வெள்ளி, 25 மார்ச், 2016

நம்ம கட்சிக்கு எது நடந்தாலும் பாரவாயிலை.....எல்லாருக்கும் பாடம் படிப்பிக்க வேண்டும்....இவரு மட்டும்தான் இவ்வளவு தெளிவா டிராமா போடுவாரு


ஒவ்வொரு தடவை தேர்தல் வரும்போதும், ‘பந்தக்கால் நட்டார்; பந்தியில் அவமானப்பட்டார்’னு வைகோவைப் பத்திச் சேதி வரும். போன 2011லகூட அதுதாம் நடந்துச்சி.
2006ல இருந்து அதிமுக கூட்டணியில இருந்த வைகோ, 2011 வரைக்கும் பாசமலர் சிவாஜி மாரியே ஜெயலலிதா மேல சகோதரப் பாசத்தைக் கொட்டுனாரு. ஆனா, 2011 தேர்தல் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்த ‘கந்தசாமி’ படத்துல தேங்காய் யாவாரியான வடிவேலுகிட்ட ஒரு மொட்டைத்தல ஆசாமி 10 ரூவா தேங்காய 4 ரூபாய்க்கிக் கேட்பாரு பாருங்க... அப்படியிருந்துச்சி.

“அதிகமா கேட்கல. போன தேர்தல்ல குடுத்த 35 சீட்டைக் கொடுத்தாப் போதும்”ன்னாரு வைகோ. “வீம்புக்கு அதிகத் தொகுதிய வாங்கிட்டு, பூராத்துலயும் தோத்துப்போறதே ஜோலியாப்போச்சு. ஆறுல தான ஜெயிச்சீங்க. ஆறு சீட் தாரோம்”னு தங்களுக்கே உரிய ‘நாகரிக’த்தோட சொல்லிச்சி அதிமுக. “சரி.. உங்களுக்கும் வேணாம்.. எனக்கும் வேணாம்.. 30”ன்னு இறங்கி வந்தாரு வைகோ. “ஏழு”ன்னுது அதிமுக. இப்பிடியே, 21 சீட் வரைக்கும் இறங்கியில்ல.. குதிச்சிக் குதிச்சி வந்தாரு வைகோ. “ஒன்பதுதான் தருவோம். வேணுமின்னா மேற்கொண்டு ஒண்ணு போட்டுத் தாரோம். வேண்டாமுன்னா போங்க”னு ஸ்டிக்ட்டா சொல்லிட்டுக் கிளம்பிட்டாங்க ஓபிஎஸ் டீம்.
கடுப்பாகிப் போயி, தேங்காக் கடையையே புறக்கணிச்சிட்டுப் போயிட்டாரு வைகோ. “போனாப் போகட்டும் யாருக்கு நட்டம்?”னு அந்தம்மாவும் கண்டுக்கிடல. அப்ப கேட்கிற இடத்துல இருந்த வைகோ, இப்ப கொடுக்கிற இடத்துக்கு (மநகூ ஒருங்கிணைப்பாளர்) உசந்திட்டதால, இந்தவாட்டியாவது தொகுதிப் பங்கீடு சுமுகமா இருக்கும்னு நினைச்சேன். தட்டுல இட்லி வெக்கிறதுக்கு முன்னாடி, போனஈடு இட்லி அவிச்சப்ப யார் யார் எவ்வளவு சாப்பிட்டாங்கன்னு ஞாவகப்படுத்திப் பார்க்கிற அம்மா மாதிரி, முந்துன தேர்தல்கள்ல நாமெல்லாம் எத்தனை எத்தனை சீட்ல போட்டியிட்டோம்னு வைகோவும் தாயுள்ளத்தோட யோசிச்சிப் பார்த்திருக்காரு.
2006, 2011ன்னு ரெண்டு தேர்தலையும் சேர்த்துப் பாத்தாலும், அதிகபட்சமா மதிமுக 35, மார்க்சிஸ்ட் 13, இந்திய கம்யூனிஸ்ட் 10, விடுதலைச் சிறுத்தைகள் 10ன்னுதாம் போட்டியிட்டிருக்காங்க. ஆக, மொத்தமுள்ள 234 இட்லியில, 4 பேருக்கும் சேத்தே 68 இட்லி போதும். மிச்சத்தை எங்க கொண்டு போய்த் தள்றது?
மதிமுக 35, இந்திய கம்யூனிஸ்ட் 25, மார்க்சிஸ்ட் 25, விடுதலைச் சிறுத்தைகள் 25ன்னு பிரிச்சாலும்கூட, 124 சீட் மிச்சம் விழுந்திருக்கு. வைகோ கலங்கி நிற்கிறதப் பார்த்த நம்ம ஜி.ராமகிருஷ்ணன், “1996 தேர்தல்ல நம்ம கூட்டணியில நீங்க 177 தொகுதியில நின்னீங்களே, மறந்திட்டிங்களா தோழர்?”ன்னு கேட்டிருப்பாரு.
“நம்ம பசி தீர்ந்தப்புறம் சாப்பிடுற அடுத்த இட்லி, இன்னொருத்தங்களோடது தோழர்”ன்னு ‘கத்தி விஜய்’ மாதிரி கம்யூனிஸ்ட்காரங்ககிட்டயே கம்யூனிசம் பேசியிருப்பாரு வைகோ. அவரு பேசிக்கிட்டு இருக்கும்போதே, “தொகுதிப் பங்கீடு திருப்திகரமா முடிஞ்சிது”ன்னு திருமா, ஜிஆர், முத்தரசன் மூணு பேரும் ஏப்பம்விட்டுக்கிட்டே கிளம்பிப் போயிருப்பாங்க!
“இறைவா! எனக்கேன் இந்த சோதனை?”ன்னு கலங்கிப்போன வைகோவுக்கு மீனாட்சி திருக்கல்யாணம் ஞாவகத்துக்கு வந்துச்சிபோல. கல்யாணத்துல மிஞ்சுன விருந்தைக் காலி பண்றதுக்கு சிவன் கையாண்ட டெக்னிக்கை நாமளும் கையாண்டா என்னன்னு, ராசதந்திரத்தோட யோசிச்சிருப்பாரு வைகோ. இத மிச்ச மூணு பேருகிட்ட சொன்னதும், “யாரு சாப்டா என்ன? மொத்தத்துல இந்த இட்லி காலியாகணும்”னு ஓகே சொல்லிட்டாங்க போல!
அப்பதாம் மறுவடியும் விஜயகாந்த் ஞாவகம் வந்துருக்கும் வைகோவுக்கு. ஆரம்பத்துல, “மநகூக்கு வாங்க”ன்னு நாம விதவிதமா கூப்பிட்டும், “சும்மா வெளையாடாதீங்கண்ணே, தனித்துப் போட்டி”ன்னு ‘தெளிவா’ச் சொன்னாரு கேப்டன். ஆனா இப்ப, கோயம்பேடு கல்யாண மண்டபத்துல உட்காந்துக்கிட்டு யாராவது வாராங்களா... வாராங்களான்னு வாசலையே பாத்துக்கிட்டு இருக்காரு. அவரைக் கூப்பிடுவோம்னு நாலு பேரும் நேரா மண்டபத்துக்கே போயிட்டாங்க. டீயே (கொள்கை) இல்லாத கடைக்கு நாலு பேர் வர்றதைப் பாத்ததும் சந்தோஷம் தாங்கல விஜயகாந்த்துக்கு. வந்தவங்க, “விஜயகாந்த் தாம் முதல்வர் வேட்பாளர், தேமுதிகவுக்கு 124 சீட்டு”ன்னு சொல்ல, அதை நம்ப முடியாத சுதீஷ் வகையறா, வைகோ மனசு மாறுததுக்குள்ள அதைப் பத்திரத்துல எழுதிக் கையெழுத்தும் வாங்கிட்டாங்க.
தனிக் கட்சிகள் கூட்டணியில இணையுறதே வழக்கமா இருக்கிற தமிழக வரலாற்றிலேயே முதமுறையா ஒரு கூட்டணி, ஒரு கட்சியில போய் இணைஞ்சுது. “இனிமே, இது மக்கள் நலக் கூட்டணியா? தேமுதிக கூட்டணியான்னு யாரும் கேட்கக் கூடாது. இனிமே, இது விஜயகாந்த் கூட்டணி”ன்னும் சொல்லிட்டாரு வைகோ!
வெறும் சீட்டுக்காகவா வைகோ இப்படிச் செஞ்சாருன்னு நீங்க யோசிக்கலாம், இந்த இடத்துலதான் ஒரு ‘டுவிஸ்ட்’ இருக்கு. ஸ்டாலினுக்கும் வைகோவுக்குமான பகைக்கு ‘எஜமான்’ படத்து செந்தில், கவுண்டமணி பகையைப் போல நீளமான வரலாறு இருக்கு. கட்சியை விட்டு நீக்குன அழகிரியை வீட்டுக்கே போய்ப் பாத்து, அந்தப் பகையைப் புதுப்பிச்சாரு வைகோ. பதிலுக்கு வைகோ கூட இருந்த பத்து இருபது பேத்துல, பாதிப் பேத்தை வலுக்கட்டாயமா திமுகவுக்கு இழுத்துட்டு வந்துட்டாரு ஸ்டாலின்.
கடுப்பான வைகோ, தற்கொலைப் படையாவே மாறிட்டாரு. இந்த தடவ நமக்கு ரெண்டு கண்ணும் போனாலும் பரவாயில்ல.. ஸ்டாலினுக்கு ஒரு கண்ணாவது போயிறணும்னு விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராகவும் அறிவிச்சி, மொத்தமா 124 தொகுதியையும் குடுத்துட்டாரு போல! யாருக்கு எத்தனை சீட்டுங்கிற முதல் கட்டப் பேச்சுவார்த்தை ‘ஜெர்மனி, இத்தாலி அரசியல் வரலாற்றிலேயே’இல்லாத அளவுக்கு சுமுகமா முடிஞ்சிருச்சி. ஆனா, யார் யாருக்கு எந்தெந்தத் தொகுதிங்கிற அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை அப்பிடியிருக்க வாய்ப்பே இல்லை. ஏன்னா.. ‘ஜெராக்ஸ் எடுத்திருப்பாங்களோ’ன்னு சந்தேகப்படுற அளவுக்கு மநகூ தலைவர்க 4 பேரோட விருப்ப லிஸ்ட்லயும் ஒரே மாதிரி தொகுதிகளா இருந்தா? ‘பெரியண்ணா’ விஜயகாந்த் வேற உள்ள வந்திட்டாரு. ஒருங்கிணைப்பாளர் வைகோ எப்படிச் சமாளிக்கப் போறோரோ... பயமா இருக்கு! வழக்கம்போல பந்தியில அவமானப்படப்போறாரா? இல்ல ராசதந்திரத்தோட யோசிச்சி, அவங்க அப்பாவ போய் பார்த்தாலும் பரவாயில்லை என்று அழகிரியைக் கூட்டணிக்குள்ள கொண்டுவந்து இவங்களப் பூராம் அடக்கி, ஸ்டாலினை வெறுப்பேத்துவாரான்னு பொறுத்திருந்து பார்ப்போம். ஒருவேள இந்தக் கூட்டணி ஜெயிச்சிட்டா, இருபெரும் திராவிடக் கட்சிகள வீட்டுக்கு அனுப்பிய இன்னொரு திராவிடக் கட்சித் தலைவர்னு வரலாற்றுல இடம்பிடிச்சிருவாரு வைகோ.
இந்த ரணகளத்துலேயும் எனக்கொரு கிளுகிளுப்பு இருக்கு.. ‘தேமுதிக, மதிமுக, ரெண்டு கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தை, தமாகான்னு 6 கட்சியும் கூட்டணி போட்டா விஜயகாந்த் தான் முதல்வர்’னு முன்னாடி ஒரு கட்டுரை எழுதுனேன், யாருக்காச்சும் ஞாவகம் இருக்கா? ‘தலைவனுக்கு ஓட்டுப்போட்டு தமிழ்நாட்டைத் தெறிக்கவிடலாமா?’ங்கிறது தலைப்பு. கிட்டத்தட்ட நான் சொன்ன மாதிரியே நடந்திருச்சி. விஜயகாந்த்தான் முதல்வர், அமைச்சரவையில அவர் குடுக்கிற இலாகாவ நாங்க எடுத்துக்கிறோம்னு வைகோவும் சொல்லிட்டாரு.
எனவே... எப்படி, மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், கொள்கைகளைப் பூராம் கரைச்சிக்குடிச்ச தலைவர்க எல்லாம் சேந்து, “அவங்க எல்லாம் எந்த நாட்டு கிரிக்கெட் பிளேயர்ஸ்?”னு கேட்கிற விஜயகாந்த்தைத் தலைவரா ஏத்துக்கிட்டாங்களோ... அதேமாதிரி விஜயகாந்த் கட்சிப் பேரே என்னன்னு தெரியாம கற்பனையிலயே அடிச்சிவிடுற என்னையும் சிறந்த அரசியல் விமர்சகராக எல்லோரும் ஏத்துக்கொள்ளும்படி கேட்டுக்கிறேன்.
மக்களே செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?
கே.கே.மகேஷ், தொடர்புக்கு: magesh.kk@thehindutamil.co.in

கருத்துகள் இல்லை: