ஞாயிறு, 27 மே, 2012

ராமதாஸை சி.பி.ஐ. இன்று தமது இடத்துக்கு அழைத்து ரகசிய விசாரணை!


Viruvirupu வெளியே சொல்லப்படாமல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மற்றொரு தடவை சி.பி.ஐ. அதிகாரிகளால் ரகசியமாகவிசாரிக்கப்பட்டிருக்கிறார், டாக்டர் ராமதாஸ். மீடியாவின் கண்களில் படாமல் டாக்டர் ஐயா விசாரணைக்கு செல்ல முயன்ற இரண்டாவது அட்டெம்ப்டு இது.
ஆனால், இம்முறையும் கதை லீக்காகி, எங்கள் காதுகள்வரை வந்து விட்டது.
இன்று நடந்த விசாரணைக்காகவும் சென்னைக்கு வர வைக்கப் பட்டுள்ளார் பா.ம.க. நிறுவனர். சென்னையில் உள்ள மத்திய அரசு அலுவலகம் ஒன்றில் வைத்து குறைந்த பட்சம் இரண்டு மணி நேரம் விசாரிக்கப்பட்டிருக்கிறார். ஆனால், கடந்த தடவைபோல முதல்நாளே சென்னையில் வந்து தங்கி, விசாரணைக்கு முகம் கொடுக்கவில்லை என்று தெரிகிறது.
தமது வழமையான வாகனத்தில் வராமல், டார்க் கிரே கலர் லேன்ட் க்ரூசர் ஒன்றில் விசாரணைக்காக வந்து இறங்கியிருக்கிறார் அவர்.
டாக்டருடன், வாகனத்தை செலுத்திய நபரைத் தவிர வேறு யாரும் வந்ததாக தெரியவில்லை. அந்த நபர் ஒரு வழமையான டிரைவராக இல்லாமல், டாக்டரின் உறவினராக இருக்க சான்ஸ் அதிகம்.
சென்னையில் உள்ள மத்திய அரசு அலுவலகத்தின் சைடு என்ட்ரன்ஸில் டாக்டரை இறக்கிவிட்டு, உடனே அங்கிருந்து அகன்றுவிட்டது கிரே கலர் லேன்ட் க்ரூசர். சுமார் இரண்டரை மணி நேரத்தின்பின் மீண்டும் அதே இடத்துக்கு வந்து சுமார் 5 நிமிடங்கள் காத்திருந்த நிலையில், அதில் ஏறிச் சென்றிருக்கிறார் ராமதாஸ்.
தாம் வெளியே வரும் நேரத்தில் போன் பண்ணி வாகனத்தை வரச் செய்திருக்கலாம்.
டாக்டரை இறக்கி விட்டபோது அவரது கைகளில் ஒரு பிரீஃப் கேஸ் ஸ்டைல் தோல் பை இருந்திருக்கிறது. திரும்பிச் சென்றபோதும் அதை கைகளில் வைத்திருந்தார் அவர். டாக்டரின் முகம் மிகவும் சோர்வாக காணப்பட்டது. திரும்பிச் செல்லும்போது, வாகனத்தின் கதவருகே வந்தவர், ஏதோ யோசனையில் ஆழ்ந்தவராக நின்றிருக்க, டிரைவர் சீட்டில் இருந்த நபர் இறங்கி வந்து கதவைத் திறந்து விட, ஏறிச் சென்றிருக்கிறார் டாக்டர்.
டாக்டரை விசாரிக்க சி.பி.ஐ. தரப்பில் இருந்து நான்கில் இருந்து ஆறு அதிகாரிகள் வரை, இரண்டு வாகனங்களில் அங்கு வந்ததாக தகவல் உள்ளது. அவர்கள் சென்னை சி.பி.ஐ. அலுவலகத்தில் தென்படும் முகங்களாக இல்லை; வேறு நகரில் இருந்து வந்த அதிகாரிகள் என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.
சி.பி.ஐ. தரப்பு கடந்த சில தினங்களாக, டாக்டர் மீதான கொலை கேஸில் முக்கியமான சில நகர்வுகளை செய்தது தொடர்பாக எம்மிடம் தகவல்கள் உள்ளன. அவற்றை வைத்து கவர் ஸ்டோரி ஒன்றைத் தயாரிக்கும் முயற்சியில் இருந்தபோதே, டாக்டர் இன்று விசாரிக்கப்பட்ட தகவல் வந்திருக்கிறது. எமது கவர் ஸ்டோரியை இந்த டெவலப்மென்டுக்கு பின், மற்றொரு பதிவாக ஓரிரு தினங்களில் வெளியிடுவோம்.
இப்போதெல்லாம் விசாரணைக்காக டாக்டரை தேடிச் செல்லாமல், அவரை தமது இடத்துக்கு வரவைப்பதில் குறியாக உள்ளனர் சி.பி.ஐ. அதிகாரிகள். எல்லாம் திண்டிவனத்தில் முன்பு அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவம் காரணமாகத்தான்.
அது என்ன அப்படியான ‘திண்டிவனம் அனுபவம்’?
இதே வழக்கு விசாரணைக்காக முன்பு திண்டிவனம் சென்றிருந்த சி.பி.ஐ. டீம் ஒன்று, அங்குள்ள வீராணம் கெஸ்ட் ஹவுஸில்தான் தங்கியிருந்தது. அவர்கள் தமது காலை, மதிய மற்றும் இரவு உணவுக்காக வீராணம் விடுதிக்கு அருகில் உள்ள இரு ஹோட்டல்களுக்கு செல்வது வழக்கமாக இருந்தது. ஒன்று அமராவதி ஹோட்டல், மற்றையது அண்ணாச்சி மெஸ்.
இதைத் தெரிந்துகொண்ட, டாக்டரின் ‘அன்புக்குரிய ஒருவர்’, இந்த இரு இடங்களிலும் தமது ஆள் ஒருவரை சர்வராக நியமித்து விட்டார் என்கிறார்கள். குறிப்பிட்ட சர்வர், சி.பி.ஐ. அதிகாரிகள் சாப்பிடும்போது என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதை அப்படியே, ‘அன்புக்குரிய ஒருவருக்கு’ பாஸ் பண்ணி விடுவாராம்.
இந்த விவகாரம் லேட்டாகவே சி.பி.ஐ.யின் காதுகளுக்கு வந்தது. எப்படியென்றால், இதை ஏற்பாடு செய்த ‘அன்புக்குரிய ஒருவர்’, சென்னை ஹை கோர்ட்டில் வக்கீலாக இருக்கிறார். அவருக்கு சி.பி.ஐ.-யின் லோக்கல் அதிகாரி ஒருவருடன் நெருக்கம் இருந்தது. அவரிடம் இவர் விசாரித்த சில விஷயங்கள், இவருக்கு எப்படி தெரிய வந்தது என அவர் தலையை உடைத்துக் கொண்டு, திண்டிவனம் சென்ற டீமிடம் கேட்க, மேலதிக விசாரணைகளின் பின் விவகாரம் தெரியவந்தது.
‘உளவு பார்ப்பவர்களையே உளவு பார்க்கும் கில்லாடிகள்’ என்பதை புரிந்து கொண்டோ, என்னவோ, இப்போதெல்லாம் டாக்டரை விசாரணைக்கு தமது இடத்துக்கு அழைக்கிறார்கள் சி.பி.ஐ. அதிகாரிகள்!
இன்றைய விசாரணை பற்றி உடனடியாக அதிக தகவல்களை பெற முடியவில்லை. நமக்கு நெருக்கமான சி.பி.ஐ. அதிகாரி ஒருவர், “He had to answer to some uncomfortable questions by our officials” என்றார். Uncomfortable questions எவை என்பதை கூறவில்லை.
மற்றொரு சோர்ஸ் மூலம் கிடைத்த தகவலின்படி, இன்றைய விசாரணை, முழுக்க முழுக்க டாக்டரின் குடும்பத்தினர் பற்றியதாகவே இருந்ததாக தெரிகிறது. அமைச்சர் சண்முகம் உறவினர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், டாக்டரின் குடும்பத்திலுள்ள சிலர் தொடர்பு பட்டுள்ளதாக சி.பி.ஐ. சந்தேகப்படுகிறது.
அமைச்சர் சண்முகம் கொடுத்த ஆரம்ப புகாரின் அடிப்படையில் போடப்பட்ட ஒரிஜினல் எஃப்.ஐ.ஆரில், குற்றம்சாட்டப்பட்ட முதல் ஏழுபேரில் ஐவர், டாக்டரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் (மகன்), ஸ்ரீநிவாசன் (சகோதரர்) டாக்டர் பரசுராமன் (மருமகன்) பிரீதிபன் (பேரன்) ஆகியோரே அவர்கள். முதல் ஏழு பேரில் உள்ள மற்றைய இருவரும் (என்.ஆர்.ரகு, என்.எம்.கருணாநிதி) டாக்டரின் நெருங்கிய உறவினர்கள்.
சி.பி.ஐ.-யின் லேட்டஸ்ட் அடிஷனாக, மேலேயுள்ள லிஸ்டில் ராமதாஸின் மனைவியின் (சரஸ்வதி ராமதாஸ்) இணைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. “கொலைச் செயலுக்கு தூண்டுதலாக இருந்தார்” என்ற ரீதியிலான குற்றச்சாட்டு அது என்கிறார்கள்.
அந்த வகையில் டாக்டர் குடும்பத்தில் இருந்து ஆறு பேருக்கு இந்த கொலை கேஸில் இன்வால்மென்ட் இருப்பதாக சி.பி.ஐ. கருதுவதாக ஊகிக்கலாம். டாக்டரை இன்று விசாரித்தது, இவர்களுக்கு கொலை கேஸில் என்ன தொடர்பு என்று, டாக்டரின் வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காக இருக்கலாம்.
அது வாக்குமூலமா, டாக்டரின் கோணத்தை தெரிந்து கொள்ளும் விசாரணையான என்பதை சி.பி.ஐ.தான் சொல்ல வேண்டும். (அவர்கள் வெளிப்படையாக சொல்லப் போவதில்லை)

-விறுவிறுப்பு.காம் இணையத்துக்காக ரிஷி.

கருத்துகள் இல்லை: