வியாழன், 16 பிப்ரவரி, 2017

யாரை முதலில் அழைப்பது ? குழப்பத்தில் ஆளுநர்!


தமிழகத்தில் ஆட்சியமைக்கப்போவது யார்? இதுதான் இந்தியாவே எதிர் நோக்கிக் கொண்டிருக்கும் ஒரே கேள்வி. ஜெயலலிதா மரணமடைந்த பிறகு அதிமுகவில் ஒரு சின்ன சலனமில்லை. அனைவரும் ஒருமித்த கருத்தோடு செயல்பட்டனர். சிறு சிலசலப்பு இல்லாமல் புதிய அமைச்சரவையை அமைத்தார்கள். ஓ. பன்னீர்செல்வத்தை முதல்வராகத் தேர்ந்தெடுத்தார்கள். சசிகலாவை பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுத்தார்கள். அதுவரை அதிமுகவினர் கூறுவது போல் அந்த இயக்கம் ராணுவ கட்டுப்பாட்டோடு தான் இருந்தது.

எப்போது சசிகலா அதிமுகவின் முதலமைச்சராக பொறுப்பேற்பதற்கான ஏற்பாடுகள் நடந்ததோ அப்போது தொடங்கியது பிரச்சனை. தன் பதவியை ராஜினாமா செய்த கையோடு தன் மனக்குமுறலை ஓ. பன்னீர் செல்லம் செய்தியாளர்களிடம் கொட்ட அதிமுக இரண்டாக உடைந்தது. இந்நிலையில் சசிகலா ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார். ஓபிஎஸ் தன் ராஜினாமாவை ரத்து செய்ய கோரிக்கை வைத்திருக்கிறார்.
இந்நிலையில், எதிர்பாராத திருப்பமாக சொத்து குவிப்பு வழக்கின் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. சிறைக்கு செல்லும் முன் எடப்பாடி பழனிச்சாமியை சட்டமன்றக் குழுத் தலைவராக அறிவித்தார் அவர். இதைத் தொடர்ந்து எடப்பாடி தரப்பும், ஓ.பி.எஸ். தரப்பும் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க மாறி மாறி உரிமை கோரி வருகிறார்கள். ஆனால் யாரையும் ஆளுநர் அழைக்கவில்லை. இந்நிலையில் நேற்று மதியம் ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கக்கோரி எடப்பாடி பழனிச்சாமி நினைவூட்டல் கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பியுள்ளதாக அதிமுக எம்பி நவநீத கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கடிதம் அனுப்பியும் ஆளுநர் அழைக்காமல் இருப்பது நியாமற்றது என்றும் அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து நேற்று இரவு எட்டு மணி அளவில் ஆளுநரை சந்தித்தார் எடப்பாடி பழனிச்சாமி. அப்போது, ஆளுநரிடம் தங்கள் ஆதரவு எம்.எல். ஏ.க்களின் பட்டியலை கொடுத்ததாக தெரியவருகிறது. அதன் பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், எங்கள் தரப்பு கருத்தை ஆளுநரிடம் தெரிவித்தோம். ஆளுநர் ஜனநாயகத்தை காப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. ஜனநாயகம் பாதுகாக்கப்படும் என்று நம்புகிறோம். 124 எம்.எல்.ஏ,க்களின் ஆதரவு பட்டியலை வழங்கியுள்ளோம் என்று அவர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து தனது ஆதரவாளர்களோடு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆளுநரை சந்தித்தார். அவருடன் மதுசூதனன், மா.பா. பாண்டியராஜன், மைத்ரேயன் எம்.பி. செம்மலை ஆகியோர் சென்றனர். இவர்கள் தரப்பிலும் ஆளுநரிடம் தங்கள் கருத்தை தெரிவித்ததாக தெரியவருகிறது. ஆளுநருடனான சந்திப்பு முடிந்ததும் முதல்வர் நேராக தனது வீட்டுக்கு திரும்பிச் சென்றார்.
அடுத்தடுத்து, ஆளுநர் மாளிகைக்கு அதிமுகவின் இருதரப்பினரும் சென்றதால் ஆளுநர் மாளிகை வட்டாரம் மிகுந்த பரபரப்பில் இருந்தது.
குழப்பத்தில் ஆளுநர்?
ஒரே கட்சியில் இருந்து இரு வேறு அணிகள் ஆட்சியமைக்க தொடர்ந்து உரிமை கோருகின்றன. இதில் ஓபிஎஸ் அணிக்கு பத்து எம்எல்ஏக்களின் ஆதரவே உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு 124 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளதாக சசிகலா தரப்பினர் கூறுகிறார்கள். அறுதிப் பெரும்பான்மையை அடிப்படையாக வைத்துப் பார்க்கும் போது எடப்படியைத்தான் ஆளுநர் ஆட்சியமைக்க அழைக்க வேண்டும். ஆனால் அதில் ஒரு சிக்கல் இருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்எல்ஏக்கள் கூவாத்தூரில் சிறை வைக்கப்பட்டுள்ளதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டு எழுகிறது. காபந்து முதல்வராக இருக்கும் ஓ. பன்னீர்செல்வத்தை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்தால் அவரால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியுமா என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. இந்நிலையில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்கி கூறியபடி ஒரே நேரத்தில் இருவரின் பலப்பரிட்சையை சட்டமன்றத்தில் ஓட்டெடுப்பின் மூலம் ஆளுநர் பரிசோதிக்கலாம். எது எப்படி என்றாலும், வருகிற வெள்ளிக்கிழமைக்குள் ( நாளை ) ஆளுநர் முடிவெடுத்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் யாரை ஆட்சியமைக்க அழைப்பார் என்பதை காத்திருந்துதான் பார்க்க வேண்டும். மின்னபலம்

கருத்துகள் இல்லை: