செவ்வாய், 20 மே, 2014

எதிர்க்கட்சி தலைவர் பதவியை வளைக்க அ.தி.மு.க., - திரிணமுல் முயற்சி?

லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கைப்பற்ற, அ.தி.மு.க.,வும், திரிணமுல் காங்.,கும், ஒரு குழுவாக இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை, திரிணமுல் தரப்பு உறுதி செய்தாலும், 'இது தொடர்பாக, இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை' என்றும் தெரிவித்து உள்ளது.< லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்கு, பெரும்பான்மை இடங்கள் கிடைத்துள்ளன. காங்., படுதோல்வியை சந்தித்து உள்ளது. லோக்சபாவில், எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெறும் அளவுக்கு கூட, எம்.பி.,க்கள் பலம், காங்கிரசுக்கு கிடைக்கவில்லை. மொத்த இடங்களில், குறைந்தது, 10 சதவீத எம்.பி.,க்களை பெறும் கட்சிக்குத் தான், எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைக்கும். காங்கிரசுக்கு, 44 எம்.பி.,க்கள் மட்டுமே இருப்பதால், இந்த விவகாரத்தில் குழப்பம் ஏற்பட்டு உள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் பதவி, லோக்சபாவில், மிக முக்கியத்துவம் வாய்ந்த பதவி. காபினட் அந்தஸ்துடன் கூடிய அந்த பதவி, எந்த கட்சிக்கு கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. பா.ஜ., காங்கிரசுக்கு அடுத்ததாக, அ.தி.மு.க., 37 இடங்களையும், திரிணமுல் காங்., 34 இடங்களையும் வைத்துள்ளன. இரு கட்சிகளும் இணைந்து, ஒரு குழுவாக செயல்பட்டால், 71 இடங்கள் கிடைக்கும். எனவே, எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெறுவதற்காக, இந்த இரு கட்சிகளும், இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகி உள்ளன.


இதுகுறித்து, திரிணமுல் காங்., மூத்த தலைவர், சவுகதா ராய் கூறியதாவது: லோக்சபாவில், காங்கிரசுக்கு அடுத்தபடியாக, அ.தி.மு.க.,வும், அதற்கு அடுத்து, திரிணமுல் காங்கிரசும், அதிக எண்ணிக்கையில் எம்.பி.,க்களை வைத்துள்ளன. இரு கட்சிகளும் இணைந்து, ஒரு குழுவாக செயல்பட்டால் என்ன, என்ற எண்ணம் வந்துள்ளது உண்மை. இது தொடர்பாக, இரு கட்சிகள் தரப்பில் பேச்சு நடத்தப்பட்டதும் உண்மை. ஆனாலும், இதுவரையிலும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது டில்லி நிருபர் dinamalar.com

கருத்துகள் இல்லை: