திங்கள், 15 பிப்ரவரி, 2016

சாதி, மதம் இங்கு பொருட்டல்ல... தலைமுறையாக தொடரும் காதல் திருமணங்கள்!

விகடன்,com இரு இதயங்கள் இணைந்து அதில் பிறக்கும் காதல், மானுடப்பிறவியில் ஓர் சுகமான சுமை எனலாம். காதல் தினத்தையொட்டி,  காதல் உலகில் இரண்டாவது தலைமுறையாக காவியம் படைத்த ஓர் காதல் குடும்பத்தை காலைப்பொழுதில் சந்தித்தோம். முகமலர்ச்சியுடன் நம்மை வரவேற்றார் அந்த குடும்பத்தின் மூத்த உறுப்பினரான 70 வயதாகும் ஜெயலட்சுமி. 52 ஆண்டுகளுக்கு முன்பே நானும் காதல் திருமணம் செய்து கொண்டேன் என்ற அறிமுகத்துடன் பேசத்தொடங்கினார். வயதிலும், குரலிலும் முதுமை தெரிந்தாலும், தன்னுடைய காதலைப் பற்றி அவர் சொல்லத் தொடங்கியதும், அவரது உள்ளம் இன்னும் இளமையாக இருப்பது தெரிந்தது.

"நான், பிறந்தது, வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். தீபாவளி டைம்ல சேல்ஸ் கேர்ளாக ஜவுளிக்கடைக்கு வேலைக்குப் போனேன். அங்கே ஓனருக்கு அடுத்தப்படியா இருந்த முருகேசன் என்னிடம் பழகினார். முதல் சந்திப்பிலேயே எங்களுக்குள் காதல் மலர்ந்தது. ஆனா அதை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.
ஒரு நாள் லஞ்ச் பிரேக்கில் தனியாக இருந்த என் அருகே வந்த அவர், 'என்னை பிடிச்சுருக்கா?' என்று கேட்டார். நான் ஒண்ணும் சொல்லாம அமைதியா இருந்தேன். அவர் என்னுடைய முகத்தைப் பார்த்துகிட்டே இருந்தார். நான் தலைகுனிஞ்சிக்கிட்டேன். 'ஐ லவ் யூ'ன்னு சொல்லிட்டு போயிட்டார். எனக்கு என்ன செய்வது என்று தெரியல. எங்க குடும்பம் ஆச்சாரமானது. 'லவ்'ன்னா குடும்பத்துல யாருக்குமே பிடிக்காது. இருந்தாலும் அவரை எனக்கும் பிடித்திருந்ததால நானும் ஓகே சொன்னேன்" என்ற ஜெயலட்சுமியின் முகத்தில் இந்த வயதிலும் வெட்கம் குடிக்கொண்டிருந்தது.

மீண்டும் தொடர்ந்த அவர், "தீபாவளி முடிஞ்சதும் அந்த வேலையை விட்டு நின்னுட்டேன். இருந்தாலும் எங்க காதல் தொடர்ந்துச்சு. இப்ப மாதிரி செல்போன் எல்லாம் கிடையாது. ஒரு வாரத்தில ஒரு தடவை பார்ப்பதே ரொம்ப கஷ்டம். தூரத்தில நின்று பார்த்துக்வோம். சைக்கிள்ல நான் குடியிருந்த தெருவுல வருவாரு. பெல் அடிச்சு சிக்னல் கொடுப்பாரு. அவரும், நானும் கண்களாலேயே பேசிக் கொள்வோம். இப்படி இலைமறை காயாக இருந்த எங்க காதல் விவகாரம் வீட்டுக்குத் தெரிஞ்சதும் யாரும் சம்மதிக்கல. சாதியை காரணம் காட்டி எங்கள பிரிக்க முயற்சித்தாங்க. ஆனாலும் காதல்ல இரண்டு பேரும் உறுதியா இருந்தோம். அடித்து, உதைச்சுப் பார்த்தாங்க. என்னுடைய மனசை மாத்திக்கல. 19.1.64ம் தேதி வீட்டை விட்டு வெளியேறி பதிவுத் திருமணம் செஞ்சுகிட்டோம். எங்க வீட்லயும், அவருடைய வீட்லயும் யாரும் எங்கள சேர்த்துக்கல. தனிமரமாக நின்று குடும்பத்த நடத்தினோம். எங்களுக்கு தீபன், புஷ்பராஜ், உஷா, தேவி ஆகிய நாலு குழந்தைங்க பிறந்தாங்க. அதக் கூட யாரும் பார்க்க வரல. நான், காதல் திருமணம் செஞ்சதால குடும்பத்தை விட்டே ஒதுக்கி வச்சிட்டாங்க. அந்த மனக் கஷ்டம் இல்லாம அவரு என்னை நல்லா பார்த்துக்கிட்டாரு.

குடும்ப கஷ்டத்தைத் உணர்ந்து தீபன் சின்ன வயசுலேயே வேலைக்குப் போயிட்டான். மத்த பிள்ளைகள எங்க கூட சேர்ந்து அவனும் படிக்க வைச்சான். உஷா, காலேஜ் முடிச்சிட்டு வீட்ல இருந்தாள். ஃப்ரண்ட் இன்டர்வியூக்காக வடசென்னைக்கு ஒரு ஆபிசுக்குப் போனாள். அங்கே இவளுக்கும் வேலைக்கிடைச்சிட்டதா எங்ககிட்ட சொன்னா. மூணு மாசம் அங்கே வேலைக்குப் போனப்போ அங்க யாரோ ஒரு பையன காதலிச்சதா எங்களுக்கு தகவல் கிடைச்சது. அவரும், நானும் ஒண்ணும் சொல்ல..... ஆனா என்னுடைய இரண்டு பசங்களுக்கும் அந்த காதல் பிடிக்கல. இதனால உஷாவ வேலைக்குப் போக விடல. இருந்தாலும் அவள் அந்தப் பையன மறக்காம இருந்தாள். ஆத்திரத்தில மூத்தப் பையன் அவளை அடிச்சும் பார்த்தான். ஆனால் அவள் மனசை மாத்திக்கல. ஒரு வாரம் சாப்பிடாம கிடந்தாள். கடைசியில அந்த பையன்கிட்டேயும் பேசிப் பார்த்தோம். அவனும் காதல்ல உறுதியா இருந்தான். இந்த சூழ்நிலையில்தான் இரண்டு பேரும் திருமணம் செஞ்சிக்கிட்டாங்க. அவர் உயிரோடு இருந்தவரைக்கும் எனக்கு எந்த குறையில்லாம பார்த்துகிட்டாரு" என்று சொல்ல, ஜெயலட்சுமியின் கண்கள் குளமாகின.
அவரைத் அரவணைத்து தேற்றிய உஷா அடுத்து பேசத் தொடங்கினார்.
"அந்த அலுவலகத்துல சேர்ந்த சில நாட்களிலேயே அங்கு வேலைப்பார்த்த மதுரையைச் சேர்ந்த மகேசுடன் நல்ல பழக்கம் ஏற்பட்டுச்சு. என்னுடைய ஃபிரண்ட் மூணு பேருடன் மகேஷ் கலகலப்பாக பேசுவாரு. அதுல ஒருத்தி அவரை காதலிச்சா. ஆனா மகேஷுக்கு என் மேல பிரியம் இருந்திருக்கு. திடீரென ஒருநாள் என்னிடம் வந்து காதலைச் சொன்னாரு. எனக்கு பயங்கர ஷாக். பிறகு அவருடைய வெளிப்படையான பேச்சு என்னை ரொம்ப கவர்ந்ததால நானும் ஓகே சொல்லிட்டேன். 97-ம் ஆண்டிலிருந்து மூணு வருஷம் காதலிச்சோம். மூணு மாசத்துக்குள் நானும், அவரும் வேறு அலுவலகத்துக்கு வேலைக்குப் போயிட்டோம். இருந்தாலும் எங்க காதல் நாளோரு மேனியும் பொழுதொரு வண்ணம் போல வளர்ந்திச்சு. பர்ஸ்ட் டைம்மா வீட்டுக்குத் தெரியாம கோல்டன் பீச்சுக்கு கூட்டிட்டுப் போனாரு. எனக்கு யாரும் பார்த்துடுவாங்களோன்னு பயம். அதனால அவருகிட்ட மனசுவிட்டு பேச முடியல. அமைதியா இருந்தேன். முதல் தடவையா அவருக்கு எனக்கு முத்துமாலை காதல் பரிசா வாங்கி கொடுத்தாரு. அதை இன்னும் பத்திரமா வச்சிருக்கேன்" என்றவர், பீரோவை திறந்து அதை எடுத்துக் காட்ட.... ஆவலுடன் அதை மகேஷ் பார்த்தார்.
தொடர்ந்த பேசிய உஷா, "லிமிட்டோடு பழகியும் எங்க காதல் வீட்டுக்கு தெரிஞ்சுட்டு. வீட்ல ஒரே பிரச்னை. காதலுக்கு எங்க அண்ணன்ங்க ஒத்துக்கல. அதுல மூத்த அண்ணனுக்கு காதலன்னா சுத்தமா பிடிக்காது. அதற்குக் காரணம் என் மீது அவருக்கு ரொம்ப பாசம். சின்ன வயசுலேயே பேப்பர், பால் என போட்டு அதுல கிடைக்கிற காசுலதான் எங்கள கஷ்டப்பட்டு படிக்க வச்சாரு. அதையெல்லாம் உணராம நான் காதலிச்சதால அவருக்கு என் மேல கோபம். கடைசி வரை அவர் என்னுடைய காதலுக்கு க்ரீன் சிக்னல் காட்டல. எல்லோர் வீட்லயும் நடக்கிறது மாதிரி எனக்கும் பல ரூபத்தில் பிரச்னை வந்துச்சு. ஆனா மேரெஜ்ன்னு ஒண்ணு நடந்தா அவருடன்தான் என்று பிடிவாதமாக இருந்தேன். வீட்டுக்குள்ளேயே சிறை வச்சதால மகேஷ்கிட்ட இருந்து எனக்கு எந்த தகவலும் வரல. ஒரு நாள் நானும், என்னுடைய ஃபிரண்ட்டும் சேர்ந்து மகேஷ் தங்கி இருந்த ஊரப்பாக்கத்துக்குச் சென்றோம். அங்கு மகேஷ்  அம்மாகிட்டேயே போய் அவரைப் பத்தி விசாரிச்சோம். மகேஷின் அம்மாவுக்கு ரொம்ப ஷாக்.
இந்த சமயத்தில அவரு வீட்டிலிருந்து வெளியே வந்தாரு.  எங்களைப் பார்த்ததும் அவருக்கு ஒண்ணும் ஓடல. பிறகு ஒருவழியா சமாளிச்சு அங்கே இருந்து வண்டலூர் வரைக்கும் மூணு பேரும் நடந்தே வந்தோம். வரும் போது மகேஷ் அம்மாகிட்ட விசாரிச்சத சொல்லி, சொல்லி சிரிச்சோம். இப்ப அதை நினைச்சாலும் சிரிப்புதான் வருது. மகேஷ் வீட்ல எங்க காதல ஏத்துக்கல்ல. இதனால மதுரையிலிருந்து வீட்ட விட்டு சென்னைக்கு வந்துட்டாரு. எங்க சித்திதான் எங்களுக்கு செப்டம்பர் 11, 2000த்துல  திருமணம் செஞ்சி வச்சாங்க. வடபழனி கோயில்ல திருமணம் செஞ்சிட்டு பதிவும் செய்துகொண்டோம்.

அவருக்கு சரியான வேலையும் இல்ல. அவருடைய ஃப்ரண்ட் ஒருத்தருடைய பேச்சுலர் ரூம்ல ஒரு வருஷம் குடும்பம் நடத்தினோம். எங்களுக்குன்னு சொத்து ஒரு பாயும், தலையணையும் மட்டும்தான் இருந்துச்சு. பிறகு அவருக்கு ஓட்டலில் வேலை கிடைச்சது. எனக்கு ஆஸ்பிட்டல ரிசப்னிஸ்ட் வேலை. இரண்டு பேரும் சம்பாதிச்சு உள்ளரகத்தில ஒரு வீட்ல வாடகைக்கு குடிவந்தோம். அப்போதுதான் எங்களுக்கு சூர்யா பிறந்தாள். அடுத்து கைலாஷ் பிறந்தான். அதற்குள் பொருளாதாரத்தில் கொஞ்சம் முன்னேறி விட்டோம். உள்ளரகத்திலேயே ஒரு வீட்டை சொந்தமா வாங்கி குடியேறினோம். இப்போ என்கூடத்தான் எங்க அம்மா இருக்காங்க. எல்லாரையும் அவர் நல்லா கவனிச்சிக்கிறாரு" என்று பெருமையுடன் மகேஷை பார்க்க, அன்பின் வெளிப்பாடாக அவர் அதை ஆமோதித்தார்.
"குடும்பத்தினரின் பிரிவு வராம அவரு என்னை பார்த்துக்கிட்டாரு. ஆறு மாசத்துக்கு முன்பு சூர்யா, பெரிய மனுஷியா ஆனப்போதான் எல்லோரும் எங்க வீட்டுக்கு வந்தாங்க. ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. இன்னமும் தீபன் அண்ணனுக்கு என் மேல வருத்தம்தான். ஆனா அதை வெளிப்படையா இப்போது காட்டுவதில்லை. எனக்குப்பிறகு என்னுடைய இரண்டாவது அண்ணன் புஷ்பராஜும் காதலிச்சு அம்மா, அப்பவோட அனுமதியோடு திருமணம் செஞ்கிட்டாரு. தீபன் அண்ணனுடைய மனைவியின் தம்பியும், தங்கை தேவியும் விரும்பியதும் தெரிந்ததும் வீட்ல திருமணம் செஞ்சி வச்சிட்டாங்க. இப்படி எங்க குடும்பத்தில மூத்த அண்ணணைத் தவிர மற்ற எல்லோருக்கும் காதல் திருமணம்தான்" என்றார் உஷா.

'உஷாவிடமிருந்து பிறந்த அன்பு என்ற மின்னல், என்னில் பிறந்த இன்பம் என்ற இடியும் இணைந்து காதல் மழையானது' என்ற கவிதை வரியுடன் பேசத் தொடங்கினார் மகேஷ்.
"எனக்கு வாழ்க்கைத் துணைவியாக உஷா கிடைச்சது நான் செய்த பாக்கியம் என்றே சொல்ல வேண்டும். எந்த விஷயத்தையும் பொறுமையாகவும், நிதானமாகவும் கையாள்வார். உஷாவின் ஃப்ரண்ட்  என்னை காதலிச்சாலும் அவங்கள எனக்குப்பிடிக்கல. எனக்கு மனசுக்கு பிடித்தது உஷா மட்டும்தான். வீட்ல உஷாவை மறக்க சொன்னாங்க. ஆனா என்னால உஷாவ மறக்க முடியாதுன்னு சொல்லிட்டேன். ஒருக்கட்டத்தில உஷாவா, நாங்களா என்று கூட என்னுடைய பெற்றோர் என்னை மிரட்டினாங்க. அப்போ எனக்கு உஷாதான் முக்கியமுன்னு நினைச்சேன். அதுபோல அவங்களும் நான்தான் முக்கியம் என்று நினைச்சாங்க" என்று காதல் பார்வையோடு உஷாவை மகேஷ் பார்க்க, வெட்கத்தில் உஷாவின் முகம் சிவந்தது.

இதைப்பார்த்து வீடே கலகலப்பானது. சிரிப்பு மழைக்குப் பிறகு மீண்டும் பேசினார் மகேஷ். "ஆரம்ப கட்டத்தில வேலை இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டோம். அதையெல்லாம் என்னுடன் பகிர்ந்து கொண்டாள். அன்பும், ஆதரவும் எங்கள் இருவருக்கும் குடும்பத்திலிருந்து கிடைக்காத போதும் எங்களுக்குள் அந்த இரண்டும் குறையவே இல்லை. எனக்குப் பக்கபலமாக இருந்தவள் உஷா. காதல்ல நம்முடைய தேர்வு ரொம்ப முக்கியம். சரியான ஜோடியை தேர்ந்தெடுக்க வேண்டும். அதோடு கணவன், மனைவி இரண்டு பேருக்குமே ஈகோ இருக்கக் கூடாது. விட்டுக் கொடுத்து வாழந்தால் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். அதைத்தான் நாங்க கடைப்பிடித்து வருகிறோம். 15 வருஷத்துக்குபிறகு பிரிந்து கிடந்த எங்க குடும்பம் சேர்ந்திருப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. என்னுடைய பிள்ளைகளும் சரியான வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுத்து காதலிச்சா கண்டிப்பா நாங்க இருவரும் குறுக்கே நிற்க மாட்டோம்" என்று உஷாவின் முகத்தைப் மகேஷ் பார்க்க, அதை அவரும் சிரிப்பின் வடிவில் உறுதிப்படுத்தினார்.
உஷாவின் அண்ணன் உதவி தலைமை ஆசிரியர் புஷ்பராஜ்.
"உஷா, காதலிச்சு திருமணம் செய்தப்பிறகு எனக்கு பெண் தேடும் படலம் நடந்துச்சு. நானும், என்னுடைய ஃப்ரண்ட் ரவியும் ஒரு திருமண தகவல் மையத்தில இருந்து வில்லிவாக்கத்தில உள்ள நாகஜோதி என்ற பெண்ணுடைய ஜாதகத்தை வாங்கி அந்த வீட்டுக்கு போனில் நானே பேசி,  விவரத்தை சொன்னதும் பெண் பார்க்க வரச்சொன்னங்க. பொண்ணு பார்க்க ரவி கூட பைக்கில போனேன். 15 நிமிஷம் பொண்ணு பார்க்கும் படலம் நடந்துச்சு. குனிந்த தல நிமிராம பச்சை கலர் புடவையில வந்த நாகஜோதி, காபி கொடுத்தாங்க. பொண்ணு வீட்ல எங்க இரண்டு பேர்ல யாரு மாப்பிள்ளன்னு சந்தேகம். கடைசியா நாகஜோதியோட அம்மாவே அத கேட்டுட்டாங்க. உடனே ரவி, எனக்கு கல்யாணமாகிட்டுனு சொல்ல..... எல்லோருக்கும் சிரிப்பு. அப்போ நாகஜோதி சிரிப்பில என்னுடைய மனசை பறிக்கொடுத்துட்டேன். இரண்டு நாளு கழிச்சி ஒரு சிம்கார்டை நாகஜோதியிடம் கொடுத்தேன். இரண்டு பேரும் நைட் இரண்டு மணி வரைக்கும் பேசுவோம். நேரம் போகுறதே தெரியாது.
ஃபர்ஸ்ட் டைம்மா ப்ளூ கலர் பட்டுப் புடவைய காதல் பரிசா வாங்கி கொடுத்தேன். அப்போ அவங்க முகம் ஆயிரம் வால்ட்ஸ் பல்ப் போல மின்னியது. அந்த முகத்த இதுவரைக்கு நான் பார்க்கல" என்று ஜோதியை புஷ்பராஜ் பார்க்க..... சும்மா இருங்க.... என்று செல்லமாக அவர் கோபித்தார்.

"எங்களுடைய காதல் விவகாரம் வீட்டுக்கு தெரிஞ்சதும் கவர்மெண்ட் வேலைப்பார்க்கிற பொண்ணை கல்யாணம் பண்ணச் சொன்னாங்க. ஆனா நான் கட்டினா நாகஜோதியைத்தான் கட்டுவேணுன்னு  பிடிவாதமா சொன்னேன். எல்லாரும் எங்களுடைய காதல புரிஞ்சிகிட்டு, 2005 செப்டம்பர் 14ம் தேதி நிச்சயதார்த்தம் நடத்தி வச்சாங்க. காதலர் தினத்துக்கு நாலு நாளைக்கு முன், 2006 பிப்ரவரி 10ம் தேதி கல்யாணம் நடந்துச்சு. எங்களுக்கு வைஷ்ணஸ்ரீ, காத்தியாயினிஸ்ரீ என இரண்டு பெண் குழந்தைங்க. இரண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சி நடப்பதால வீட்ல சண்டையே கிடையாது.
பொதுவா காதல் மட்டுமே மதம், சாதி என எல்லாத்தையும் மாற்றக்கூடியது என காதல் புகழ் பாடி பாடம் எடுத்ததைத் ரசித்துக் கேட்ட நாகஜோதி, "என்னை பொண்ணு பார்க்க சார் (புஷ்பராஜ்) வந்தப்பவே முடிவு செஞ்சிட்டேன். அவருடைய காதல் பார்வையிலே அன்னைக்கே விழுந்துட்டேன். எல்லாத்தையும் என்கிட்ட சொல்லிடுவாரு. அதனால அவர எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் வாங்கி கொடுத்த செல்போன் ஸ்டேண்டை இதுவரைக்கும் பத்திரமா வச்சிருக்காரு. ஒவ்வொரு காதலர் தினத்துக்கும் சேலை பரிசா வாங்கி கொடுத்திடுவாரு. ஆனா இப்ப எல்லாம் என்னுடைய பரிசே சாருக்கு வேற (முத்தம் மட்டும் தான் என்று) புஷ்பராஜைப் பார்த்து நாகஜோதி கண்அடிக்க... இருவரும் பத்து ஆண்டு ஃப்ளாஸ்பேக்கில் காதலர்களாக மாறி கனவில் மூழ்க...  'அம்மா' என்று காத்தியாயினி குரல் கொடுக்க..... இருவரும் நிஜவுலகுக்கு வந்தனர்.

காதல் கயிற்றால் அந்த குடும்பங்கள் கட்டப்பட்டு இருப்பதால் கவலைக்கு அங்கு இடமில்லை!

-எஸ்.மகேஷ்

படங்கள்:
சரவணக்குமார், மி.நிவேதன்

கருத்துகள் இல்லை: