தமிழகத்தின் புதிய முதல்வரின் ரெக்கார்ட்! வேண்டாம் கிரிமினல்களின் ஆட்சி!
சந்திர மோகன் உச்சநீதிமன்றத்தால் கிரிமினல் குற்றவாளியாக தண்டிக்கப்பட்ட அ.இ.அ.தி.மு.க தற்காலிக பொது செயலாளர் V.K.சசிகலா பரப்பனஹள்ளி சிறைக்கு அனுப்பப்பட்டதால், தற்சமயம்
தமிழகத்துக்கு ‘எடப்பாடி’ தான் முதல்வர் என்ற நிலைமை வந்துள்ளது. 15 நாட்களில் என்ன நடக்கும் என்ற போதிலும், முதல்வராகப் பொறுப்பேற்றுவிட்ட எடப்பாடி பழனிச்சாமியின் அரசியல் , பொருளாதார ஊழல் பின்னணி பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.
கமிசனுக்கு வெல்லம் விற்பதில் தனது வாழ்க்கையைத் துவங்கி, அரசியலில் நுழைந்தவர், எடப்பாடியார். MGR மறைவுக்குப் பின்னர், அ.தி.மு.க ஜானகி – ஜெயலலிதா அணி என பிளவுபட்ட போது “கோழி” சின்னத்தில் போட்டியிட்டு ஜெயா அணிக்கு MLA வாக உருவானவர். 1989-ம் ஆண்டுமுதல் தொடர்ந்து சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் இருந்து போட்டியிட்டு வருகிறவர். இப்போது முதல் மந்திரியாக ஆட்சி பொறுப்பேற்று இருக்கிறார்.
ஜெயா முதல்வராக இருந்த வரை, மந்திரி பழனிசாமி பல்வேறு அரசாங்க ஒப்பந்ததாரர்களிடம் பெற்ற கமிசனில் 13.5 % யை ஏமாற்றமால் “கார்டன்” இடம் செலுத்தியவர் என்ற வகையில் ஜெயாவின், சசியின் பாராட்டுக்கும், நம்பிக்கைக்கும் உரியவர். கட்சியின் பணம் மட்டும் சுமார் ரூ. 10,000 கோடி இவரிடம் ஜெயாவின் காலத்திலேயே ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கழக கண்மணிகள் தெரிவிக்கின்றனர். எடப்பாடியின் தனிப்பட்ட சொத்து மதிப்பு பல்லாயிரம் கோடிகள் ஆகும்.
ரெய்டில் சிக்கிய பணம் எடப்பாடி உடையதா? சம்பந்தி உடையதா?
நவ.,டிசம்பர் 2016- Demonetisation காலத்தில்…”500, 1000
ரூபாய் மதிப்பிழப்பு” என்ற அறிவிப்பை இந்திய பிரதமர் மோடி அறிவித்த அந்த நாளையும், மக்களெல்லாம் சொந்த பணத்தையே செலவிட முடியாமல் ஓடித் திரிந்ததையும் நாம் மறந்திருக்க முடியாது.
அந்த நேரத்தில்தான், பெங்களூருவில் நடத்தபட்ட ரெய்டில், கட்டுக்கட்டாக 5 கோடியே 70 லட்ச ரூபாய்க்கு மொத்தமாக ரோஸ் கலர் புதிய நோட்டுகள் பிடிபட்டன. ரெய்டில் சிக்கிய பணம், தமிழக அமைச்சர்களின் பணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அடுத்த ரெய்டு, ஈரோடு பகுதியைச் சேர்ந்த சில அமைச்சர்களின் உறவினர் வீடுகளிலும் நடந்தன.
ஈரோட்டை அடுத்துள்ள பூந்துறை வேலாங்காட்டுவலசு கிராமத்தைச் சேர்ந்த என்.ராமலிங்கம் என்பவரது வீட்டில் நடந்த ரெய்டு இதில் முக்கியமான ஒன்று. ஈரோடு செட்டிபாளையம் தெற்கு ஸ்டேட் பேங்க் நகரை தலைமையிடமாகக் கொண்டு ‘ராமலிங்கம் கன்ஸ்டரக்சன்ஸ் கம்பெனி (ஆர்.சி.சி)’ என்ற பெயரில் கட்டுமான நிறுவனத்தை நடத்தி வந்தவர் ராமலிங்கம். ராமலிங்கத்துக்கு சொந்தமாக என்.ஆர்.ஹோல்டிங், என்.ஆர். எனர்ஜி, இன்பிரா, என்.ஆர். இன்ஜினீயரிங், கிரீன் புரொடக்சன் என்று பல தொழில்நிறுவனங்கள் இருந்ததால், இந்த ரெய்டு பெரிதும் கவனிக்கப்பட்டது.
ராமலிங்கத்தின் நிறுவனங்களில் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குநர் பதவியை ராமலிங்கமும், இயக்குநர்கள் பதவியை அவரது மகன்களான சந்திரகாந்த், சூர்யகாந்த் ஆகியோரும் நிர்வகித்து வந்தனர். சென்னை, கோவை, மும்பை, டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் இந்த நிறுவனங்களுக்கு அலுவலகங்களும் உள்ளன. ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி மதிப்பில் வணிக சுழற்சியும் உண்டு.
ராமலிங்கத்தின் வீடு, செட்டிபாளையத்தில் உள்ள தலைமை அலுவலகம், நெருங்கிய உறவினர்கள் வீடுகள், நண்பர்களின் வீடுகள், என்.ஆர். கட்டுமான நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் வீடுகளில் அதிரடி சோதனை நடந்தது.
ராமலிங்கத்தைச் சுற்றி நடந்த இந்த சோதனையில் புதியதாக வெளியிடப்பட்ட ரோஸ் நிற புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ரூ.5.7 கோடி அளவில் கைப்பற்றப்பட்டன. பழைய செல்லாத பணம் உள்பட தங்கக் கட்டிகள், முக்கிய ஆவணங்கள் என்று கணக்கில் காட்டப்படாத வருமானங்களும், ஆவனங்களும் சிக்கின.
பெருமளவில் புதிய ரூபாய் நோட்டுகள், ராமலிங்கத்துக்கு கிடைத்தது எப்படி என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், ஈரோட்டில் உள்ள 3 தனியார் வங்கிகளில் இருந்து புதிய ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டதும், இதற்கு வங்கி மேலாளர்கள் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. ரூ. 5.7 கோடி மதிப்பில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை வைத்திருந்த ராமலிங்கத்தின் பின்னணி குறித்து வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். ராமலிங்கம் எடப்பாடியின் சம்பந்தியாவார்.
ATM மெசின்களுக்கு பணம் நிரப்பும் ஒப்பந்த பணியும் எடப்பாடியின் உறவினர்களிடம் இருந்தது. இதிலும் ஊழல் செய்து 2000 ரூபாய் நோட்டுக்கள் கடத்திவிட்டனர் என்ற செய்தியும் ஊடகங்களில் வந்தது.
சேலம் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர், எடப்பாடியின் நெருங்கிய சகா, அ.தி.மு.க பிரமுகர் இளங்கோவன் மூலமாக பழைய ரூ. 500,1000 நோட்டுக்களுக்குப் பதிலாக வங்கியிலிருந்த 100 ரூபாய் நோட்டுக்கள் கோடிக்கணக்கில் மாற்றப்பட்டனவா என்றும் விசாரணை நடந்தது. இப்பிரச்னை அப்படியே அமுக்கப்பட்டுவிட்டது.
2016 டிசம்பரில் மட்டும், எடப்பாடியின் குடும்ப உறுப்பினர்கள், சம்பந்தியின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோரிடமிருந்து ரூ. 300 கோடிக்கும் அதிகமான புதிய நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டது.
(ராமலிங்கத்தின் இளைய மகனுக்கு பெருந்துறையைச் சேர்ந்த தொழிலதிபர் சுப்பிரமணியத்தின் இளைய மகளை மண முடித்துள்ளனர். தொழிலதிபர் சுப்பிரமணியத்தின் மூத்த மகள் எடப்பாடி பழனிச்சாமியின் மூத்த மகனை மணமுடித்த வகையில் மருமகளாவார். எடப்பாடி பழனிச்சாமியும், தொழிலதிபரான ராமலிங்கமும் மகன், மகள்களை மணமுடித்துக் கொடுத்த வகையில் சம்பந்தி முறை உறவினர்கள் ஆவர்.)
தற்போது, இந்த மோசடி வழக்குகளில் அவரின் உறவினர்கள் பெங்களூர் சிறையில் உள்ளனர். இவர்களோடு உடந்தையாக இருந்ததற்காக எடப்பாடி பழனிசாமியும் பொருளாதார குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட வேண்டியவர் தான். ஆனால் முதல்வர் ஆகியுள்ளார்.
ஒப்பந்தம் வழங்குவதில் ஊழல்!
தமிழக பொதுப்பணித்துறை மந்திரியாக எடப்பாடி பழனிச்சாமி இருந்ததால் கட்டுமானம் தொடர்பான ஒப்பந்தப் பணிகள் எளிதில் ராமலிங்கத்துக் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. தலைமைச் செயலகம் செல்லும் வழியில் அமைக்கப்பட்ட பொன்விழா நுழைவாயில் கட்டுமான பணியையும் ராமலிங்கத்தின் நிறுவனம்தான் செய்திருந்தது. இதேபோல தமிழக அரசின் பல பணிகளை அந்த நிறுவனம் எடுத்துச் செய்துள்ளது.தமிழக பொதுப்பணித்துறை மந்திரியாக எடப்பாடி பழனிச்சாமி இருந்தபோதே அவருடைய சம்பந்தியின் கைகளுக்கு பொதுப்பணி காண்ட்ராக்டுகள் போயின.
சாதீ வெறி குற்றசாட்டுக்கள்!
எடப்பாடி பழனிசாமி வெள்ளாள கவுண்டர் சாதியைச் சேர்ந்தவராவார். எடப்பாடியின் வீட்டுக்கு எதிர்ப் பகுதியில் குடியிருந்த “தலித்” வகுப்பைச் சார்ந்த காவலர்/போலீஸ் ஒருவரின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர், “வண்டியை விட்டு கீழே இறங்கி நடந்து செல்லவில்லை” என அவரை கட்டி வைத்து அடித்த சம்பவம் ஏற்கனவே ஊடகங்களில் வெளியானது தான் !
அதே போல, திருச்செங்கோடு கோகுல்ராஜ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட கொங்கு நாகராஜ், எடப்பாடியின் அரவணைப்பில் தான், சில காலம் பாதுகாப்பாக இருந்தான் என்பதும் ஊடகங்களில் வெளிவந்த செய்தி தான்! இந்த சாதிவெறி நடவடிக்கைகளுக்காக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டியவர் தான் முதல்வர்.
சட்டவிரோத, கிரிமினல், ஊழல், சாதிவெறி ரெக்கார்டு உள்ளவரைத் தான் தமிழகம் புதிய முதல்வராக பெற்றுள்ளது.
அ.இ.அ.தி.மு.க வின் நிரந்தர பொதுச் செயலாளர், தற்காலிக பொதுச் செயலாளர்
குற்றவாளிகள் என உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஓங்கி உரைத்துள்ள பின்னணியில், கிரிமினல்கள் கூடாரத்திலிருந்து நல்லவர்களா அரசாங்கம் அமைக்க கிடைப்பார்கள்?
சந்திரமோகன், சமூக-அரசியல் செயல்பாட்டாளர். thetimestamil.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக