வெள்ளி, 1 ஜூன், 2012

புதுக்கோட்டை பிரசாரம்: நடிகர் சரத்குமார் சென்னையில் இருந்து பல்லக்கில் வருகிறார்!

Viruvirupu, Friday 01 June 2012, 02:05 GMT
புதுக்கோட்டையில் 32 அமைச்சர்கள் முகாமிட்டு உள்ளனர், பிரச்சாரம் செய்ய முதல்வர் ஜெயலலிதாவும் வந்திறங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் எல்லோரும், தே.மு.தி.க. வேட்பாளர் ஜாகீர் உசேன் என்பவரை ஜெயிப்பதற்காக மற்றைய வேலைகளை எல்லாம் ஒதுக்கிவிட்டு, புதுக்கோட்டையில் புகுந்து விளையாடுகின்றனர்.
அவர்களது சொந்தத் தொகுதிகளில்கூட இந்தளவுக்கு கஷ்டப்பட்டிருக்க மாட்டார்கள்! புதுக்கோட்டையில் வெயில் அனல் பறக்கிறது. தாகத்துக்கு கோலி சோடாதான் கிடைக்கிறது. சைனீஸ் ரெஸ்டாரன்ட் ஏதுமில்லை. அமைச்சர் சீஸ் பர்கர் ஆர்டர் செய்தால், குழிப்பணியாரம் கொடுக்கிறார்கள்.
அப்படியிருந்தும், அனைத்தையும் சகித்துக் கொண்டு, மெய வருத்தம் பாராது, கண் துஞ்சாது, கடும் உழைப்பை காட்டுகிறார்கள், 32 அமைச்சர்கள்.
ஒருவேளை இவர்கள் அனைவரும் சேர்ந்துகூட ஜாகீர் உசேன் என்பவரை ஜெயிக்க முடியாது போனால் என்ன செய்வது? கவலை வேண்டாம். அ.தி.மு.க. வேட்பாளருக்கு கை கொடுத்து தூக்கிவிட, நடிகர் சரத்குமாரும் புதுக்கோட்டை வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜாகீர் உசேன் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதை உறுதி செய்துகொள்ள நடிகர் சரத்குமார், சும்மா புதுக்கோட்டையில் தலையைக் காட்டிவிட்டு போகப் போவதில்லை. புதுக்கோட்டையில், 4 நாட்கள் தங்கியிருந்து ஜாகீர் உசேனுக்கு எதிராக போராடி, அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஓட்டுக்களை வாரிக் கொடுக்கப் போகிறார்.

நடிகர் சரத்குமாரின் கட்சியான ச.ம.க.-வின் பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் நேற்று அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில், “புதுக்கோட்டை இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் கார்த்திக் தொண்டமானை ஆதரித்து எமது கட்சி தலைவர் சரத்குமார் தேர்தல் பிரசாரம் செய்கிறார். ஜூன் 3, 4, 5, 6 ஆகிய தேதிகளில் புதுக் கோட்டையில் சென்று ஆதரவு திரட்டுகிறார்.

கட்சியின் பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், கொள்கை பரப்பு செயலாளர் ஆர்.ஜெயபிரகாஷ், இளைஞரணி செயலாளர் ஐஸ்அவுஸ் தியாகு, இளைஞரணி துணைச் செயலாளர் பிரான்சிஸ் அந்தோணிராஜ், மதுரை மண்டல செயலாளர் ஈஸ்வரன், மாவட்ட செயலாளர்கள் எச்.சாதிக், ஆர்.குருசாமி, நகர செயலாளர் ஆனந்த், மாவட்ட இளைஞரணி செயலாளர் முகமது கனி, மகளிரணி செயலாளர் பாண்டியம்மாள் உட்பட பலர், தலைவரின் புதுக்கோட்டை பயண ஏற்பாடுகளை கவனித்து வருகிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


ஒட்டுமொத்த தமிழக அரசியல்வாதிகளையுமே குத்துக்கரணம் அடிக்க வைத்திருக்கும் ஜாகீர் உசேன்.

இந்த செய்திக் குறிப்பில் இருந்து தெரியவருபவை:

1) இந்தாள் ஜாகீர் உசேன் செம பாப்புலர் பார்ட்டி போலிருக்கிறது. அவரை தோற்கடிக்க, மாநில முதல்வர் வருகிறார். ஒட்டுமொத்த அமைச்சரவையே நாள்கணக்கில் முகாமிட்டு வேலை செய்கிறது. இப்போது, அ.தி.மு.க.-வின் (ஒரே?) கூட்டணிக் கட்சியான ச.ம.க.-வின் தலைவரும் வருகிறார்.

2) நல்ல வேளையாக அ.தி.மு.க., மத்தியில் எந்தக் கட்சியுடனும் கூட்டணியில் இல்லை. யோசித்துப் பாருங்கள், மத்தியில் காங்கிரஸ் கட்சியுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? ஜாகீர் உசேனை எதிர்த்து பிரச்சாரம் செய்ய சோனியா அல்லது ராகுல் வந்திருப்பார் என்று நினைக்கும்போதே, நெஞ்சை அடைக்கிறது.

3) ச.ம.க. அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் அக்கட்சியின் நிர்வாகிகள் 10 பேரின் பெயர்களை குறிப்பிட்டு, இவர்கள் அனைவரும், “தலைவரின் புதுக்கோட்டை பயண ஏற்பாடுகளை கவனித்து வருகிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சரத்குமார் புதுக்கோட்டைக்கு பயணம் செய்வதற்கு 10 பேர் அப்படி என்னென்ன ஏற்பாடுகளை செய்கிறார்? 10 பேர் தூக்கி வருவதற்கு சென்னையில் இருந்து பல்லக்கில் வரப் போகிறாரா?

4) சரத்குமார் கட்சியில் உத்தரவாதமாக 10 பேர் உள்ளார்கள். அதற்கு ஆதாரமாக அவர்களது பெயர்கள் தரப்பட்டுள்ளன.

-விறுவிறுப்பு.காமுக்காக, ரிஷி

கருத்துகள் இல்லை: