புதன், 28 மே, 2014

300 மாணவிகள் இருக்கும் இடம் தெரிந்தது.. தயங்கும் நைஜீரிய ராணுவம் !

அபுஜா: கடுமையான ஆயுதங்களைப் பயன்படுத்தி கடத்தப்பட்ட மாணவிகளை மீட்கிறோம் எனப் போராடி அவர்களை தீவிரவாதத்திற்குப் பலி கொடுக்க நாங்கள் விரும்பவில்லை என நைஜீரிய ராணுவத் தலைமைத் தளபதி தெரிவித்துள்ளார். நைஜீரியாவில் போகோ ஹரம் என்ற தீவிரவாதிகள் தனி நாடு கோரி தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் அங்கு பள்ளி மாணவிகள் சுமார் 300 பேர் போகோ ஹரம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டனர். அவர்களில் சுமார் 53 மாணவிகள் தப்பி வந்து விட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனினும் மீதமுள்ள 247 மாணவிகள் இன்னமும் தீவிரவாதிகள் வசம் உள்ளனர். 300 மாணவிகள் இருக்கும் இடம் தெரிந்தது.. அதிரடி மீட்பு பணியில் இறங்க தயங்கும் நைஜீரிய ராணுவம் கடத்தப்பட்ட மாணவிகளை பாலியல் அடிமைகளாக விற்கப் போவதாக தீவிரவாதிகள் எச்சரித்திருந்தனர். பின்னர், சிறையில் உள்ள தங்களது இயக்கத்தவர்களை விடுவித்தால் அம்மாணவிகளை விட்டு விடுவதாக நிபந்தனை விதித்தனர். ஆனால், அதற்கு நைஜீரிய அரசு உடன்படவில்லை. அதற்குப் பதிலாக, மாணவிகளை மீட்கும் பணியை அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளின் உதவியோடு நைஜீரியா மேற்கொண்டு வருகிறது. பள்ளி மாணவிகளை கடத்திய போகோ ஹரம் தீவிரவாதிகள் மீது போர் நடவடிக்கை எடுக்க நைஜீரியா உள்பட நான்கு ஆப்பிரிக்க நாடுகள் முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் மாணவிகள் இருக்கும் இடம் ராணுவத்துக்கு தெரியவந்துள்ளது. ஆனாலும் மீட்கும் முயற்சியில் நிதானமாக செயல்பட்டு வருவதாக அந்நாட்டு ராணுவத் தலைமைத் தளபதி அலெக்ஸ் படே தெரிவித்துள்ளார். நைஜீரியாவின் தலைநகரான அபுஜாவில் பாதுகாப்புத் துறை தலைமையகத்தில் அந்நாட்டு பாதுகாப்பு வீரர்களை வரவழைத்து அணிவகுப்பு நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்து கொண்ட அலெக்ஸ், பாதுகாப்பு வீரர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது :- நைஜீரிய படையால் நிச்சயமாக மாணவிகளை மீட்க இயலும். ஆனால், எங்களின் அவசரம் மாணவிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவித்து விடக் கூடாது என்பதில் நாங்கள் கவனமாயிருக்கிறோம்' என்றார். அதனைத் தொடர்ந்து, கூட்டத்தினரைப் பார்த்து, ‘நாம் நினைத்தால் மாணவிகளை மீட்க முடியுமா... முடியாதா? என கேள்வி எழுப்பினார். அதற்கு அவர்கள், ‘நிச்சயமாக முடியும்' என கோரசாக பதிலளித்தனர். ‘ஆனால், நாம் நமது பலத்தைக் காட்டினால் என்னவாகும்?' என மீண்டும் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர்கள் மாணவிகளை இழக்க வேண்டி வரலாம்' என பதிலுரைத்தனர். இந்த நிகழ்ச்சி மூலம் கடத்தப்பட்ட மாணவிகளின் இடத்தை நெருங்கி விட்ட போதும், மாணவிகளின் நலனைக் கருத்தில் கொண்டு நிதானமாக செயல்பட்டு வருவதாக நைஜீரியா காட்டிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
/tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: