ஸ் – அதி இனிப்பும், உயர் குளிரும் கொண்ட உறைந்த பனிக்கூழ் கட்டி, கோடை காலத்தில் குழந்தைகளின் மனதைக் கவர்ந்த பண்டம். விரைவில் உருகும் பொருள் என்றாலும் குழந்தைகள் அதிகம் அடம்பிடிக்கும் தீனியும் கூட.
ஆனால் மீடியாக்களின் தயவில் படையெடுக்கும் காவி ஐஸ்?
எஸ்.ஏ.கிருஷ்ணா
குழந்தைக்கு பெயர் சூட்டிய பா.ஜ.கவின் எஸ்.ஏ.கிருஷ்ணா
“நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே” என்ற திருவிளையாடல் டிஎம்எஸ் பாட்டை உண்மையென நம்பும் பக்தர்கள் இப்போதுமிருக்கிறார்கள். ஒருக்கால் அந்த உண்மையை ஏற்றுக் கொண்டு மனித இதயங்கள் சில மணித்துளிகளுக்கு துடிப்பை நிறுத்தினால் சங்கூதுவதற்கு காக்காய் கூட இருக்காதே?
மோடி பிரதமராக பதவியேற்ற பிரம்ம முகூர்த்த நேரத்தில், உலகம் தனது இயக்கத்தை நிறுத்திக் கொள்ளாமல் தொடர்கிறது. இதையெல்லாம் ஏதோ அறிவியல் உண்மை போல சொல்லும் அவலத்தில் வினவு இருக்கிறது.

விட்டுத் தொலையுங்கள். மோடி பதவியேற்பு நேரத்தில் கோடிக்கணக்கானோர் யூரின் போகலாம், ஃபாரின் பறக்கலாம், பாருக்குள் கிடக்கலாம், அல்லது போர் கூட அடிக்கலாம். இதனால் மோடி முகூர்த்த நேரத்தில் ஒன்னுக்கடித்தவர்களுக்கு, மோடி பெயரிட்ட ஜாக்கி பிராண்ட் ஜட்டி இலவசம் என்று கொண்டாடினால் என்ன சொல்வீர்கள்?
மோடி பிரதமரான நேரத்தில் மைசூரில் உள்ள அரசுக்கு சொந்தமான செலுவம்பா மகப்பேறு மருத்துவமனையில் இரு குழந்தைகள் பிறந்துள்ளன. ஒன்று பெண், மற்றது ஆண். இதை ஆள் போட்டு தெரிந்து கொண்ட முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், பாஜக தலைவருமான எஸ்.ஏ.ராமதாஸ் தனது ஆதரவாளர் படை சூழ பிரசவ வார்டுக்கு படையெடுக்கிறார். அனைவருக்கும் இனிப்பு வழங்குகிறார்.
பிறகு அவரது படையாட்கள் வேண்டுகோள் விடுக்க பெற்றவர் சம்மதம் கேட்காமல் இரு குழந்தைகளுக்கும் நரேந்திர கிருஷ்ண மோடி, தன்மயி மோடி என பெயர் சூட்டுகிறாராம். பச்சிளம் குழந்தைகளுக்கு கண்ணைப் பறிக்கும் காவி நிற உடைகளை வழங்கி வேறு அச்சுறுத்தியிருக்கிறார்.
இனிப்பு வழங்கி, பெயர் சூட்டினால் மட்டும் மீடியாவின் கவரேஜுக்கு போதுமானதில்லை என்பதால் அந்த குழந்தைகளின் முழுக்கல்வி செலவையும் ஏற்பதாக அறிவித்தார். போனசாக அந்த குழந்தைகளின் பெற்றோருக்கும் விரைவில் நல்ல வேலை ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார். இறுதியில் அந்த குழந்தைகள் மோடி போல நாட்டை ஆளும் வல்லவர்களாக வளர வாழ்த்து தெரிவித்து நடையைக் கட்டினார்.
இது இங்கிலீஷ் ஹிந்து, டெக்கான் குரோனிக்கிளில் இன்னும் மேம்பட வந்திருக்கிறது. அதாவது பெற்றோரே மோடி பெயர் சூட்டி அது தெரிந்து ராம்தாஸ் வந்து பாராட்டியதாக எழுதியிருக்கிறார்கள். என்ன இருந்தாலும் இவர்கள் அளவுக்கு யாரும் ‘கவர்’ பண்ண முடியாது. (இங்கிலீஷ் ஹிந்துவில் இரண்டு குழந்தைகளுமே ஆண் குழந்தை என்று எழுதியிருக்கிறார்கள்).
தமிழ் இந்துவிலோ இந்த செய்தியை கொஞ்சம் உண்மையாக தெரியாத்தனமாக வெளியிட்டுவிட்டார்கள். அதன்படி, இரு குழந்தைகளின் பெற்றோரும் தமது விருப்பத்திற்கு மாறாக மோடி பெயர் சூட்டிய ராம்தாஸ் மீது போலீசில் புகார் அளித்துள்ளனர்.
குழந்தைகள்பெண் குழந்தையின் தந்தையான மஞ்சுநாத் கவுடா பேசும் போது, தான் மருந்து வாங்க வெளியே சென்றிருக்கும் போது யாரிடமும் அனுமதி கேட்காமல் தன் குழந்தைக்கு தன்மயி மோடி என்று பெயர் சூட்டியிருக்கிறார் இந்த ராமதாஸ் என்று கோபப்பட்டிருக்கிறார். மேலும், “ஏற்கனவே பெண்கள் விவகாரத்தில் சிக்கிய இவர் மீது ஏகப்பட்ட அவப்பெயர்கள் இருக்கிறது. இந்த பேர்வழியா எனது குழந்தைக்கு பெயர் சூட்டுவது” என்று எகிறியிருக்கிறார்.
கூடவே, “எனது தாயார்  பெயரையே குழந்தைக்கு சூட்ட நினைத்தேன். இப்போது மருத்துவமனை பதிவேடுகளிலும் ராமதாஸ் சூட்டிய பெயரே உள்ளது. அதனால்தான் புகார் கொடுத்தேன்”, என்றிருக்கிறார். மோடியின் தாயார் லட்டு ஊட்டியதை மோமெண்ட் ஆஃப் இந்தியா என்று உருகியவர்கள் இங்கே ஒரு ஏழை இந்தியன் தனது தாயார் பெயரை சூட்ட முடியாமல் போனதை எப்படி விளிப்பார்கள்?
இந்தக் குழந்தைகளின் பெற்றோர் கூலி வேலை செய்து பிழைப்பவர்கள். அவர்கள் வாழ்வில் மோடி என்ற பெயரையும் அதன் மீடியா ஜாக்கி பரிமாணத்தையும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு வந்தவர்களுக்கு மோடி பதவியேற்போ இல்லை ஒபாமா வாழ்த்தோ எல்லாம் கேள்விப்படுவதற்கு கூட சாத்தியமற்ற ஆடம்பரம்.
இந்த மைனர் ராமதாஸ் எதற்கய்யா அரசு மருத்துவமனைகளுக்கு வந்தார்? அப்பல்லோ போன்ற மோடியின் வர்க்கம் பாதுகாப்பாக சிகிச்சை பெறும் கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கு சென்று அங்கிருக்கும் மேட்டுக்குடி குலக் கொழுந்துகளுக்கு மோடி என்று பெயரிட்டால் பொருத்தமாகவும் இருக்கும். ஆனால் அப்படி சென்று பெயரிட்டால் என்ன நடக்கும்? பிசா வர்க்கம் பிய்த்து உதறிவிடும்.
கட்சிகளின் விளம்பரத்திற்கு ஏழைகள்தான் பலிகடாக்கள் என்றாலும் பெற்ற குழந்தைகளுக்கு பெயர் வைக்க உரிமை இல்லை, போலீஸ் புகார் என்று இதுவரை அம்மா ஆட்சியில் கூட நடந்ததில்லை.
புரட்சித் தலைவி ‘அம்மா’வின் அடிமைகள் கூட தங்களைத்தான் இடுப்பு ஒடிய சித்திரவதை செய்து கொள்கிறார்கள். கட்அவுட்டோ, சுவரோட்டியோ, எல்லாம் அவர்கள் உலகோடு முடிகிறது. ஜெயாவின் பிறந்த நாளுக்கு போக்குவரத்து தொழிலாளிகளின் ரத்தத்தை தானமாக வாங்கி கின்னசில் கொடி பறக்கச் செய்த அமைச்சர் செந்தில் பாலாஜி கூட நல்ல வேளை கிட்னியை எடுக்கவில்லை. அல்லது ஒரு இலட்சம் தொழிலாளிகள் தமது குழந்தைகளுக்கு ஜெயா, ஜெயவர்மன் என்ற பெயர்களை சூட்டினார்கள் என்றெல்லாம் போகவில்லை.
ஆனால் பாசிஸ்டுகளை எப்படி குளிர்வித்தாலும் அவர்களது நார்சிச பசி அடங்காது. அது தமிழகத்தின் தலைவிக்கே இப்படி இருக்குமென்றால் இந்தியாவின் தலைவருக்கு எப்படி இருக்கும் என்பதை சென்னை – தில்லி தூரத்தால் பெருக்கிக் கொள்க.
பாஜக மைனர் ராமதாஸ், மோடியின் குட்புக்கில் இடம்பிடிக்க, இரு ஏழைகளின் எளிய மகிழ்ச்சியான குழந்தைகளின் பெயர் சூட்டும் உரிமையை அதுவும் ரெண்டு லட்டு போட்டு பிடுங்கிக் கொண்டார் என்றால்……
மோடி பிரதமர் பதவியேற்றால் நான் நாட்டை விட்டு வெளியேறுவேன் என்று இதே பெங்களூருவில் சொன்ன யூ.ஆர்.அனந்த மூர்த்தியின் வாக்கு சத்தியம் என்பதை இப்போதாவது நம்புகிறீர்களா? vinavu.com