வெள்ளி, 30 மே, 2014

லக்னோ: பலாத்காரம் செய்து, கொன்று மரத்தில் தொங்க விடப்பட்ட சிறுமிகள்... சாதி வெறியின் கொடூரம்

லக்னோ: உ.பியில் உள்ள ஒரு கிராமத்தில் சாதி வெறி காரணமாக இரண்டு
சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து மாமரத்தில் தொங்க விட்டுள்ளனர் சாதி வெறியர்கள். இந்த கொடும் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாதவ் இனத்தைச் சேர்ந்த சாதி வெறியர்கள் செய்த அட்டூழியம் இது என்று அச்சிறுமிகளின் தந்தை குமுறியுள்ளார். இந்த சிறுமிகளுக்கு வயது 15 மற்றும் 14 ஆகும். இருவரும் சகோதரிகள். கிராமத்தில் உள்ள மாமரத்தில் இருவரின் உயிரற்ற உடல்களும் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. புதான் மாவட்டம், கத்ரா ஷதாத் கஞ்ச் என்ற கிராமத்தில்தான் இந்த அட்டூழியம் நடந்துள்ளது. இருவரும் முதலில் பலாத்கராம் செய்யப்பட்டுள்ளனர். பின்னர் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளனர். பிறகு உடல்களை மாமரத்தில் தொங்க விட்டுள்ளனர். சாதி வெறி தலை விரித்தாடும் முக்கியமான மாநிலங்களில் ஒன்று உ.பி.
இங்கு மத ரீதியாக, சாதி ரீதியாக வெறியர்கள் ஆட்டம் கட்டுக்கடங்காத நிலையே இன்னும் காணப்படுகிறது. குறிப்பாக சாதி வெறியர்கள் இந்த மாநிலத்தில் அதிகம். மேலும் மதம், சாதி ரீதியிலான வன்முறைகள், கலவரங்களுக்கும் பெயர் போனது உ.பி. தற்போது நடந்துள்ள இந்த சிறுமிகளின் கொலை விவகாரத்தில் 2 போலீஸ் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தக் கொடூரச் சம்பவம் குறித்து அச்சிறுமிகளின் தந்தை கூறுகையில், செவ்வாய்க்கிழமை மாலையில் அப்பகுதியில் உள்ள மாந்தோப்புப் பகுதியில் எனது இரு மகள்களையும் கடைசியாக பார்த்துள்ளனர். அப்போது அவர்களுடன் பப்பு யாதவ் என்பவர் இருந்துள்ளார். மேலும் இரண்டு பேரும் உடன் இருந்துள்ளனர். அவர்கள் அனைவரும் சேர்ந்து எனது மகள்களை அழைத்துக் கொண்டு போனதைப் பார்த்த எனது உறவினர் ஒருவர் அவர்களிடம் சென்று விசாரித்துள்ளார். அப்போது பப்பா யாதவுடன் இருந்த ஒருவர் துப்பாக்கியைக் காட்டி எனது உறவினரை மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன எனது உறவினர் அங்கிருந்து ஓடி வந்து விட்டார். என்னிடம் வந்து தெரிவித்தார். நான் உடனடியாக போலீஸில் புகார் கூறினேன். ஆனால் அவர்களோ குற்றவாளிகளுக்கு ஆதரவாகவே பேசினர். என்னையும் தரக்குறைவாக நடத்தினர். அடுத்த நாள் காலையில் எனது இரு மகள்களும் பிணமாக மரத்தில் தொங்கிய நிலையில் காணப்பட்டனர் என்றார் கண்ணீர் வடித்தபடி. இந்த சம்பவம் அக்கிராமத்தில் பெரும் கோபத்தையும், கொந்தளி்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இரு சிறுமிகளும் சார்ந்த தலித் சமுதாயத்தினர் பெரும் அதிர்ச்சியிலும், கோபத்திலும் ஆழ்ந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் காட்டி வரும் அலட்சியமும் அவர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. இதையடுத்து போலீஸார் துரிதமாக நடவடிக்கையில் இறங்கி தற்போது நான்கு பேரைக் கைது செய்துள்ளனர். இதில் ஒருவர் போலீஸ் அதிகாரி ஆவார். மற்றொரு போலீஸ் அதிகாரி தலைமறைவாக உள்ளதாக மாவட்ட எஸ்.பி. உதய் ராஜ் சிங் கூறியுள்ளார்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: