வெள்ளி, 17 பிப்ரவரி, 2017

மெரினா எழுச்சி : அடித்தாலும் அடங்காது இது வேறு தமிழ்நாடு.. தோழர் மருதையன்

மெரினா எழுச்சியின் அனுபவத் தொகுப்பு – தோழர் மருதையன்
ந்த மாபெரும் மக்கள் எழுச்சியை கண்ணால் பார்ப்பதற்காகவேனும் இன்னும் சில நாட்கள் ஜெயலலிதா வாழ்ந்திருக்கக் கூடாதா என்று தோன்றுகிறது. மெரினா எழுச்சியின் நாட்களில், ஜெயலலிதாவின் கல்லறை அங்கு இருப்பதை கடற்கரையே மறந்து விட்டது. “அம்மா இருந்திருந்தால் கிழித்திருப்பார்” என்று தொலைக்காட்சி விவாதத்தில் பேசுவதற்குக்கூட ஒரு அடிமையோ கைக்கூலியோ இல்லை. “தமிழகத்தின் சுக துக்கங்கள் அனைத்தையும் நிர்ணயிப்பது தான் மட்டுமே” என்றெண்ணி இறுமாந்திருந்த ஒரு சர்வாதிகாரி, குப்பையைப் போல தமிழ் மக்கள் தன்னை ஒதுக்கித் தள்ளியதைப் பார்க்காமலேயே போய் விட்டாரே என்று நினைக்கையில் கொஞ்சம் வருத்தமாக்தான் இருக்கிறது.
ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் இந்தப் போராட்டமே நடந்திருக்காது என்று கருதுவோர் உண்டு. ஏனென்றால், தன்னுடைய தைரியத்திலும் அறிவாற்றலிலும் கருணையிலும்தான் தமிழகம் பிழைத்திருப்பதைப் போன்ற தோற்றத்தை ஜெயலலிதா தொடர்ந்து ஏற்படுத்தி வந்தார். உண்மை அவ்வாறில்லை. கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் நடைபெற்ற மக்கள் போராட்டங்களில் சுமார் 25% தமிழகத்தில்தான் நடந்திருக்கின்றன. சென்ற ஆண்டு நடைபெற்ற டாஸ்மாக் எதிர்ப்பு மக்கள் கிளர்ச்சி என்பது சமீபத்திய சான்று.

இருப்பினும், ஈழம், காவிரி, முல்லைப் பெரியாறு, கூடங்குளம், மூவர் தூக்கு, கெயில், மீதேன் உள்ளிட்ட பிரச்சினைகள் அனைத்திலும், மக்கள் போராட்டத்தின் மீது ஜெயலலிதா சவாரி செய்தார். அப்போராட்டங்களின் புரவலராகத் தன்னைக் காட்டிக்கொண்டே அவற்றைச் சீர்குலைத்தார். இதனை ஆமோதித்துக் கூவுவதற்கு நத்திப் பிழைக்கும் கட்சிகளும் தலைவர்களும் இருந்த காரணத்தினால் இந்தப் பொய்மை உண்மையானது.
ஜெயலலிதாவை  “மாநில உரிமைப் போராளி”யாக சித்தரிப்பதன் வாயிலாக, பார்ப்பன-இந்து தேசியத்துக்கு எதிரான திராவிட இயக்க அரசியலை அடியறுப்பதும், தமிழ் மக்களை அடிமை மனநிலையிலேயே இருத்தி வைப்பதும் ஆளும் வர்க்கத்தினரின் நோக்கமாக இருந்தது. நெடுஞ்சாண் கிடையாக காலில் விழுந்து கிடக்கும் அ.தி.மு.க. அடிமைகள், வளைந்து நெளியும் அதிகார வர்க்கம், சுயமரியாதையற்ற ஊடகங்கள், இலவசத் திட்டங்கள், வாக்குகளை விற்கப் பயிற்றுவிக்கப்பட்ட வாக்காளர்கள் என்று எல்லாத் திசைகளிலிருந்தும் தமிழ்ச் சமூகத்தின் மனதில் அடிமை மனோபாவமும் திணிக்கப்பட்டது. இவையனைத்தையும் மீறி நடந்தவைதான் தமிழக மக்களின் போராட்டங்கள்.
அ.தி.மு.க. என்ற கொள்ளைக் கூட்டத்துக்கு எதிராகவும், மோடிக்கு எதிராகவும் கிளர்ந்தெழுவதற்கான காரணங்கள் தமிழ் மக்களுக்கு ஏராளமாக இருந்தன. எனினும், இந்த எதிர்வினையின் பரிமாணம் வியக்கத்தக்கது.  இது, தமிழ்ச் சமூகத்தின் உடல் முழுவதிலும் அட்ரீனலின் பொங்கிப் பாய்ந்ததைப் போன்றதொரு எழுச்சி! அடிமைத்தளையில் புழுங்கிக் கொண்டிருந்த சமூகம், தானே அறிந்திராத ஒரு கணத்தில் அதனை அறுத்தெறிந்து மேலெழும்பியது போன்றதொரு நிகழ்வு. தன்னிடம் இப்படி ஒரு உள்ளுறை ஆற்றல் இருப்பது கண்டு வியப்புற்ற சமூகம், இது நனவுதானா என்று தன்னைத்தானே கிள்ளிப்பார்த்து உறுதி செய்து கொண்ட ஒரு தருணம்.
போராட்டமென்றும் கொண்டாட்டமென்றும் பலவாறாக விளக்கப்படுகின்ற மெரினா எழுச்சி என்பது தனியொரு போராட்டமல்ல. இது ஒரு உணர்வெழுச்சித் தருணம். ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகத்தின் ஒரு மனநிலை (mood). ஒரு நீண்ட நிகழ்ச்சிப்போக்கில்தான் இந்த மனநிலையை வந்தடைந்திருக்கிறது தமிழகம். எனினும், வெடித்துக் கிளம்பாமல் குக்கர் குண்டு போல தமிழகத்தை அழுத்திக் கொண்டிருந்தது இரும்புப் பெண்மணியின் சர்வாதிகாரம். இரும்புக் குண்டு அகன்றிருக்கவில்லையெனில், மக்கள் போராட்டத்தால் அது அகற்றப்பட்டிருக்கும்.
000
ல்லிக்கட்டு என்பது, காவிரி, முல்லைப்பெரியாறு, கூடங்குளம், மீதேன், கெயில், ஜி.எஸ்.டி, நீட் போன்றவற்றோடு  ஒப்பிடுகையில், ஒரு ‘ஆபத்தில்லாத’ பண்பாட்டுக் கோரிக்கை. ஆளும் வர்க்கத்தினரே கூட அங்கீகரிக்கும் ஒரு கோரிக்கை. பீட்டா என்ற அரூபமான அந்நிய சக்தியை எதிரியாகக் காட்ட முடிவதாலும், கிறித்தவ என்.ஜி.ஓ. சதி என்று பேசுவதற்கான வாய்ப்பு இருப்பதாலும், மோடியின் காலைக் கையைப் பிடித்தாவது சாதித்துவிட இயலும் என்ற நம்பிக்கை இருந்ததனாலும் இக்கோரிக்கையைத் தமிழக பாரதிய ஜனதா தனது கையில் எடுத்துக் கொண்டது.
காவிரி போன்ற பல பிரச்சினைகளில் மோடி அரசு தமிழகத்துக்கு இழைத்த துரோகத்தை மறைப்பதற்கும், “இந்துப் பண்பாடு” எடுபடாத தமிழகத்தில், தன்னை தமிழ்ப் பண்பாட்டின் காவலனாகக் காட்டிக் கொள்வதற்கும் இதைவிட மலிவான வாய்ப்பு கிடைக்காது என்ற காரணத்தினால், “தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு என்று ஒன்று நடந்தால் அதன் பெருமை மோடியை மட்டுமே சாரும்” என்று அடித்துப் பேசிக்கொண்டிருந்தார் பொன்.ராதாகிருஷ்ணன். நடக்காமல் போனால் அதற்கும் மோடிதான் அடிவாங்க வேண்டியிருக்கும் என்று சிந்திப்பதற்கு, அதிக மூளை தேவையில்லை. என்றாலும் பொன்னார் அப்படி சிந்திக்கவில்லை. மற்ற கட்சிகளைப் பொறுத்தவரை வீரவசனம் பேசுவதற்குத் தோதான “அடையாளக் கோரிக்கை” என்பதால், வறட்சி, காவிரி முதலான பிரச்சினைகளைக் காட்டிலும் ஜல்லிக்கட்டு அவர்களது கைக்கு அடக்கமானதாக இருந்தது.
தமிழகமெங்கும் சுமார் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலைக்கும் அதிர்ச்சி மரணத்துக்கும் தள்ளப்பட்டு வந்த சூழலில், விவசாயத்தின் அழிவு, காவிரி உரிமை, நீர் மேலாண்மை, வறட்சி நிவாரணம் ஆகியவையே தமிழகத்தின் தலையாய பிரச்சினைகளாக இருந்தன. “உழவன் வீட்டில் இழவு – உனக்கும் எனக்கும் எதற்குப் பொங்கல்?” என்ற முழக்கத்துடன் பொங்கலை கருப்பு நாளாக கடைப்பிடிக்கும்படி அறைகூவல் விட்டிருந்தது “மக்கள் அதிகாரம்”.
இத்தகைய சூழ்நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டம் ஒப்பீட்டளவில் கையாள்வதற்கு எளியது என்று மத்திய, மாநில அரசுகள் கணக்குப் போட்டிருக்கலாம். மெரினாவில் கூட்டம் கூடவிடாமல் தொடக்கத்திலேயே அரசும் போலீசும் தடுக்காததற்கு சசிகலா – பன்னீர் அதிகாரப்போட்டி என்பது உள்ளிட்ட பல காரணங்கள் கூறப்படுகின்றன. இந்தப் போராட்டத்தை அதன் தொடக்க நாட்களில் அனுமதித்ததற்கும், பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கருதியதற்கும் ஆளும் வர்க்கத்திடமும் அதிகார வர்க்கத்திடமும் பல கணக்குகள் இருந்திருக்கும். பிடித்துவிட முடியும் என்ற நம்பிக்கையில்தான் காளையும் கூட அவிழ்த்து விடப்படுகிறது. எனினும், மெரினாவில் “காளை” தப்பிவிட்டது.
இதனைச் சாவி கொடுத்து இயக்கப்பட்ட போராட்டம் என்று புரிந்து கொள்வது அபத்தமானது. மக்களின் சீற்றத்துக்கான தூண்டுதல்கள்தான் போராட்டத்தின் நெம்புகோல்களாக இருந்தன. ஜல்லிக்கட்டு நடைபெறும் கிராமங்களில் காளை வளர்ப்போரிடமும் ஜல்லிக்கட்டு வீரர்களிடமும் போலீசு கெடுபிடி செய்தது. “மாடுகளை அவிழ்க்க மாட்டோம்” என்று எழுதி வாங்கியது. “மோடி அவசர சட்டம் கொண்டுவர வேண்டும்” என்று வீர விளையாட்டுக் குழு தலைவர்களும் கட்சிகளும்  வழக்கம்போல புலம்பினார்கள். ஆனால், அவசரச் சட்டத்துக்காக வழக்கம்போல மக்கள் காத்திருக்கவில்லை என்பதுதான் மாறிவிட்ட புதிய நிலைமைக்கு அறிகுறியாக இருந்தது.
மடிப்புக் கலையாத வெள்ளுடையுடன், வெயில் படாத ஷாமியானாக்களின் கீழ், வரிசை குலையாத நாற்காலிகளில் அமர்ந்து கட்சிக்காரர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்க, எல்லா இடங்களிலும் தடையை மீறி மக்கள் நடத்திய ஜல்லிக்கட்டுகள் தமிழகமெங்கும் புழுதி கிளப்பின. குறிப்பிட்ட வட்டாரத்தில் மட்டுமே நடத்தப்பட்டு வந்த ஜல்லிக்கட்டு, அதன் உண்மையான பொருளில், தமிழகம் முழுவதன் கோரிக்கையாக உருவெடுத்து விட்டது. சேலத்திலும் மதுரையிலும் ரயிலைப் பிணையக் கைதியாகப் பிடித்தார்கள் மாணவர்கள். ஜல்லிக்கட்டு டில்லிக்கட்டாக மாறத் தொடங்கிவிட்டது.
000
“விவசாயிகள் துயரத்துக்காகப் போராடாத தமிழ்ச்சமூகம் ஜல்லிக்கட்டுக்காகப் போராடும்போது அதனை ஆதரிப்பதா?” என்றொரு கேள்வி இதனையொட்டி எழுப்பப்படுகிறது. ஒரு பிரச்சினையை மற்றொன்றுடன் எதிர்நிலைப்படுத்தி ஒப்பீடு செய்து எடை போட்டுப் பார்க்கும் இந்தப் பார்வை, பல சந்தர்ப்பங்களில் அறிவியல் வகைப்பட்ட அணுகுமுறையாக இருப்பதில்லை.
சாதி, மதம், மொழி, இனம், பாலினம், வர்க்கம் – எனப் பலவாறாகப் பிளவு பட்டுள்ள இந்திய சமூகத்தில், ஒன்றைப் பேசும்போது “இன்னொன்றை ஏன் பேசவில்லை” என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்கவியலாது. இது, இந்தச் சாதிய சமூகத்தில் நாம் எதிர்கொள்ளும் ஒரு கசப்பான எதார்த்தம். ஒன்றின் வழியாக இன்னொன்றிற்கு மக்களை எப்படி இட்டுச் செல்வது என்ற கோணத்தில்தான் இதற்கு நாம் விடை காண வேண்டும்.
இதனை வேறு ஒரு கோணத்தில் பார்ப்போம். அரசு, போலீசு, நீதிமன்றம், கட்சிகள் என்று பல்வேறு முனைகளிலும் வெவ்வேறு விதமாகத் தாக்கப்படும் மக்கள் குமுறிக் கொண்டுதானிருக்கிறார்கள். காவிரி உள்ளிட்ட பிரச்சினைகளில் தமிழகம் வஞ்சிக்கப்படுவதால் மோடி மீது வெறுப்பும் கொண்டிருக்கிறார்கள். பண மதிப்பழிப்பு காரணமாக ஆத்திரமடைந்திருக்கிறார்கள். இவை ஒவ்வொன்றுக்காகவும் சிலர் போராடுகிறார்கள், பலர் போராடாமல் இருக்கிறார்கள்.
இப்பிரச்சினைகள் அனைத்துக்குமான காரணத்தை ஒருங்கிணைந்த முறையில் புரிந்து கொள்ள முடிந்தவர்கள், இவை அனைத்துக்குமான அரசியல் தீர்வு குறித்து சிந்திக்கிறார்கள். பெரும்பான்மை மக்கள் அவ்வாறு அறிவுபூர்வமாக ஆய்வு செய்வதில்லை. இருப்பினும், அவர்களுடைய மனதில் குமுறிக் கொண்டிருக்கும் கோபம், அவர்களுடைய அரசியல் உணர்வுக்குப் பொருத்தமான பிரச்சினையில், பொருத்தமான தருணத்தில் கருத்தாய் உருவெடுக்கிறது. போராட்டமும் பொருத்தமானதொரு வடிவத்தை எடுக்கிறது.
வாழ்க்கையிலும் இது இப்படித்தான் தொழிற்படுகிறது. ஒரு பெண் மணவிலக்கு என்ற முடிவுக்கு வருவதற்கான குறிப்பிட்ட சம்பவத்தைத் தனியே எடுத்துக்கொண்டு ஆராய்ந்தால், அது அற்பமானதாகத் தோன்றக்கூடும். ஆனால் அது “அச்சை முறிக்கின்ற மயிற்பீலி” யாக இருக்கும். இதய நோயாளியாக அறியப்பட்ட ஒருவரது மரணம் மாரடைப்பினால்தான் நிகழவேண்டும் என்று எதிர்பார்ப்பது அறிவுபூர்வமானதல்ல. ஒரு சாதாரணக் காய்ச்சல் கூட அந்த நோயாளியின் மரணத்திற்கான பாதையைத் திறந்து விடலாம்.
2013-இல் வங்கதேசத்தில் இசுலாமிய அடிப்படைவாதத்துக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த “ஷாபாக் எழுச்சி”யை எடுத்துக் கொள்வோம். அங்கே அடிப்படைவாதிகளின் அட்டகாசம் தொடங்கி வெகுகாலம் ஆகிவிட்டது. பல பகுத்தறிவாளர்கள் “கேட்பாரின்றி” கொல்லப்பட்டிருக்கிறார்கள். இருப்பினும், இந்த அநீதியைக் “கேட்பார்” வருவதற்கு ஒரு அழைப்பு தேவைப்பட்டது. பகுத்தறிவாளர்கள் விடுத்த அழைப்புக்கு மக்கள் வரவில்லை. 1971-இல் பாக். இராணுவத்துடன் சேர்ந்து வங்க மக்களுக்கு எதிரான இனப்படுகொலையை நடத்திய ஜமாத் ஏ இசுலாமி அமைப்பின் தலைவன் அப்துல் காதர் முல்லாவுக்கு தூக்கு தண்டனை கிடைக்கும் என்று நாடே எதிர்பார்த்தது.  ஆனால் அவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவுடனே, போலீஸ் வேனில் இருந்தபடி “வெற்றி” என்று அலட்சியமாக இரண்டு விரல்களைக் காட்டினான் அந்தக் கிழவன். அடுத்த கணமே ஷாபாக் மக்கள் எழுச்சி தொடங்கியது.
“நம் ஊரில், நம்முடைய மாட்டை வைத்து மாடு பிடி நடத்தக் கூடாது என்று உத்தரவு போடுவதற்கு மோடி யார்?” என்ற கோபம், தமிழகத்தின் ஒரு சாதாரணக் குடிமகனுக்கு ஏற்பட்ட உணர்வு. இந்தக் கோபத்தைக் கொஞ்சம் உரசிப் பார்த்தால் அதன் அடித்தளத்தைப் புரிந்து கொள்ள முடியும்.
காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு, மீதேன், கூடங்குளம், கெயில், நியூட்ரினோ, நீட் தேர்வு, சி.பி.எஸ்.இ. திணிப்பு, இந்தி-சமஸ்கிருத திணிப்பு, மீனவர் பிரச்சினை – என டில்லிக்கு எதிராக ஆத்திரம் கொள்வதற்கான நியாயம் எல்லாத் தரப்பு மக்களிடமும் இருந்தது. பண மதிப்பழிப்பு தோற்றுவித்த பேரழிவும், பொங்கல் விடுமுறைப் பிரச்சினையும் மோடியின் மீது தாங்கொணாக் கோபத்தை ஏற்படுத்தியிருந்தது. போதாக்குறைக்கு “மோடி பொங்கல், மோடி ஜல்லிக்கட்டு” என்று, வாயால் வடை சுடுபவரான மோடிக்கு, தன் வாயாலேயே குழி வெட்டி வைத்திருந்தார் பொன்னார்.
000
மிழகம் எனும் கோட்டைக்குள் நுழைவதற்கு ஜல்லிக்கட்டு விவகாரத்தை ஒரு “டிரோஜன் காளை”யாகப் பயன்படுத்த முனைந்தது பாரதிய ஜனதா. ஆனால், இந்த டிரோஜன் காளைக்குள்ளிருந்து குதித்துக் கிளம்பிய முழக்கங்கள் மோடியையும், இந்து தேசியத்தையும் மட்டுமின்றி, பன்னாட்டு நிறுவனங்களையும் ஓட்டுக் கட்சிகளையும் நீதிமன்றத்தையும் அதிகார வர்க்கத்தையும் தாக்கின.
“தமிழன்டா” என்ற முழக்கம், டில்லிக்கு எதிரான முழக்கமாக, தமிழ்ப் பெருமிதத்தின் வெளிப்பாடாக, இந்த அரசதிகாரத்தின் மீதான இளைஞர்களின் வெறுப்பாக … என்று ஒரே நேரத்தில் பலவிதமான அர்த்தங்களைக் கொடுத்தது. எனினும், எல்லா அர்த்தங்களும் சங்கப் பரிவாரத்துக்கு மட்டும் அனர்த்தமாகவே இருந்தது. புரட்சிகர – ஜனநாயக அமைப்புகளும் தமிழுணர்வாளர்களும் பகுத்தறிவாளர்களும் விதைத்த விதைகள் மெரினாவின் மணற்பரப்பில் அங்கொன்றும் இங்கொன்றுமாக முளைக்கத் தொடங்கி, யாரும் எதிர்பார்த்திராதவொரு கணத்தில் திரும்பிய திசையெல்லாம் சில்லென்று பூத்தன.
முகநூல்கள் “முகமற்ற” நூல்களாயின. தன்னை முன்நிறுத்துவதற்காக முன்தள்ளப்பட்ட சமூக ஊடக வடிவங்கள், சமூக உள்ளடக்கத்தை முன்நிறுத்தின. தனக்கான நுகர்பொருளைத் தேடித் தெரிவு செய்ய அலைபாய்ந்தவர்கள், “தமக்கான” முழக்கங்களிலிருந்து “தனக்கான” முழக்கமொன்றைத் தெரிவு செய்து கையில் ஏந்துவதற்காக அலைபாய்ந்தார்கள். தனி மனிதன் பெருந்திரளில் கரைவதும்,  தன்னைத் தனித்து அடையாளப்படுத்திக் கொள்வதும் முயங்கிக் கலந்த விசித்திரத் தருணமாய் விரிந்திருந்தது கடற்கரை.
எந்தப் பாடலுக்காக கோவன் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டாரோ, அந்த “ஊருக்கு ஊரு சாராயம்” என்ற பாடலை மெரினா கடற்கரை மேடையில் மீண்டும் மீண்டும் பாடச் சொன்னார்கள் மக்கள்.  தனியார்மயத்துக்கும் இந்து மதவெறிக்கும் பெப்சி-கோக்குக்கும் எதிரான பாடல்களைக் கொண்டாடினார்கள். பன்னீர், சசிகலா, சு.சாமி, மோடி போன்றோரை எள்ளி நகையாடும் பாடல்களுக்கு சன்னதம் கொண்டவர்கள் போல் ஆடினார்கள். “ஜல்லிக்கட்டு பிரச்சினையைத் தவிர மற்றவற்றைப் பேசக்கூடாது” என்ற கருத்தை கேள்விக்குள்ளாக்கி, தோழர் ராஜு (மக்கள் அதிகாரம்) ஆற்றிய உரையைக் கூர்ந்து கவனித்தார்கள். எண்ணற்றோர் பேச வாய்ப்பு கேட்டு பொறுமையாகக் காத்திருந்தார்கள். மெரினாவெங்கும் இதுவரை மேடையேறாதவர்கள் ஏறினார்கள் என்று கூறலாம். மேடை என்பதே அகன்றது என்றும் கூறலாம்.
“யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் பேச முடிந்தவரை பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த காட்சி கண் கொள்ளாக் காட்சி. நாடகக் கூடங்களில், பள்ளிகளில், சோவியத் கூட்ட மண்டபங்களில், தொழிற்சங்கங்களில், ரயில்களில், டிராம்களில் எங்கும் பேச்சுப் பெருவெள்ளம், விவாதம்” .. என்று 1917 ரசிய நவம்பர் புரட்சியின் “உலகைக் குலுக்கிய பத்து நாட்களை” பரவசத்துடன் விவரிப்பார் ஜான் ரீடு. ஒரு நூற்றாண்டுக்குப் பின் மெரினாவில் அது நிகழ்ந்தது.
இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் பிரிட்டனிலும் அது நிகழ்ந்திருக்கிறது. திருச்சபைக்கு எதிராக பிரிட்டிஷ் தொழிலாளி வர்க்கம் நடத்திய போராட்டத்தை மார்க்ஸ் விவரிக்கிறார்.
தொழிலாளி வர்க்கத்தின் மீது கிறித்தவ நல்லொழுக்கத்தை நிலைநாட்டும் பொருட்டு 1855-இல் பிரிட்டிஷ் அரசு கொண்டு வந்த சட்டம், ஞாயிற்றுக் கிழமைகளில் பொழுதுபோக்கு கூடங்கள், பீர் விடுதிகள் அனைத்தையும் மூடுவதாக அறிவித்தது. இதற்கெதிராக பல்லாயிரக் கணக்கான தொழிலாளிகள் நடத்திய போராட்டம், மாட்சிமை தங்கிய மகாராணியையும் திருச்சபையையும் எள்ளி நகையாடியதையும், அந்தப் பேரணியில் திரண்ட தொழிலாளர்கள் கிளப்பிய ஊளைச் சத்தம், விசில், கூச்சல்களையும் களிப்புடன் விவரிக்கிறார் மார்க்ஸ். அந்தக் கிளர்ச்சியை “அநாகரிகமானது, அவமானகரமானது, சட்ட விரோதமானது, ஆபத்தானது” என்றெல்லாம் சாடி எழுதிய பிரபுக்குல எழுத்தாளரையும் எள்ளி நகையாடுகிறார். மோடியின் சூப்பர்மேன் பிம்பத்தில் ஊசியைக் குத்திய மாணவர்களின் முழக்கங்கள், மோடியின் “கடி” டயலாக்குகளால் புண்பட்டு நொந்திருந்த மக்களுக்கு இதமாக அமைந்தன.
மாபெரும் மக்கள் எழுச்சிகள் கொண்டாட்டமாக, போராட்டமாக, கல்விக்கூடமாக … அனைத்துமாகவும்தான் பரிணமிக்கின்றன. தேச எல்லைகளும் நூற்றாண்டுகளும் கடந்து அவற்றிடையே தெரியும் ஒற்றுமை நம்மை கர்வம் கொள்ள வைக்கிறது. எதிரிகளின் எதிர்வினையும் கூட அதிசயிக்கத்தக்க விதத்தில் ஒத்ததாகவே இருக்கிறது.
பேரணியில் சென்ற தொழிலாளிகளுக்கு தேவனின் ஆசீர்வாதத்தை வழங்கும் பொருட்டு, குதிரை வண்டியில் சென்று கொண்டிருந்த ஒரு சீமாட்டி பைபிள் புத்தகங்களை விநியோகித்ததாகவும், “அதை உன் குதிரைக்குக் கொடு” என்று தொழிலாளிகள் கூச்சலிட்டதாகவும் எழுதுகிறார் மார்க்ஸ். மெரினாவிலும் கூட கூட்டத்தினர் மத்தியில் தேசியக் கொடியைக் கொண்டு வந்து ஆட்டினார்கள் ஆர்.எஸ்.எஸ். காரர்கள். அது யாருக்கும் தேசபக்தியை உருவாக்கவில்லை. மாறாக, தேசியக் கொடிக்கு எதிரான ஆத்திரத்தையே உருவாக்கியது.
கருப்பு சட்டையை எதிர்ப்பின் குறியீடாகத்தான் போராடியவர்கள் அணிந்திருந்தனர். ஆனால் பா.ஜ.க.வுக்கு அது “பெரியார் கலராக” தெரிந்திருக்கிறது. கடற்கரை முழுதும் செல்பேசி ஒளியை அசைத்தது போல, குடியரசு தினத்தன்று இந்தக் கூட்டம் சட்டையைக் கழற்றி “இருட்டை” அசைத்தால், தெற்கே ஒரு காஷ்மீர் உருவான தோற்றம் ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சிய பா.ஜ.க. வினர், போலீசு வெறியாட்டத்தைக் கட்டவிழ்த்து விட்டு, குடியரசு தினப் புறக்கணிப்பில் தமிழகம் காஷ்மீரை விஞ்சுமாறு செய்தனர்.
000
தான் மட்டும் இல்லாவிட்டால் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து நாடே செயலற்று நின்றுவிடும் என்று கருதிக் கொண்டிருந்த போலீசையும் அரசு எந்திரத்தையும் மெரினா போராட்டம் நிலைகுலைய வைத்தது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது, உணவு-தண்ணீர் விநியோகம், துப்புரவுப் பணி உள்ளிட்ட அனைத்தையும் முன்வந்து செய்தார்கள் இளைஞர்கள். அவர்களில் கணிசமானோர் பெண்கள். இதுநாள்வரை “தவிர்க்க இயலாதவர்கள்” என்று தாங்களே நம்பிக்கொண்டிருந்த போலீசார் தேவையற்றவர்கள் என்பதை மக்கள் தம் அனுபவத்தில் உணர்ந்தார்கள். அநேகமாக மெரினாவில் மைக்கைப் பிடித்த அனைவரும் பலத்த கைதட்டல்களுக்கிடையே இந்த உண்மையை உரைத்தார்கள். இனம்புரியாத ஒரு கர்வம் மக்களைப் பற்றிக்கொண்டு விட்டது. சமூகத்தின் மீது ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு தாங்கள் தவிர்க்கவியலாதவர்கள் என்று நிரூபிக்கும் வெறியை இது போலீசாரிடம் தோற்றுவித்திருக்க வேண்டும்.
சினிமாக் கழிசடைகளால் சிதைக்கப்பட்ட ஆண்-பெண் உறவின் மாண்பை மெரினா மீட்டது. நள்ளிரவிலும் பெண்கள் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்தனர். பேசினர், பாடினர், ஆடினர். பறை இசையின் தாள கதிக்கு ஆண்களும் பெண்களும் ஆடிக்கொண்டிருக்க, அந்தச் சூழ்நிலையால் உந்தப்பட்ட பர்தா அணிந்த ஒரு இசுலாமியப் பெண், தன் கணவனின் கையைப் பற்றியபடியே வெட்கத்துடன் மெல்ல நடனமாடிய காட்சி மறக்கவொண்ணாதது. எந்த இசைக்கருவியை தீண்டாமைக்குரிய குறியீடாக பார்ப்பனியம் ஒதுக்கி வைத்திருந்ததோ, அந்தப் பறையின் தாளத்துக்கு தமிழ்ச் சமூகமே தன்னை மனப்பூர்வமாக ஒப்புக்கொடுத்தது.
ஒரு மக்கள் திரள் எழுச்சி இயல்பிலேயே சுயநல மறுப்பைத் தனது பண்பாடாக்கிக் கொள்கிறது. “சுயநலன் பேணுதல்தான் மனிதனின் மாற்றவொண்ணாத இயல்பு” என்கிற முதலாளித்துவக் கருத்து, மக்கள் மனதிலிருந்து நழுவி மெரினாவில் மணற்பரப்பில் வீழ்ந்து மிதிபட்டுக் கொண்டிருந்தது. தம்மால் இயன்ற அளவு உணவோ தேநீரோ தண்ணீரோ பழங்களோ கொண்டு வந்து, சொந்தப் பிள்ளைகளுக்குக் கொடுப்பதைப் போன்ற வாஞ்சையுடன் முகம் தெரியாத அந்தக் கூட்டத்துக்கு விநியோகித்து விட்டு, நன்றி என்ற ஒரு சொல்லைக்கூட எதிர்பார்க்காமல் சென்று கொண்டிருந்தார்கள் பல எளிய மனிதர்கள்.
கையிலிருந்த உணவுப் பொட்டலங்களை உணவு கிடைக்காதவர்களின் கையில் திணித்து விட்டுச் சென்று கொண்டிருந்தார்கள் சில மாணவர்கள். “புகல்வேன் உடைமை மக்களுக்குப் பொது, புவியை நடத்து, பொதுவில் நடத்து” என்று ஆணையிட்ட பாரதிதாசனின் சிலைக்குக் கீழே, யாரோ குவித்திருந்த  வாழைப்பழங்களையும் தண்ணீர் பாக்கெட்டுகளையும் பார்த்தபடியே பலர் கடந்து சென்றனர். தேவைப்படாதவர்கள் நெருங்கவில்லை. தேவைப்படுவோர் தேவைக்கு மேல் ஒன்றைக் கூட எடுக்கவில்லை.
“பாரடா உனது மானிடப் பரப்பை” என்ற பாரதிதாசனின் கவிதை வரிகள் மேடையில் இசைக்கப்பட்டபோது, அடிமை மனநிலையை உதிர்த்திருந்த தமிழகம், கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒளிர்ந்த கைபேசி விளக்குகளால் “மேதினிக்கு ஒளி” செய்து கொண்டிருந்தது. ஜனநாயகத்துக்கான மக்கள் திரள் போராட்டம், பல பத்தாண்டு கருத்துப் பிரச்சாரம் சாதிக்க முடியாதவற்றைச் சாதிக்கும். புதிய மனிதர்களையும் புதிய விழுமியங்களையும் உருவாக்கும் என்ற உண்மையை மெரினா நிரூபித்தது. மீனவர்களும், குடிசைவாழ் மக்களும், அலங்காநல்லூரின் விவசாயிகளும் தோழமைக்கும் வீரத்துக்கும் புதிய இலக்கணத்தை தமிழ்ச் சமூகத்திற்கு அறியத் தந்தார்கள்.
நாட்டைப் பிளவுபடுத்துவதற்கான குறியீடாக மாட்டைப் பயன்படுத்தியது சங்க பரிவாரம். சமூகத்தை ஒன்றுபடுத்துவதற்கான குறியீடாக மாட்டை நிறுத்தியது தமிழ் மக்களின் ஜல்லிக்கட்டு போராட்டம். “உன் கோமாதாவுக்கு எதிராகக் எங்களது காளை. உன் வழிபாட்டுக்கு எதிராக எங்களது விளையாட்டு. உன் ஆதிக்கத்துக்கு எதிராக எங்கள் சகோதரத்துவம்!” – இதுதான் தமிழகம் விடுத்த செய்தி.
000
“கலைந்து செல்லுங்கள்!” என்று கூறியவுடனே மக்கள் கூட்டம் கலைந்து சென்றுவிடும் என்று அரசு எண்ணியது. “முடியாது!” என்று சொன்னவர்கள் “தீவிரவாத, பிரிவினைவாத” அமைப்பினராக இருந்திருந்தால் போலீசார் அதிர்ச்சியடைந்திருக்க மாட்டார்கள். ஆனால், “சட்ட நகலைக் காட்டு; படித்துப் பார்த்துவிட்டு சொல்கிறோம்!” என்ற பதில் காக்காய் கூட்டம் என்று அவர்கள் கருதியிருந்த மக்களிடமிருந்து வந்தது. தங்களுடைய அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்கும் தைரியம் மக்களுக்கு வந்துவிட்டது என்ற எதார்த்தத்தை போலீசால் சீரணிக்க முடியவில்லை.
மோடி அரசின் ஆணவம், உச்ச நீதிமன்றத்தின் அலட்சியம், மாநில அரசின் கையாலாகாத்தனம் ஆகிய அனைத்தையும் பல்வேறு பிரச்சினைகளில் மக்கள் கண்டிருக்கிறார்கள். இந்தப் பட்டறிவு தோற்றுவித்த உள்ளுணர்வுதான் “நம்பாதே” என்று அவர்களை எச்சரித்தது. கடலை நோக்கிச் சென்ற சில ஆயிரம் மக்களை ஒரு குழுவோ, சில குழுவினரோ தலைமை தாங்கி அழைத்துச் செல்லவில்லை. இந்த அரசின் மீதான நம்பிக்கையின்மைதான் அவர்களுக்குத் தலைமை தாங்கியது. இந்த உண்மையைக் காண விரும்பாத ஊடக அறிவாளிகள் சதிக் கோட்பாடுகளைக் கண்டுபிடித்துப் பரப்புகிறார்கள்.
ஊடக வித்தகர்கள், போலீசு அதிகாரிகள், சங்க பரிவாரத்தினர் மற்றும் ஆதி – லாரன்சு போன்ற மொக்கைகள் – இவர்களுடைய மூளைகள் வியக்கத்தக்க விதத்தில் ஒரே மாதிரியாக இயங்குகின்றன. “தங்களது ரசிகர்களின் அறிவு தங்களுடையதைவிட மேம்பட்டதாக உயர முடியாது” என்று ஆதியும் ஆர்.ஜே. பாலாஜியும் கருதியிருப்பார்கள். அவர்கள் அரசின் கூற்றை நம்பச் சொன்னார்கள். மாணவர்களோ நம்ப மறுத்து அவர்களை விரட்டினார்கள். ஒரே வாரத்தில் தாங்கள் செல்லாக்காசாக்கப்பட்டதற்குப் பின்னால் யாரேனும் சதி செய்திருக்க வேண்டும் என்பது அவர்கள் கற்பித்துக் கொண்ட நியாயம்.
ஊடக அறிவாளிகளின் கோணமும் ஏறத்தாழ இதுதான். அன்றாடம் அரசியலில் உழலும் தாங்களே “வயிற்றால் சிந்திப்பவர்களாக” இருக்கையில், வெறும் ஒரு வார காலம் மட்டுமே அரசியலுக்கு அறிமுகமான நடுத்தர வர்க்கத்தினர் தம்மைவிட மேம்பட்ட முறையில் எங்ஙனம் சிந்திக்க இயலும்? சதிகாரர்கள்தான் மூளைச்சலவை செய்து அவர்களை தைரியசாலிகளாக மாற்றியிருக்க வேண்டும் என்பது ஊடக வித்தகர்கள் கற்பித்துக் கொண்ட நியாயமாக இருந்திருக்கும்.
பா.ஜ.க.வினரைப் பொருத்தவரை, மோடியைத் தமிழகமே கழுவி ஊற்றியது என்ற உண்மையை அவர்கள் மறைக்கவும் மறக்கவும் விரும்பினார்கள். “தேசவிரோதிகளின் சதி” என்று கூச்சலிட்டதன் வாயிலாகத் “தீவிரவாதிகளையும் பிரிவினைவாதிகளையும்” ஒடுக்குவதற்கான முகாந்திரத்தை உருவாக்கியது மட்டுமல்ல, “மோடியை கழுவி ஊற்றியது தமிழக மக்கள் அல்ல, தீவிரவாதிகள்தான்” என்று இருட்டில் தனியே வழி நடப்பவனைப் போல தமக்குத்தாமே சத்தமாகப் பாடிக் கொண்டார்கள்.
போலீசையும் உளவுத்துறையையும் பொருத்தவரை “தீவிரவாதிகளுக்கு மட்டுமே உரியது” என்று அவர்கள் கருதுகின்ற அரசியல் முழக்கங்களை இலட்சோப லட்சம் தமிழ் மக்களும் தம் சொந்த முழக்கமாக எடுத்துக் கொண்டதை அவர்களால் நம்ப முடியவில்லை. “போலீசின் அதிகாரத்தை மக்கள் நிராகரிக்கிறார்கள்” என்ற எதார்த்தத்திற்கு அவர்களால் முகம் கொடுக்கவும் இயலவில்லை. அவர்களுக்கும் “தீவிரவாதிகளின் சதி” தேவைப்பட்டது.
இது தோல்வியடைந்துவிட்ட, அதே நேரத்தில் அதை ஒப்புக் கொள்ள மறுக்கின்ற ஆளும் வர்க்கத்தின் உளவியல். மெரினாவில் மக்கள் புரட்சிக்காரர்களாக போராட்டக் களத்துக்கு வரவில்லை. அந்த மாபெரும் மக்கள் திரளுக்கு யாரோ சில புரட்சிக்காரர்கள் தலைமை தாங்கி வழிநடத்தவும் இல்லை. டில்லியின் மீதான வெறுப்பும், இந்த அரசமைப்பின் மீதான அவநம்பிக்கையும்தான் மக்களை வழிநடத்தியது. அவர்களில் பலருக்கு இந்த அரசமைப்பின் மீது மிச்சமிருந்த நம்பிக்கையையும் தகர்க்கும் பொறுப்பை போலீசு ஏற்றுக்கொண்டது. “பல சந்தர்ப்பங்களில் போலீசுதான் தொழிலாளி வர்க்கத்தை அரசியல் படுத்துகிறது” என்பார் லெனின்.

சென்னை-மெரினாவில் நடந்த குடியரசு தின அணிவகுப்பு சீந்துவாரின்றி முடிந்தது.
அது உண்மைதான். எனினும், அவநம்பிக்கையும் எதிர்மறை அனுபவங்களும் மட்டுமே சமூக மாற்றத்துக்கான தூண்டுதல்களாகிவிடுவதில்லை. அவற்றிலிருந்து நேர்மறையான கண்ணோட்டங்கள் தானாகவே பிறந்து விடுவதுமில்லை. சில நேரங்களில் இவை கிளர்ச்சி மனோபாவத்தைத் தூண்டுகின்றன என்ற போதிலும், பல நேரங்களில் சோர்வடைந்து நிலவுகின்ற அரசமைப்பிடம் தஞ்சமடைகின்றன.
நிலவுகின்ற அமைப்பில் தங்களுடைய நிலை குறித்து ஒவ்வொரு பிரிவு மக்களும் – ஒரு விவசாயி, மாணவன், மீனவன், ஐ.டி. ஊழியன், தொழிலாளி – வெறுப்பு கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மை. அத்தகையதொரு வெறுப்புதான் ஜல்லிக்கட்டுக்குத் தொடர்பற்றவர்களையும் மெரினாவை நோக்கி ஈர்த்திருக்கிறது. மேலோட்டமானதொரு பார்வையில் இந்த வெறுப்பு, அரசமைப்புக்கு எதிரான வெறுப்பு போன்றதொரு தோற்றத்தைத் தரக்கூடும். அது தோற்றம் மட்டுமே.
மெரினாவின் உணர்வெழுச்சி என்பது தமிழ்ச் சமூகத்தின் ஒரு மனநிலை. மனநிலைகளைச் சார்ந்து ஒரு தனிமனிதனால் கூடத் தன் வாழ்க்கையின் திசையை நிர்ணயித்துக் கொள்ளவியலாது எனும்போது, சமூக மாற்றத்திற்கு “மனநிலை”யை எந்த அளவிற்கு சார்ந்திருக்க முடியும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.
மெரினாவின் மக்கள் திரள் எத்தனை சமூக – அரசியல் பிரச்சினைகளைப் பேசிய போதிலும், அதற்கு ஒரு அரசியல் திசையோ, அமைப்போ இல்லை. அப்படி ஒன்று இல்லாமலிருப்பதே தமது பலம் என்று பலரும் கருதிக் கொண்டனர். இல்லாமலிருத்தல் என்பதன் பொருள் நிலவுகின்ற அமைப்பிடம் சரணடைதல் என்பதேயாகும்.
“சரணடைய முடியாது” என்ற புள்ளியில்தான் தொடங்கியது இந்தப் போராட்டம். மாநில அரசு, மத்திய அரசு, உச்ச நீதிமன்றம் என்று பந்தாடப்பட்ட ஜல்லிக்கட்டு பிரச்சனையில், தமிழக மக்களின் எழுச்சி அரசமைப்பையும் அதன் அதிகாரத்தையும் பணிய வைத்தது. எனினும், அரசமைப்பு அப்படியேதான் இருக்கிறது.
தமிழ் மக்களின் மீள் வருகைக்காக மெரினா காத்திருக்கிறது.
-மருதையன்.
புதிய ஜனநாயகம் பிப் 2017

கருத்துகள் இல்லை: