20 வயது மூத்தவர் என்பதால் மனைவியை கொலை செய்தேன்: ஆட்டோ டிரைவர் வாக்குமூலம்
பரமக்குடி: என்னை விட 20 வயது மூத்த பெண்ணை திருமணம் செய்து வைத்ததால் தான் அவளைக் கொன்றேன் என்று போலீசில் ஆட்டோ டிரைவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.பரமக்குடி அருகே காட்டுபரமக்குடியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் பிரபாகரன் (20). இவருக்கும் சொரூபராணி என்பவருக்கும் ஓராண்டுக்கு முன் திருமணம் நடந்தது. ஆனால் பிரபாகரனின் குடும்பத்தினர் கொடுத்த தொல்லையால் சொரூபராணி கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
ஆனாலும் மனைவியை பிரபாகரன் அடிக்கடி சந்தித்து வந்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மனைவியை வீட்டுக்கே அழைத்து வந்து செக்ஸ் உறவு வைத்து வந்தார்.
நேற்று முன்தினமும் மனைவியை அழைத்து வந்த பிரபாகரன் அவரை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்தார். பின்னர் அவரது உடலை சாக்கு மூட்டைக்குள் வைத்து நண்பர் முருகேசன் உதவியுடன் ஆட்டோவில் ஏற்றி கண்மாய் கரையில் புதைத்து விட்டார்.
ஆனாலும் பயம் தொற்றிக் கொள்ளவே பிரபாகரன் பரமக்குடி போலீசில் சரணடைந்து மனைவியை கொலை செய்த விவரத்தைக் கூறினார். அவர் அளித்த வாக்குமூலத்தில்,
எனக்கு 20 வயதுதான் ஆகிறது. ஆனால், 40 பவுன் நகை போடுவதாகக் கூறியதால், என்னை எனது தந்தை 40 வயதான சொரூபராணிக்கு திருமணம் செய்து வைத்து விட்டார்.
ஆனால் நான் என் மனைவியுடன் மகிழ்ச்சியோடு தான் வாழ்ந்து வந்தேன். ஆனால், என் நண்பர்களும் உறவினர்களும் நகைக்கு ஆசைப்பட்டு 20 வயது மூத்த பெண்ணை திருமணம் செய்து கொண்டாயே என்று கிண்டல் செய்தததால் மனைவி மீது எனக்கு வெறுப்பு ஏற்பட்டது.
அவளை கொன்று விட்டால் என் வயதுக்கு ஏற்ற பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது.
கடந்த 29ம் தேதி என் குடும்பத்தினர் அனைவரும் வெளியே சென்றிருந்தனர். இதையடுத்து நான் என் மனைவியை வீட்டுக்கு அழைத்து வந்தேன். மெல்லிய இரும்பு கம்பியால் அவளது கைகளை பின்புறமாக கட்டினேன். ஏன் இப்படி கட்டுகிறீர்கள் என்று அவள் கேட்டாள். நான் இதுவும் ஒரு காதல் விளையாட்டு என்று கூறி சமாளித்தேன்.
பின்னர் ஓடிப் பிடித்து விளையாடுவது போல அவளை சமையல் அறைக்கு வரவழைத்தேன். அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் அவளது தலையை அமுக்கி மூச்சு திணற வைத்து கொலை செய்தேன்.
உடலை ஒரு சாக்கு மூட்டையில் திணித்துவிட்டு என் நண்பன் முருகேசனை உதவிக்கு அழைத்தேன். அவனுடன் சேர்ந்து பிணத்தை ஆட்டோவில் ஏற்றி கண்மாய் கரைக்கு கொண்டு சென்று, குழிதோண்டி புதைத்து விட்டேன். ஆனால், மனசாட்சி உறுத்தியதாலும் பயம் வந்துவிட்டதாலும் நானே போலீசில் சரணடைந்துவிட்டேன் என்று கூறியுள்ளார் பிரபாகரன்.
இதையடுத்து போலீசார் பிரபாகரனையும் முருகேசனையும் கைது செய்தனர். அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பின்னர் அதிகாரிகள் முன்னிலையில் சொரூபராணியின் பிணம் தோண்டி எடுக்கப்பட்டு பரமக்குடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக