எம்எம் சீசன் 1 தொடங்கிய நேரம் கலைஞர் தொலைக்காட்சியில் சின்னத்திரை நட்சத்திரங்கள் நடன போட்டி நிகழ்ச்சி என்றதும் ஆர்வமும், ரசிகர்களிடையே ஆவலும் அதிகரித்தது. சின்னத்திரை நடிகர் சஞ்சீவ் மற்றும் கீர்த்தி ஆகியோர் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களானார்கள். நடன இயக்குநர் கலா இயக்கத்தில் அவர் ஒரு நடுவராகவும், அவரது தங்கை பிருந்தா ஒரு நடுவராகவும் இருக்க சிறப்பு நடுவரராக சிம்ரன், நமீதா ஆகியோரை அழைத்து வந்தார். இதன் இறுதி நிகழ்ச்சி நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. நடிகர் சூர்யா சிறப்பு விருந்தினாராக பங்கேற்று போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளித்தார்.
அன்று தொடங்கிய மானாட மயிலாட பல சீசன்களை கடந்து ஏழாவது சீசனை எட்டியுள்ளது. ஒவ்வொரு சீசனிலும் சின்னத்திரை நட்சத்திரங்கள் புதிது புதிதாக களம் இறக்கப்படுகின்றனர். ஆனால் சீசனுக்கு தகுந்தாற்போல் நடுவர்கள்தான் மாற்றப்படுகின்றனர். சீசன் 2, சீசன் 3 யில் குஷ்புவும், ரம்பாவும் நடுவர்களாக களம் இறங்கினார்கள். சீசன் 4ல் குஷ்புவுடன் மீண்டும் நமீதா களம் இறங்கினார். சீசன் 5 ல் பிருந்தா, குஷ்பு, ரம்பா, நமீதா என கலக்கல் பட்டாளத்தை நடுவர்களாக்கினார் கலா.
இதற்கிடையே இந்த நிகழ்ச்சியின் இயக்குநர் கலா மீது புகார் கூட எழுந்தது. கலா சொல்வதை கேட்காவிட்டால் போட்டியில் இருந்து ஏதாவது ஒரு காரணத்தை கூறி நீக்கிவிடுகிறார்கள் என்றும் கூட நிகழ்ச்சியில் பங்கேற்ற சின்னத்திரை நட்சத்திரங்களின் அம்மாக்கள் புகார் பட்டியல் வாசித்தனர். அதைப்பற்றி எல்லாம் கலா கவலைப்பட்டதாக தெரியவில்லை. எம்எம் சீசன் 5 தொடங்கினார் இதன் இறுதி நிகழ்ச்சி 2010 ம் ஆண்டு அக்டோபர் மாதம் அபுதாபியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதன்சிறப்பு விருந்தினர்களாக அப்போதய காதல் ஜோடி பிரபுதேவா, நயன்தாரா பங்கேற்று போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளித்தனர்.
இதோ இப்போது எம். எம் சீசன் 7 நடைபெற்று வருகிறது மீண்டும் குஷ்புவும், நமீதாவும் கலக்கலாக அமர்ந்து தங்களின் தீர்ப்பினை தெரிவித்துக்கொண்டிருக்கின்றனர். நமீதாவின் மச்சான் நீ நல்லா ஆடுற மச்சான் என்ற உலகப் புகழ் பெற்ற தமிழைக் கேட்க ஒவ்வொரு தமிழ் ரசிகனும் புண்ணியம் செய்திருக்க வேண்டும் !.
இங்கு முக்கியமான ஒரு செய்தியை சொல்லியே ஆகவேண்டும். ‘மானாட மயிலாட’ என்று இந்த நிகழ்ச்சிக்கான பெயரை சூட்டியவர் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக