செவ்வாய், 27 மே, 2014

மனம்: ஜென்ம ஜென்மமாய் தொடரும் காதல் ! அக்கிநேனு குடும்பத்தின் கனவு திரைப்படம்

பெற்றோரின் இளம் வயது ரொமான்ஸை பிள்ளைகள் காணும் சந்தர்ப்பம் நம் சமூகத்தில் குறைவு. நமக்கு நன்கு நினைவு தெரிகிறபோது அப்பாவுக்கு காதோரத்தில் நரையும், பின் தலையில் சொட்டையும் விழுந்துவிடுகிறது. தளர்ந்துபோன அம்மா மூட்டுவலியால் அவதிப்படுகிறார். இரத்த அழுத்தம் சோதிக்க அடிக்கடி மருத்துவரிடம் போகிறார். குடும்பப் பிரச்சினைகள் காரணமாக இருவரும் இணக்கமாக பேசிக்கொள்வதை காட்டிலும் ஒருவர் மீது ஒருவர் ’சுள்’ளென்று எரிந்துவிழும் காட்சிகளைதான் அதிகம் காண நேரும். இளம் வயது அம்மாவும், அப்பாவும் ‘ஐ லவ் யூ’ சொல்லிக்கொண்டு மரத்தை சுற்றி ‘டூயட்’ பாடுவதை அவர்கள் பெற்ற குழந்தைகள் காணக்கூடிய வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும்?


நடைமுறைக்கு சாத்தியமில்லை என்றாலும் ஜஸ்ட் கற்பனை செய்து பாருங்கள். இந்த அழகான கற்பனையைதான் திரையில் ஓட்டியிருக்கிறார் இயக்குனர் விக்ரம் குமார். தமிழில் ‘அலை’ என்றொரு மொக்கைப் படத்தை எடுத்தவர். அடுத்து மாதவனை வைத்து அவர் இயக்கிய ‘13-பி யாவரும் நலம்’, நீண்டகாலத்துக்கு பிறகு தமிழில் வெளிவந்த வெற்றிகரமான பேய்ப்படம். தெலுங்கில் இவர் இயக்கிய ‘இஷ்க்’, இந்த தலைமுறையின் இதயத்தை திருடாதே. தொடர் தோல்வியால் துவண்டுப் போயிருந்த நடிகர் நிதினுக்கு கம்பேக்.

அக்கினேனி குடும்பத்தைச் சார்ந்த நாகார்ஜூனாவுக்கு ஓர் ஆசை. அப்பா நாகேஸ்வரராவ் நாடறிந்த நடிகர். தேவதாஸை மறக்க முடியுமா? சென்னையில் இயங்கிக் கொண்டிருந்த தெலுங்கு திரையுலகத்தை, அன்னபூர்ணா ஸ்டுடியோ மூலமாக ஹைதராபாத்துக்கு ‘ஷிப்ட்’ செய்தவர் அவர்தான். நாகார்ஜூனாவும் வெற்றிகரமான நடிகராக தென்னிந்தியாவில் அறியப்பட்டாயிற்று. அக்கினேனேனி குடும்பத்தில் அவரது இரண்டாம் மனைவியாக இணைந்த அமலாவும் பெரிய நடிகை. அடுத்த தலைமுறையாக அவரது மகன் நாக சைதன்யாவும் ஆறேழு படங்களில் நடித்துவிட்டார். இளையமகன் அகிலும் தடாலடி என்ட்ரிக்காக வரிசையில் காத்து நிற்கிறார். எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக அடுத்தடுத்து மூன்று தலைமுறையாக ஆந்திராவில் கலைச்சேவை செய்யும் அக்கினேனி குடும்பத்தின் பெருமையை பறைசாற்றும் விதமாக ஒரு படம். இதில் மூன்று தலைமுறை நடிகர்களின் திறமையும் வெளிப்பட வேண்டும்.

தன்னுடைய இந்த கனவுப்படத்துக்கு இயக்குனர்களிடம் ’ஸ்க்ரிப்ட்’ கேட்க ஆரம்பித்தார். ஏகப்பட்ட பேர் கதை சொன்னார்கள். எல்லாமே சாதாரணமானதாக நாகார்ஜூனாவுக்கு தோன்றியது. அப்போது ‘இஷ்க்’ பெரிய ஹிட். எனவே விக்ரம்குமாரிடமும் கதை சொல்ல சொன்னார். அவர் சொன்ன லைன் நன்றாக இருக்கவே, டோலிவுட்டின் எஸ்.பி.எம்.மான ராகவேந்திராராவிடம் இந்த கதையை எடுக்கலாமா என்று நாகார்ஜூனா ஆலோசித்தார். “ரொம்ப சிக்கலான கதையா இருக்குப்பா. கொஞ்சம் சிம்ப்ளிஃபை பண்ணி பண்ணச் சொல்லு. நல்லா வரும்” என்றார் அவர்.

ஓராண்டு உழைப்புக்கு பிறகு விக்ரம்குமார் திரைக்கதையாகவே சுமார் இரண்டரை மணி நேரம் விவரித்த கதை நாகார்ஜூனாவுக்கு அப்படியே ஓக்கே. “அப்பா கிட்டேயும் சொல்லிடுங்களேன்”. தொண்ணூறு வயது நாகேஸ்வரராவ் பொறுமையாக கதை கேட்டார். ஒவ்வொரு காட்சியையும் திரும்பத் திரும்ப சொல்லச் சொல்லி மனதுக்குள் ஏற்றிக்கொண்டார். சொல்லி முடிக்க விக்ரமுக்கு ஆறு மணி நேரம் ஆயிற்று. “எல்லாம் சரியா வந்திருக்கு. ஆனா காமெடி குறைச்சல். சீரியஸான சிக்கலான கதை. காமெடியா சொன்னாதான் எடுபடும். நான் பெரிய ஆளுன்னுலாம் நினைக்காம என்னையும் காமெடியன் ஆக்கிடு. என் பேரன் சைதன்யா சகட்டு மேனிக்கு என்னை நாஸ்தி பண்ணுறமாதிரி சீன் ரெடி பண்ணு” என்றுகூறி ஸ்க்ரிப்ட்டை ஓக்கே செய்தார். படத்துக்கு டைட்டில் வைத்தவரும் நாகேஸ்வரராவ்தான். அக்கினேனி குடும்பம் ஒட்டுமொத்தமாக இணைந்து ‘நாம்’ என்று சொல்வதைப் போன்ற பொருள் வரும்படி ‘மனம்’ என்று பெயர் வைத்தார். தனக்கு மிகவும் பிடித்த நடிகரான அமிதாப் படத்தில் ஒரு காட்சியாவது வரவேண்டும் என்று நாகேஸ்வரராவ் கண்டிஷனே போட்டார். பொருத்தமான வேடம் எதுவும் இல்லையென்றாலும் தன் மருமகள் அமலா, இன்னொரு பேரன் அகில் ஆகியோரையும் திரையில் காட்டியாக தெரிந்தாகவேண்டும் என்று இயக்குனரை வற்புறுத்தினார்.

தமிழில் முன்பு ‘பிராப்தம்’ என்று சாவித்திரி தயாரித்த திரைப்படம், சிவாஜியின் நடிப்பில் வெளிவந்து படுதோல்வி அடைந்தது. அந்த கதையையே கொஞ்சம் பட்டி தட்டி கமர்ஷியல் டிங்கரிங் செய்தால் ‘மனம்’ ரெடி.

இந்தியாவின் நெம்பர் ஒன் தொழிலதிபரான நாகேஸ்வரராவ் (படத்தில் நாகார்ஜூனா) யதேச்சையாக இறந்துப்போன தன்னுடைய தந்தையின் அசலான உருவத்தில் இருக்கும் ஓர் இளைஞனை (நாக சைதன்யா – படத்தில் இவர் பெயர் நாகார்ஜுனா) விமானப் பயணத்தில் சந்திக்கிறார். அவரை அப்பாவென்று அழைத்து அவருடன் நட்பை ஏற்படுத்திக் கொள்கிறார். அப்பா மறுபடியும் பிறந்திருக்கிறார் என்றால், அம்மாவும் பிறந்திருக்க வேண்டுமே என்று அம்மாவை தேடுகிறார். அம்மாவான சமந்தாவையும் கண்டடைகிறார். இருவரையும் காதலிக்க வைத்து மகிழ்ச்சியாக வாழவைக்க வேண்டுமென பிரயத்தனப்படுகிறார். ஆனால் போன ஜென்மத்து நினைவுகள் வந்துவிடுவதால், அப்போது சைதன்யா மீது பெரும் கோபம் கொண்டிருந்த சமந்தா, இந்த ஜென்மத்திலும் தொடர்கிறார். இதற்கிடையே நாகார்ஜூனாவுக்கு ஒரு பெண் டாக்டரை கண்டதுமே இதயம் ‘லவ்டப்’ என்று ஆட்டோமேடிக்காக அடித்துக் கொள்கிறது. டாக்டரான ஸ்ரேயாவுக்கும் அதே ‘லவ்டப்’தான். இருவரும் முன்பின் ஒருவரையொருவர் அதுவரை பார்த்துக் கொண்டதில்லை. ஸ்ரேயா பணியாற்றும் மருத்துவமனையில் நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருக்கும் தொண்ணூறு வயது பெரியவர் சைதன்யாவுக்கு (நாகேஸ்வரராவ்) இவர்கள்தான் இளம் வயதிலேயே இறந்துபோன தன்னுடைய அம்மாவும், அப்பாவும் என்று தெரிந்துவிடுகிறது. இவர்களை சேர்த்துவைக்க அவர் மெனக்கெடுகிறார்.

இரண்டு தம்பதியினருக்கும் ஒரு யதேச்சையான ஒற்றுமை. எண்பதுகளில் நாகார்ஜூனாவின் அப்பா சைதன்யாவும், அம்மா சமந்தாவும் கார் விபத்தில் இறக்கிறார்கள். அதற்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே நாகேஸ்வரராவின் தந்தை நாகார்ஜூனாவும், தாய் ஸ்ரேயாவும் அதேபோன்ற கார்விபத்தில் மரணமடைகிறார்கள். இரு விபத்துமே நடந்த இடம் மணிக்கூண்டு அமைந்திருக்கும் ஒரு டிராஃபிக் சிக்னல்தான்.

இந்த ஜென்மத்திலும் அதே ஜோடிகள் அதே இடத்தில் மரணமடையப் போகிறார்கள் என்பதற்கான அடையாளங்களை பரஸ்பரம் நாகார்ஜூனாவும், நாகேஸ்வரராவும் உணர்கிறார்கள். தங்கள் பெற்றோரை காப்பாற்றுவதற்காக, விதியை வெல்ல முயற்சிக்கிறார்கள். உணர்ச்சிப்பூர்வமான க்ளைமேக்ஸோடு படம் முடிகிறது.

கதையை கேட்டால் தலை சுற்றும். இந்த கிறுகிறுப்பு எதுவுமின்றி கிட்டத்தட்ட மூன்று மணி நேரங்களுக்கு ரசிகர்களை சிரிக்க வைத்து இயக்கியிருப்பதில்தான் விக்ரம்குமாரின் வெற்றியே அடங்கியிருக்கிறது. க்ளைமேக்ஸில் ஆக்சிடெண்ட் நடக்கும் தேதி பிப்ரவரி 14, 2014. ஆனால் நிஜத்தில் ஜனவரி 22, 2014 அன்றே நாகேஸ்வரராவ் காலமாகி விட்டார். க்ளிஷேதான். ஆனால், லைஃப் ஈஸ் ஆல்வேஸ் ஸ்ட்ரேஞ்சர் தன் ஃபிக்‌ஷன்.

அக்கினேனி குடும்பத்தின் ஆதிக்கம்தான் படம் முழுக்க என்றிருந்தாலும் அசத்தியிருப்பவர்கள் சமந்தாவும், ஸ்ரேயாவும். ஆறு வயது குழந்தையின் அம்மாவாக, கணவருடன் கருத்துவேறுபாடு வந்தபிறகு வேதனை காட்டும் குடும்பத்தலைவியாக, சுட்டியான கல்லூரி மாணவியாக, முன் ஜென்மத்து நினைவுகள் வந்ததும் சைதன்யாவின் மீது வெறுப்பு, வளர்ந்த குழந்தை நாகார்ஜூனா மீது தாயன்பு என்று சமந்தாவின் முழுத்திறமையும் வெளியாகியிருக்கிறது. நீண்ட காலமாக திரையில் முகம் காட்டாத ஸ்ரேயா, 1930களின் கிராமத்துப் பெண்ணாக பின்னியிருக்கிறார்.

சைதன்யாவை விட ஐம்பதை கடந்த அவரது அப்பா நாகார்ஜூனாதான் இன்னும் இளமையாக தெரிகிறார். நாகேஸ்வரராவுக்கு நடிக்க பெரிய வாய்ப்புகள் இல்லை. இருந்தாலும் மறைந்த ஜாம்பவான் திரையில் தெரிவதே நமக்கெல்லாம் போனஸ்தான். அக்கினேனி – ஐரிஷ் ஜாயிண்ட் வென்ச்சரான அகில் அட்டகாசமாக இருக்கிறார். ஆந்திராவுக்கு அடுத்த மகேஷ்பாபு ரெடி.

ஒருவேளை சிவாஜி உயிரோடு இருந்திருந்தால் ‘மனம்’ தமிழில் சாத்தியமாகி இருக்கலாம். விக்ரம்பிரபு, பிரபு, சிவாஜி என்று காம்பினேஷனே கலக்கலாக இருந்திருக்கும். தெலுங்கைவிட தமிழில் மாபெரும் வெற்றியும் பெற்றிருக்கும்.. ம்... ஆந்திராக்காரர்களுக்கு கொடுத்து வைத்திருக்கிறது. குடும்பம் குடும்பமாக கொண்டாடுகிறார்கள்.

கருத்துகள் இல்லை: