வியாழன், 31 மே, 2012

ஆந்திரா இடைத் தேர்தலில் காங்கிரஸ் காலி?

ஐதராபாத்: ஆந்திர மாநிலத்தில் 18 சட்டசபை தொகுதி மற்றும் ஒரு லோக்சபா தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 12ம் தேதி நடைபெற உள்ள இடைத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு, ஆளும் இடைத் தேர்தலில் கட்சிக்கு ஆதரவாக இல்லை என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
ஆந்திர மாநில சட்டசபையில் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கும், ஒரு லோக்சபா தொகுதிக்கும் அடுத்த மாதம் 12ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இதில், மாநிலத்தை ஆளும் காங்கிரஸ், தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள் களத்தில் உள்ளன. தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிகளவு சொத்து குவித்த வழக்கில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியை சி.பி.ஐ., போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


சாதகம் இல்லை: இதனால், அவர் மீது வாக்காளர்களுக்கு அனுதாபம் ஏற்படுமா என்று பார்ப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆந்திராவில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் நிகழ்வுகள், காங்கிரசுக்கு சாதகமாக இல்லை என்பது மட்டும் நிதர்சனமான உண்மை. காங்கிரசுக்கு குழி பறிக்கும் விஷயங்கள் இரண்டு தான். மின்சாரக் கட்டண உயர்வு, மாநிலத்தில் பொதுமக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், பெட்ரோல் விலை உயர்வு, எரிகிற தீயில் எண்ணெயை ஊற்றியது போலாகிவிட்டது.

கோபக்கனல்: ஏற்கனவே, மாநிலத்தில் பல கிராமங்களிலும் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், மின்சாரத் தட்டுப்பாடும் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு பெரும் சிரமத்தை உருவாக்கி அரசுக்கு எதிராக கோபகனலாக உருவாகியுள்ளது. இந்த நேரத்தில் இடைத்தேர்தல் வருவதால், ஒரு "கை' பார்க்க மக்கள் தயாராகிவிட்டனர். உதாரணத்திற்கு, பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த பலரும், ரயில்களில் நீண்ட தொலைவு சென்று தினமும் குடிநீர் பிடித்து வருகின்றனர். இங்கு தினமும் குடிநீர் வழங்க மாற்று நடவடிக்கைகளில் மாநில அரசு முனைப்பு காட்டாமல் உள்ளது. இந்த மாவட்ட தலைநகரான ஓங்கோல் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதேபோன்ற சிரமங்களை கொண்டுள்ள, நெல்லூர் லோக்சபா தொகுதிக்குட்பட்ட காந்தகுரு சட்டசபை தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

படுமோசம்: அதேபோல், கர்நூல் மாவட்டத்தில் அல்லகாட்டா மற்றும் யம்மிகானூர் சட்டசபை தொகுதிகளில் ஒரு குடம் தண்ணீருக்காக பொதுமக்கள் கடுமையாக போராடும் நிலை இருந்து வருகிறது. இவ்விரு தொகுதிகளிலும் நிலைமை படுமோசம். நடைபெற உள்ள 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், வாரங்கல் மாவட்டத்தில் உள்ள பாரக்கல் தொகுதியும் அடக்கம். இது தெலுங்கானா பகுதியில் இருப்பதால், காங்கிரஸ் வெற்றி பெறுவது கடினம்.

கருத்துகள் இல்லை: