ஜிக்னேஷ் ஷா, இந்தப் பெயரை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க
மாட்டார்கள். ரூ. 5,600 கோடி முதலீட்டாளர்கள் பணத்தை ஏமாற்றிய குற்றத்துக்காக தண்டனையை எதிர்நோக்கி சிறையில் இருப்பவர்.
மாட்டார்கள். ரூ. 5,600 கோடி முதலீட்டாளர்கள் பணத்தை ஏமாற்றிய குற்றத்துக்காக தண்டனையை எதிர்நோக்கி சிறையில் இருப்பவர்.
யார் இந்த ஜிக்னேஷ் ஷா? 1960-களில் குஜராத்திலிருந்து மும்பைக்கு
குடிபெயர்ந்தது இவரது குடும்பம். இவரது தந்தை இரும்பு வியாபாரி. பள்ளி
நாள்களிலேயே தனது எதிர்காலத் தைத் திட்டமிட்டு அதன்படி முன் னேறியவர்.
பொறியாளராக வேண்டும், அமெரிக்காவில் சில காலம் பணி புரிய வேண்டும்,
சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும், சக மாணவி ரூபாலை திருமணம் செய்து கொள்ள
வேண்டும் என்பது அவரது ஆசை கள் இவற்றில் அமெரிக்காவில் பணியாற்ற வேண்டும்
என்பதைத் தவிர மற்ற அனைத்துமே அவர் திட்டமிட்டபடி நடந்தது.
பள்ளிப்படிப்பு முடித்த கையோடு சாஃப்ட்வேர் படித்து மும்பை ஸ்டாக்
எக்ஸ்சேஞ்சில் 1990-ல் நெட்வொர்க் இன்ஜினீய ராக சேர்ந்தார். இதனால் பல
நாடுகளுக்குச் சென்று பங்குச் சந்தைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள
முடிந்தது. மேலும் நியூயார்க் இன்ஸ்டிடியூட் ஆப் பைனான்ஸில் படிப்பும்
இவரது வளர்ச்சிக்கு அடித்தளமாய் அமைந்தது.
1995-ல் தனது வீட்டை அடமானமாக வைத்து கிடைத்த ரூ. 5 லட்சம் முதலீட்டில்
நண்பர் தேவங் நெராலாவுடன் இணைந்து ஃபைனான்ஷியல் டெக்னாலஜீஸ் (எப்டிஐஎல்)
எனும் நிறுவனத்தை 12 ஊழியர்களுடன் 250 சதுர அடி இடத்தில் தொடங்கினார்.
டோக்கியோ மற்றும் நியூயார்க் பொருள் வர்த்தக சந்தைக்கு அடுத்தபடியாக
இந்தியாவையும் மிகச் சிறந்த சந்தையாக உருவாக்க வேண்டும் என்ற தொலைநோக்கோடு
இதை உருவாக்கினார் ஷா. இந்நிறுவனம் உருவாக்கிய சாஃப்ட்வேர் ஓ.டி.ஐ.என்.
ஆகும். இதை பெரும்பாலான பங்குச் சந்தை புரோக்கர்கள் பயன்படுத்தத்
தொடங்கினர்.
2002-ம் ஆண்டு யாருமே எதிர்பாராத வகையில் எப்டிஐஎல் நிறுவனம் பொருள்
வர்த்தக எக்ஸ்சேஞ்ச் அமைக்க விண்ணப்பித்தது. ஒரே ஆண்டில் பன்முக பொருள்
வர்த்தக சந்தை (எம்.சி.எக்ஸ்) தொடங்கப்பட்டது. 2010-11-ம் ஆண்டுகளில்
சர்வதேச அளவில் மிகப் பெரும் பொருள் வர்த்தக சந்தைகளில் ஒன்றாக இது
உயர்ந்தது. எப்.டி.ஐ.எல் நிறுவனத்துக்கு 33 துணை நிறுவனங்களும், 4 இணை
நிறுவனங்களும், வெளிநாட்டில் ஒரு கூட்டு நிறுவனமும் இருந்தது.
இன்று இந்தக் குழுமம் சர்வதேச அளவில் சந்தை வர்த்தக தொழில்நுட்பத்தை
அளிக்கவல்ல காப்புரிமை பெற்ற நிறுவனமாக வளர்ந்துள்ளது. அனைத்து வகையான
வர்த்தகம் குறிப்பாக பங்கு வர்த்தகம், பொருள் வர்த்தகம், கரன்சி மற்றும்
கடன் பத்திர வர்த்தகத்தை அளிக்கும் நிலைக்கு உயர்ந்தது. உலகிலேயே அதிக
அளவிலான ஒருங்கிணைப்பைப் பெற்ற நிறுவனமாக 9 நாடுகளின் பங்குச் சந்தை
வர்த்தகத்தை ஒருங்கிணைக்கும் வகையில் வளர்ந்தது. ஆப்பிரிக்கா, மேற்கு
ஆசியா, இந்தியா மற்றும் தென் கிழக்கு ஆசியா நாடுகளின் சந்தைகளுடன்
இணைக்கப்பட்டது. முதல் முறையாக எரிசக்திக்கான பங்குச் சந்தையை இந்தியன்
எரிசக்தி வர்த்தக நிறுவனத்தை (ஐஇஎக்ஸ்) உருவாக்கினார்.
இந்தியாவில் மிகப் பெரும் பொருள் வர்த்தக சந்தையாக உருவெடுத்ததால், இதில்
சிறிய நகரங்கள், கிராமங்களிலிருந்தும் முதலீடு செய்வோர் எண்ணிக்கை
அதிகரித்தது. அடுத்த சில ஆண்டுகளில் பெரும் நிறுவனங்களோடு இந்நிறுவனம்
கூட்டு சேர்ந்து பல்வேறு சந்தைகளை வெளிநாடுகளில் உருவாக்கியது. இவற்றில்
முக்கியமானது துபாய் தங்கம் மற்றும் பொருள் வர்த்தக சந்தையும் அடங்கும்.
என்.எஸ்.இ.எல் நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்கள் முதலீடு செய்து
பொருள்களை வாங்கினர். இவர்கள் வாங்கிய பொருள்கள் சேமித்து வைக்கப்பட்ட
சேமிப்புக் கிடங்கின் ரசீதுகள் வழங்கப்பட்டன. ஆனால் வழங்கப்பட்ட ரசீதுகள்
அனைத்தும் போலியானவை என்பது பின்னர்தான் முதலீட்டாளர்களுக்குப் புரிந்தது.
ஆகவே முதலீட்டாளர்களுக்குப் பணம் கிடைக்கவில்லை. இதனால் இவரது வர்த்தக
நிறுவன செயல்பாடு முடங்கியது. 13 ஆயிரம் முதலீட்டாளர்கள் அவர்களுக்கு உதவிய
வர்த்தகர்கள் கொதித்தெழுந்தனர். இதனால் இவரது நிறுவனம் செய்த மோசடி
வெளிச்சத்துக்கு வந்தது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் இவரது நிறுவனம்
வர்த்தகத்தில் ஈடுபட தடை விதிக்கப்பட்டது.
இவரது நிறுவனம் இந்தியாவில் 86 சதவீத முன்பேர பொருள் வர்த்தகத்தை செய்து
வருகிறது. 2,100 உறுப்பினர்களோடு 4 லட்சம் டெர்மினல்கள் 1,900 நகரங்களில்
செயல்படுகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்நிறுவனத்தின் ஒரு நாள்
வர்த்தகம் மட்டும் ரூ. 1,19,941 கோடி.
இந்நிறுவனம் செய்த மோசடி குறித்து 9 மாதங்களுக்கு மேலாக விசாரணை நடத்தி
கடந்த மே 7-ம் தேதிதான் ஜிக்னேஷ் ஷா கைது செய்யப்பட்டார். இவருடன் சேர்த்து
இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை ரூ. 5 ஆயிரம் கோடி
மதிப்பிலான சொத்துகளை மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார்
முடக்கியுள்ளனர்.
கடந்த ஆண்டிலேயே இவரது நிறுவனம் கடும் சர்ச்சைக்கு உள்ளானது. இதனால்
என்எஸ்இஎல் நிறுவனத்தின் துணைத் தலைவர் பதவியை கட்டாயமாக ராஜிநாமா செய்ய
நேர்ந்தது. இவரது நிறுவன பங்கு விலை 70 சதவீதம் சரிந்தது.
அபரிமிதமான தொழில் வளர்ச்சியின் பயனாக கான்டிவேலி பகுதியில் அடுக்கு மாடிக்
குடியிருப்பிலிருந்த ஷா, அங்கிருந்து ஜூஹுவில் சொகுசு பங்களாவுக்குக் குடி
பெயர்ந்தார். இவரது பொழுதுபோக்கே மெர்சிடஸ் பென்ஸ் காரில் வலம்
வருவதுதான். வார இறுதி நாள்களில் பாலிவுட் திரைப்படம், சேத்னா
ரெஸ்டாரண்டில் குஜராத்தி உணவு வகைகள் என தொழிலதிபர்களுக்கே உரித்தான பொழுது
போக்குகளுடன் வாழ்ந்தவர். நேரம் கிடைக்கும்போது டிஒய் பாட்டில்
கல்லூரியில் மருத்துவம் பயிலும் மகளுடன் பொழுதைக் கழிப்பதும் உண்டு.
அனைத்தையுமே திட்டமிட்ட படி செயல்படுத்திய ஷா, தில்லு முல்லு செய்தால்
சிறைத் தண்டனை நிச்சயம் என்பதை அறியாததுதான் வினோதம். 20 ஆண்டுகளுக்கு
முன்பு ஹர்ஷத் மேத்தா இதேபோன்று பங்குச் சந்தை வர்த்தகத்தில் மோசடி செய்து
கைதானார். சிறையிலி ருந்து ஜாமீனில் விடுதலையான போது பங்குச் சந்தை
வர்த்தகம் குறித்த ஆலோசனைகளை செய்தித்தாள் மற்றும் இணைய தளத்துக்கு அளித்து
வந்தார். யாருக்குத் தெரியும் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஜிக்னேஷ் ஷாவும்
இதே போல் ஆலோசனையாளராக மாறலாம்.
எம்.ரமேஷ்- ramesh.m@kslmedia.in tamil.thehindu.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக