ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017

சசிகலா : அதிமுகவை பிளவு படுத்தவே ஆளுநர் காலதாமதம் செய்கிறார்

படம். | ம.பிரபு.
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென போர்க்கொடி தூக்கினார். இதனால், அக்கட்சியில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் நடந்து வருகின்றன. ஓபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சி நிர்வாகிகள், முன்னாள் எம்.பி., எம்எல்ஏக்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருவது கவனிக்கத்தக்கது. தமிழக அரசியல் சூழ்நிலை குறித்தும், சட்டம் - ஒழுங்கு நிலை குறித்தும் மத்திய அரசிடம் ஆளுநர் வித்யாசாகர் ராவ் 3 பக்க அறிக்கை தாக்கல் செய்ததாக நேற்றிரவு தகவல் வெளியானது. தொலைக்காட்சி செய்தி சேனல்களில் இதுதொடர்பாக செய்திகள் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், ஆளுநர் மாளிகை அந்தச் செய்தியை மறுத்துவிட்டதால், அரசியலில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது.
பிப்ரவரி 7-ம் தேதி இரவு முதல் தமிழக அரசியல் களம் பரபரப்பாகியுள்ள நிலையில் இன்று 5-வது நாளாகவும் பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. அவற்றின் தொகுப்பு:
;8.45 pm: பிளவு படுத்தவே காலதாமதம்: எம்.எல்.ஏ.க்களைச் சந்தித்த பிறகு சசிகலா பேட்டி


கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏ.க்களைச் சந்தித்து விட்டு போயஸ் தோட்டம் திரும்பிய வி.கே.சசிகலா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: ஆளுநர் கால தாமதம் செய்வது அதிமுகவை பிளவுபடுத்தும் ஒரு நடவடிக்கையாகவே எனக்கு எண்ணத் தோன்றுகிறது.

எம்.எல்.ஏ.க்களை சந்தித்த பிறகு அதிமுக குடும்ப உறுப்பினர்களை சந்தித்த திருப்தி ஏற்பட்டுள்ளது. அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மன உறுதியுடன் இருக்கிறார்கள்.

ஆளுநர் முடிவுக்காக இன்று வரை காத்திருந்தோம், நாளை முதல் எங்கள் போராட்டம் வேறு விதத்தில் இருக்கும், என்றார்.

அப்போது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த சசிகலா: ‘பொறுத்திருந்து பாருங்கள்’ என்றார்.

7.30 pm: முதல்வர் ஓபிஎஸ்-க்கு மேலும் ஒரு எம்.பி. ஆதரவு: திருப்பூர் எம்.பி., சத்தியபாமா ஆதரவு தெரிவித்தார். முதல்வருக்கு ஆதரவு தெரிவிக்கும் 4-வது எம்.பி. சத்தியபாமா என்பது குறிப்பிடத்தக்கது.
சத்தியபாமா கூறியதாவது: “முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது. ஜெயலலிதாவால் ஒதுக்கப்பட்டவர்களுக்கு அதிமுக-வில் பதவி தரப்படுகிறது. மக்கள் ஜெயலலிதாவுக்குத்தான் ஆதரவு அளித்தனர்.
ஜெயலலிதாவுக்கு ஈடு இணை யாரும் கிடையாது. யாரும் வரவும் முடியாது. ஜெயலலிதாவுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் சசிகலா நிறைவேற்றவில்லை.
ஜெயலலிதாவின் ஆதரவுடன் புதிய ஆட்சி அமையும்” என்றார்.
6.30 pm: தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் சுப்பிரமணியன் சுவாமி சந்திப்பு
தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை, கிண்டி ஆளுநர் மாளிகையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சந்தித்தார். தமிழக அரசியலில் நிலவும் சூழல் குறித்து ஆளுநருடன் ஆலோசனை செய்கிறார்.
6.28 pm: தமிழக மக்களின் நலன் காக்க தகுதி படைத்தவர் ஓபிஎஸ் மட்டுமே: பொன்னையன் பேச்சு
நல்ல தலைமையின் கீழ் அதிமுக இயங்க வேண்டும். தமிழக மக்களின் நலன் காக்க தகுதி படைத்தவர் ஓ.பன்னீர்செல்வம் மட்டுமே என்று அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் கூறினார். அதன் விவரம்: தமிழக மக்களின் நலன் காக்க தகுதி படைத்தவர் ஓபிஎஸ் மட்டுமே: பொன்னையன் பேச்சு
5.11 pm: பொறுப்பு முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் திடீர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
பொறுப்பு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்துக்கு வந்த அவரை, முதல்வரின் ஆதரவாளர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றுள்ளனர். அவர் அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேச உள்ளார்.
முன்னதாக சசிகலாவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் பதவி அளிக்கப்பட வேண்டும்; அவர் முதல்வராக பதவி ஏற்க வேண்டும் என்று முதல்முதலில் அதிமுகவில் குரல் எழுப்பியவர் பொன்னையன் என்பது நினைவுகூரத்தக்கது.
4.45 pm: சென்னை ஆளுநர் மாளிகையை சுற்றி, போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
4.33 pm: சென்னை வந்துள்ள பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
4.00 pm: கூவத்தூர் விடுதியில் தங்கியுள்ள அதிமுக எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா. tamilthehindu

கருத்துகள் இல்லை: