வெள்ளி, 12 பிப்ரவரி, 2016

தற்கொலை படை பெண் பயங்கரவாதி இஸ்ரத்!': ஹெட்லி புது தகவல்

மும்பை: குஜராத் மாநிலத்தில், 2004ல் நடந்த என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட இஸ்ரத் ஜகான், லஸ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பின் தற்கொலைப் படையைச் சேர்ந்தவர் என, பாகிஸ்தான் பயங்கரவாதி டேவிட் கோலமன் ஹெட்லி, தன் சாட்சியத்தில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில், 2008ல் நடந்த தொடர் தாக்குதலில் தொடர்புடைய லஸ்கர் - இ - தொய்பா பயங்கரவாதி ஹெட்லி, 55, அமெரிக்காவில் இதே வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். இந்த வழக்கில் அப்ரூவரான ஹெட்லி, அமெரிக்காவில் இருந்து, 'வீடியோ கான்பரன்சிங்' மூலமாக, மும்பை கோர்ட்டில் சாட்சியம் அளித்து வருகிறான்.
கடந்த சில தினங்களாக அளித்த சாட்சியத்தின்போது, பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., மற்றும் லஸ்கர் - இ - தொய்பா ஆகியவை தொடர்பாக திடுக்கிடும் தகவலை தெரிவித்தான்.


இந்நிலையில் நேற்றும், வீடியோ மூலம் சாட்சியம் அளித்தான் ஹெட்லி. அப்போது, குஜராத்தில், 2004ல் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட, இளம் பெண் இஸ்ரத் ஜகான், 19, லஸ்கர் - இ - தொய்பா அமைப்பின் தற்கொலைப் படையைச் சேர்ந்தவர் என, ஹெட்லி தெரிவித்தான்.

பணம் அனுப்பிய ஐ.எஸ்.ஐ.,

நேற்றைய வாக்குமூலத்தில் ஹெட்லி கூறுகையில், ''குஜராத்தில், தற்கொலைப் படையைச் சேர்ந்த ஒரு பெண், போலீஸ் என்கவுன்டரில் கொல்லப்பட்டதாக பயங்கரவாதி லக்வி கூறினார்,'' என்றான்.
அப்போது குறுக்கிட்ட, அரசு தரப்பு வழக்கறிஞர் உஜ்வல் நிகம், அந்த பெண்ணின் பெயரை கேட்ட போது, ''தெரியவில்லை,'' என, ஹெட்லி கூறினான்.
உஜ்வல் நிகாம், ''நான் சில பெயர்களை கூறுகிறேன்; அதில், அந்த பெண்ணின் பெயர் உள்ளதா என்பதை உறுதி செய்ய முடியுமா,'' எனக் கேட்டு, சில பெயர்களை கூறினார். அப்போது, இஸ்ரத் ஜகானின் பெயரை, ஹெட்லி உறுதி செய்தான்.

மேலும் அவன் கூறியதாவது:
* பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., மற்றும் லஸ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பு, எனக்கு அவ்வப்போது பணம் அனுப்பின
* பாபர் மசூதி இடிப்புக்கு பழிவாங்கும் வகையில், குஜராத் மாநிலத்தில் உள்ள அக்சர்தாம் கோவிலில் தாக்குதல் நடத்தவும், லஸ்கர் - இ - தொய்பா திட்டமிட்டது.


2004ல் 'என்கவுன்டர்'
கடந்த, 2004, ஜூன் 15ல், குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகருக்கு அருகில், இஸ்ரத் ஜகான், ஜாவத் ஷேக் என்கிற பிரனேஷ் பிள்ளை, அம்ஜத் அலி அக்பரலி ரானா, ஜீஷான் ஜோகர் ஆகிய நான்கு பேரை போலீசார் சுட்டுக் கொன்றனர். இவர்கள், லஸ்கர் -இ - தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும், அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடியை கொல்ல வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். 'இஸ்ரத், மும்பையில் உள்ள ஒரு கல்லுாரியில் படிக்கும் மாணவி. போலீசார், போலி என்கவுன்டரில், இஸ்ரத்தை சுட்டு கொலை செய்து விட்டனர்' என, காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்தது. சி.பி.ஐ., விசாரணைக்கு, குஜராத் ஐகோர்ட் உத்தரவிட்டது. விசாரணையில், 'இது, போலி என்கவுன்டர்' என, கூறப்பட்டது. இது தொடர்பாக, குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி, குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷா உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.   dhinamalar.com

கருத்துகள் இல்லை: