வெள்ளி, 30 மே, 2014

கட்சிக்கு சம்பந்தமில்லாதவர்கள் வேட்பாளர்களா? தோல்விக்கு பின் கொந்தளிக்கும் தி.மு.க.,வினர்

லோக்சபா தேர்தலில் தி.மு.க, தமிழகம் முழுவதும் படுதோல்வியடைந்ததால், கட்சியினர் கடும் சோகத்தில் தத்தளித்து வருகின்றனர். இவர்களை உசுப்பி விடும் வேலையில், தி.மு.க., தலைமையும் மாவட்ட நிர்வாகங்களும் ஈடுபட்டு வருகின்றன.வரும் ஜூன் 3ம் தேதி, தி.மு.க., தலைவர் கருணாநிதியின், 91வது பிறந்த நாள் வருகிறது. அந்த நாளை, இந்த முறையும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என, மாவட்ட நிர்வாகங்களுக்கு, தி.மு.க., தலைமை உத்தரவிட்டிருக்கிறது. தேர்தல் தோல்வி குறித்து ஆராயவும், கருணாநிதியின் பிறந்த நாள் விழாவை சிறப்பாக நடத்துவதற்கும், தமிழகம் முழுவதும் கட்சியின் மாவட்ட நிர்வாகங்கள், மாவட்டம் தோறும் செயல் வீரர்கள் கூட்டத்தை கூட்டி வருகின்றன. அந்த வகையில், திருநெல்வேலி மாவட்ட தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டம் நேற்று, நெல்லை ஆரியபவன் ஓட்டலில் நடந்தது. தி.மு.க.,வினர் பெரும் திரளாக கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், கட்சியின் தோல்வி குறித்து காரசார விவாதங்கள் நடந்தன.  ஸ்டாலின் திருந்தாத வரையில்  கழகத்துக்கு மீட்சி இல்லை 
கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய, கட்சியின் முன்னாள் எம்.பி., சிவப்பிரகாசம், திருநெல்வேலி தொகுதியில் தி.மு.க., தோற்றதற்கான காரணத்தையும், தன் ஆதங்கத்தையும் கொட்டி, பேசிய தகவல் வெளியாகி இருக்கிறது.



சிவப்பிரகாசம் பேசியதாவது:

தி.மு.க., என்னும் மாபெரும் இயக்கம் எத்தனையோ தோல்வி களை சந்தித்திருக்கிறது. ஆனால், ஒரு போதும், அதன் ஓட்டு வங்கி யில் சரிவு ஏற்பட்டதில்லை. ஆனால், இந்த முறை, எதிர்பார்க்காத அளவுக்கு நாம், தோல்வியை சந்தித்திருக்கிறோம். எதிர்பார்க்காத அளவுக்கு அ.தி.மு.க., வெற்றியடைந்திருக்கிறது. இதற்கு என்ன காரணம் என்பதை, ஆழமாக நாம் பார்க்க வேண்டும். இனியும் நாம் தோல்வி பாதையில் செல்லக் கூடாது. தோல்வி தொடர்கதையாக இருக்கக் கூடாது. தோல்வியில் இருந்து மீள்வதற்கான பாடத்தை நாம் கற்றுக் கொள்ள வேண்டும். இந்த முறை தேர்தலில் நாம் தோற்றதற்கான பிரதான காரணம், வேட்பாளர்கள் தேர்வு தான். கட்சிக்கு சம்பந்தமில்லாதவர்களை எப்படி வேட்பாளர் ஆக்கினார்கள். திருநெல்வேலி தொகுதி, தி.மு.க.,வுக்கு சாதகமான தொகுதிதான். இந்த முறை வேட்பாளர் தேர்வில் சரியான அணுகுமுறை இருந்திருந்தால், கட்டாயம் கட்சி வெற்றி அடைந்திருக்கும். தேவதாச சுந்தரம் என்பவரை வேட்பாளராக்கி, அவருக்கு ஓட்டுப் போட வேண்டும் என்றால், யார் ஓட்டளிப்பர். இரண்டு முறை, இதே தொகுதியில் எம்.பி.,யாக இருந்தவரும், சேரன்மாதேவி தொகுதியில் ஒரு முறை எம்.எம்.ஏ.,வாகவும் இருந்த என்னை சந்தித்து, ஆதரவு கேட்கவில்லை. அப்படிப்பட்டவருக்கு நான் எப்படி உணர்வு ரீதியாக, தேர்தல் வேலை பார்க்க முடியும்.



பிரதான காரணம்:

என் நிலையில் தானே, கட்சி யில் சீனியர்களாக இருக்கும், அத்தனை பேரும் இருந்திருப்பர். கட்சி தோல்வியடைந்ததற்கான பிரதான காரணங்களில், இதுவும் ஒன்று. இவ்வாறு, சிவப்பிரகாசம் பேசினார்.

இதற்கு பதிலளித்து, திருநெல்வேலி மாவட்ட தி.மு.க., செயலர் கருப்பசாமி பாண்டியன் பேசியதாவது: சிவப்பிரகாசம் போன்றவர்களின் நிலை, பலருக்கும் ஏற்பட்டது நிஜம் தான். மறுக்கவில்லை. இந்த முறை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அவ்வளவு பேரையும், கட்சித் தலைமை தான் தேர்வு செய்தது. எந்த முகாந்திரத்தின் அடிப்படையில், வேட்பாளர்களை தேர்வு செய்தனர் என, தெரியாது. கடந்த முறை கூட இப்படி தான் தேர்வு நடந்தது. கட்சிக்கே சம்பந்தமில்லாத நடிகர் ரித்தீஷை, ராமநாதபுரம் தொகுதியின் வேட்பாளர் ஆக்கினர். அதற்கு முந்தய தேர்தலில், திருச்செந்தூர் தொகுதியில் ராதிகா செல்விக்கு வாய்ப்பளித்தனர். பின், அவரை மத்திய அமைச்சராகவும் ஆக்கினர். கட்சிக்கு மக்கள் மத்தியில், அப்போது வரவேற்பு இருந்த சூழ்நிலை யில், தலைமையின் வேட்பாளர் தேர்வு வெற்றியடைந்தது. கட்சிக்கு இப்போது சோதனையான காலம் என்பதால், தலைமையின் தேர்வு தோல்வியடைந்து விட்டது. சிவப்பிரகாசம் போன்றவர்களின் கருத்துக்கள், உணர்வுகள் தலைமையிடம் எடுத்துச் செல்லப்படும். மற்றபடி, வேட்பாளர் தேர்வுக்கும் மாவட்ட நிர்வாகத்துக்கும், எந்த சம்பந்தமும் இல்லை. இவ்வாறு, அவர் பேசினார்.

- நமது நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை: