திங்கள், 8 பிப்ரவரி, 2016

பிரான்சில் நிர்வாணமான ராணிபேட்டை தோல் தொழிற்சாலையின் வண்டவாளம்

பிரம்மாண்டமான சுற்றுச்சுவர் இடிந்து கழிவுநீர் வெள்ளம் பாய்ந்து, உறங்கிக்
கொண்டிருந்த வெளிமாநில கொத்தடிமைத் தொழி லாளர்கள் பத்து பேர் கொல்லப்பட்டார்கள். இத னால் ராணிப்பேட்டை சிப்காட்டில் இயங்கிய 67 தோல் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. முதலாளிகள், நிர்வாகிகள், அரசு அதி காரிகள் என பத்துபேர் கைது செய்யப்பட்டார்கள்.கடந்த ஆண்டு நடந்த இந்தக் கொடுமையை மக்கள் மறக்கவில்லை. இதன் விளைவு...?""உங்கள் தயாரிப்புகள் எங்களுக்கு வேண் டாம்!'' என்று சொல்லி ராணிப்பேட்டையில் சில தொழிற்சாலைகளுக்கு கொடுத்திருந்த 30 கோடி ரூபாய் கொள்முதல் ஆர்டரை அதிரடியாக கேன்சல் செய்திருக்கிறது, ஃபாரீஸில் உள்ள "கபீர்' என்ற புகழ்பெற்ற காலணி விற்பனை நிறுவனம்.


ஐரோப்பிய நாடுகளில் புகழ்பெற்று விளங்கும் இந்தக்  கபீர் நிறுவனம்தான் ராணிப்பேட்டையில் தயாராகும் காலணிகளில் பெரும்பகுதியை கொள்முதல் செய்கிறது.
ராணிப்பேட்டை தோல் தொழிற்சாலைகளின் லட்சணம் பிரான்ஸ் நாட்டின் தலைநகரச் சேனலான ஏ.ஆர்.டி.க்கு எப்படிப் போனது?
கடந்த நவம்பர் மாதத்தில் ஒரு நவநாகரிகப் பெண்மணியின் தலைமையில் ஒரு டீம் ராணிப்பேட்டைக்கு வந்தது. ஃபாரீஸில் உள்ள ஒரு புதிய நிறுவனத்தின் பெயரைச் சொல்லி, அதற்கான கொள்முதல் "ஆர்டர்' கொடுக்க வந்திருக்கிறோம் என்று கதையளந்துவிட்டு ஒரு தோல் தொழிற் சாலைக்குள் ரகசிய கேமராக்களோடு நுழைந்தது அந்த டீம்.

பத்து தொழிலாளர்கள் உறக்கத்திலேயே கொல்லப்பட்ட விபத்தின் காரணமாக மூடப்பட்ட தொழிற்சாலைகளில் இதுவும் ஒன்று. கைது செய்யப்பட்ட முதலாளிகளில் இவரும் ஒருவர். நல்ல ஆர்டர் கிடைக்கும் என்ற சந்தோஷத்தில் அந்த ரகசிய கேமராக்கள் டீமை தொழிற்சாலையை தாராளமாகச் சுற்றிப்பார்க்க அனுமதித்தார் தொழிற்சாலை அதிபர்.

அந்த ரகசிய கேமரா டீம், தொழிற்சாலையில் மோசமான கெமிக்கலில் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்ததையும், வட மாநிலத் தொழிலாளர்கள் கொத்தடிமைகளைப் போல உள்ளே தங்கவைக்கப்பட்டிருப்பதையும், தோல் தொழிற்சாலையின் கழிவுநீர் ஆற்றிலும் ஏரியிலும் திறந்துவிடப்படுவதையும், ரகசியமாக படம் பிடித்துக்கொண்டு போய், அதோடு அந்நாட்டு மருத்துவர்கள், தொழிலாளர் நலத்துறையினர், மனித உரிமை மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என பலரிடம் கருத்துக்களைப் பெற்று இணைத்து, ஒளிபரப்பிவிட்டது.


இதன் விளைவுதான்... 30 கோடி ரூபாய் காலணிகள் ஆர்டர் கேன்சல்.அதோடு விஷயம் முடிந்துவிடவில்லை. அந்த ஸ்டிங் ஆபரேஷன் சி.டி. விவகாரம் இந்திய வெளி யுறவுத்துறை அதிகாரிகளின் கவனத்திற்கும் வந்தது.கடந்த வாரம், மத்திய சுற்றுச்சூழல் துறையின் இணைச்செயலாளர் அனுப் பத்வா தலைமையில் ஒரு குழு ராணிப்பேட்டை வந்தது. தோல் தொழிற்சாலைகளின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமான ராணிடெக்கையும் சில நிறுவனங் களையும் ஆய்வு செய்துவிட்டுச் சென்றது.

தோல் தொழிற்சாலைகளின் செயல்பாடுகள் பற்றி, வேலூர் மாவட்ட சி.ஐ.டி.யு. செயலாளர் காசிநாதனிடம் கேட்டோம்.""வேலை நேரத்துக்குப் பிறகு தொழிலாளர்கள் தொழிற்சாலைக்குள் இருக்கக்கூடாது என்கிறது சட்டம்.

சட்டத்தை எந்த முதலாளி மதிக்கிறார்? வெளி மாநிலங்களிலிருந்து  குறைந்த கூலிக்கு அழைத்து வரப்படும் தொழிலாளர்கள் உள்ளேதான்.... தொழிற்சாலைத் தொழுவுக்குள் தங்க வைக்கப்படுகிறார்கள். தரப்பட வேண்டிய குறைந்தபட்ச கூலி, இ.எஸ்.ஐ., பி.எஃப். போன்ற எதுவுமே கொடுக்கமாட்டார்கள். கொடுத்தால் வேலை செய்கிறார்கள் என்கிற ஆதாரம் உருவாகிவிடுமே? தொழிலாளி, தொழிற்சங்கத்தில் இணையப்போகிறார் என்றாலே அந்தத் தொழி லாளியை வேலையை விட்டு அனுப்பிவிடுவார்கள்.

தொழிலாளர் நலத்துறையும் தொழிற்சாலை பாதுகாப்புத் துறையும் புகார்களை குப்பைக் கூடையில் போடுவதற்காகவே இருக்கின்றன'' வேதனை யோடு சொன்னார் காசி நாதன்.வேலூர் மாவட்ட தொழிற்சாலை பாதுகாப்பு நல ஆய்வாளர் பெரியசாமியைத் தொடர்புகொள்ள பலமுறை முயன் றோம். போனை அட்டென்ட் செய்யவே மனமில்லை அவருக்கு.தோல் தொழிற்சாலைகளை வியாதிகளிலிருந்து மீட்பது சாமானிய மல்ல!

-து.ராஜா nakkhheran.in

கருத்துகள் இல்லை: