வியாழன், 22 மே, 2014

தாய்லாந்தில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது !

தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில் கடந்த ஆறு மாதங்களாக அரசுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், அங்கு சட்டம் ஒழுங்கு மற்றும் அமைதியை நிலைநாட்டுவதற்காக ராணுவச் சட்டத்தை அமலுக்கு கொண்டு வருவதாக அந்நாட்டு ராணுவம் நேற்று முன்தினம் திடீரென அறிவித்தது. தாய்லாந்து நாட்டின் பிரதமராக இருந்த யிங்லக் ஷினவத்ரா பதவி விலகக் கோரி ஆறு மாதங்களுக்கும் மேல் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வந்தது. இதையடுத்து, அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் அந்நாட்டு நீதிமன்றம் யிங்லக் ஷினவத்ராவை பதவியிலிருந்து நீக்கியது. இதைத்தொடர்ந்து, நிவட்டும்ராங் பூன்சாங்பைசன் என்பவர் தலைமையில் அங்கு இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. ஆனால், அந்த தற்காலிக பிரதமரையும் பதவி விலகக்கோரி எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தி வந்த நிலையில்,இடைக்கால பிரதமர் பதவி விலக மறுத்துவிட்டதால் அங்கு அரசியல் குழப்பம் ஏற்பட்டது.


இதைத்தொடர்நது, நாட்டில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதற்காகவும், அனைத்து தரப்பினரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் நேற்று முன்தினம் திடீரென்று ராணுவச் சட்டத்தை அமல்படுத்துவதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்தது.
இந்நிலையில், தாய்லாந்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் அமைதியை நிலைநாட்ட இன்று மாலை 4.30 மணி முதல் ராணுவம் ஆட்சியை கைப்பற்றுவதாக தாய்லாந்து தலைமை ராணுவ தளபதி பிராயுட் சான்-ஓ-சா தெரிவித்தார்.
எனினும், இந்த அறிவிப்பால் மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும், அனைவரும் வழக்கம்போல் தங்கள் அலுவல்களைத் தொடரலாம் என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், இடைக்கால அரசின் செயல்பாடுகளை ராணுவ ஆட்சி எந்த விதத்திலும் பாதிக்காது என்றும், நாட்டின் சட்டம், ஒழுங்கு சரியாகும் வரை மட்டுமே ராணுவ ஆட்சி அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்தில் அரசியல் நெருக்கடி அதிகரித்து வருவது கவலையளிப்பதாக கருத்து தெரிவித்திருந்த அமெரிக்கா தாய்லாந்தில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டாலும், அங்கு கருத்து சுதந்திரம் உள்ளிட்ட அனைத்து ஜனநாயக நெறிமுறைகளும் மீறப்படாமல் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது.
தாய்லாந்தில் ராணுவ புரட்சி ஏற்படுவது புதிதல்ல. கடந்த 1932 ஆம் ஆண்டில் இருந்து, இதுவரை, 11 ராணுவ புரட்சிகள் அங்கு அரங்கேறியுள்ளன.dailythanthi.com

கருத்துகள் இல்லை: