரியும் இந்தியர்களில் தமிழர்கள்தான் அதிகம் கிராம பின்னணியில் உள்ளவர்கள்! .... பெரியார் பூமிடா!


இந்தியாவிலிருந்து உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தொழில்நுட்பத்துறையில் வேலை செய்பவர்களை கணக்கிலெடுத்துக்கொண்டால் வட இந்தியர்கள் மிகப்பெரும்பாலானோர் மாநகரங்கள் , உயர்தட்டு , உயர் மற்றும் ஆதிக்க சாதி பின்புலமுள்ளவர்களாக இருப்பார்கள் . ஒப்பு நோக்க தமிழகத்திலிருந்து மிக அதிக அளவில் கிராமப்புற , எளிய பின்புலம் என எல்லா மட்டங்களிலிருந்தும் வந்திருப்பார்கள் . ஒரு விவசாயியின் பிள்ளை , மீனவனின் பிள்ளை ஒரே எட்டில் அமெரிக்கவிலும் , சிங்கப்பூரிலும் தொழில்நுட்பதுறையில் வேலை செய்வதை பரவலாக காணமுடியும் .. காரணம் தமிழகத்தில் சமூக நீதியையும் கல்வியையும் மேலடுக்குக்கு மட்டுமல்லாது கீழிருந்து வளர்ச்சியை வென்றெடுக்க திராவிட இயக்கமும் பல்வேறு சமூக அமைப்புகளும் தொடர்ந்த முனைப்புகளின் பலனது .
அது போல மருத்துவம் பயில சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற நிலையிலிருந்து பல்வேறு படிகளைத் தாண்டி இந்தியாவின் முதல் பெண் மருத்துவ பட்டதாரியை அளித்தது உட்பட , இன்று பொது சுகாதாரத்தில் கேரளத்துக்கு இணையாக தமிழகம் நாட்டில் ஒப்பீட்டளவில் உயர் நிலையில் உள்ள மாநிலமாக திகழ்வதற்கும் .. மருத்துவம் கற்கும் வாய்ப்பு கிராமப்புற மாணவர்கள் உட்பட ஓரளவு அனைத்து வகையினரும் எட்டிப்பிடிக்கும் தூரத்தில் வைக்கப்பட்டு அதன் மூலம் மாநகரங்கள் தாண்டிய நகரங்கள் , கிராமங்கள் வரை பொது சுகாதார வசதிகளில் ஒப்பீட்டளவில் முன்னணி மாநிலமாக திகழ்ந்து வருகிறது .
எதையும் நொள்ளை மட்டும் சொல்லும் மிடில் கிளாஸ் மனநிலையிலிருந்து வெளியே நின்று இந்தியாவின் பல பாகங்களில் உள்ள பொது சுகாதார வசதிகளோடு தமிழகத்தை ஒப்பிட்டு பார்ப்பவர்களால் அதை உணர முடியும் . அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை மட்டுமல்லாது இலவச மருந்துக்கள் வழங்கப்படுவது மிகப்பெரும்பான்மையான மாநிலங்களில் கிடையாது என்பது நம்மில் பலருக்கு தெரியாது . சமூகத்தின் பல மட்டங்களிலிருந்து மருத்துவர்கள் வந்ததால் தான் தனியார் வாய்ப்புகளையும் தாண்டி பல மருத்துவர்கள் பொது சுகாதாரத் துறையில் நிலைத்து நிற்கிறார்கள் .
ஆக சுகாதாரத்துறையில் ஒரு inclusive வளர்ச்சியை நிரூபித்திருக்கிற ஒரு மாநிலத்தின் பொது சுகாதார கட்டமைப்பை சீர்குலைக்க uniformity என்ற பெயரில் இப்போது தமிழகத்தில் திணிக்கப்படுகிறது NEET . பொது நுழைவு என்ற பெயரில் இந்த மாநில பாடத்திட்டத்துக்கு மாறுபட்டு , கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களுக்கு எட்டாத பயிற்சி வகுப்புகள் மூலமே இந்த தேர்வுகளில் வெற்றியை ஈட்ட முடியும் என்ற நிலை உருவாக்கப்பட்டு அதன் மூலம் இதுவரை பன்முக சமூகங்கள் பங்கெடுத்து வந்த மருத்துவப் படிப்புகளில் அவர்கள் நுழைவதை கடினமாக்கியிருக்கிறது . அதோடு கிராமப்புறங்களில் பணிபுரியும் மருத்துவர்களின் மருத்துவ உயர்படிப்புக்கான இட ஒதுக்கீட்டையும் ரத்து செய்துள்ளனர் .
இதன் விளைவுகள் இதன் மூலம் வாய்ப்பு கிடைக்காத சில ஆயிரம் மாணவர்களை மட்டும் பாதிக்கும் விஷயம் என்ற குறுகிய கண்ணோட்டத்தில் , இதன் மூலம் எல்லோரையும் பாதிக்கப்போகும் தமிழக பொது சுகாதார கட்டமைப்பில் ஏற்படப்போகும் பின்விளைவுகள் குறித்து நமக்கு அக்கறை இல்லையெனில் நாம் அறிவார்ந்த சமூகமாக இருக்க முடியாது .
ஜல்லிக்கட்டு மட்டுமல்ல உணர்வு .. இவை போன்ற திணிப்புகளின் பின்புலத்தையும் பின்விளைவுகளையும் புரிந்து வினையாற்றுவதே உணர்வு .
நன்றி Joe milton.  முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை: