சென்னையில் உள்ள பத்ம ஷேஷாத்ரி பள்ளியில் ஆன்லைன் வகுப்பில் ராஜகோபாலன் எனும் ஆசிரியர், மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது, தகாத முறையில் நடந்துகொண்டது தொடர்பான புகார்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு பள்ளிகளில் பயிலும் மாணவிகள் மற்றும் முன்னாள் மாணவிகள், ஆசிரியர்களால் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளைப் புகார்களாக தெரிவித்துவருகின்றனர். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர், ஆன்மீகவாதி என்ற போர்வையில் மாணவிகளைப் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியது குறித்து அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவிகள் சமூக வலைதளங்களில் பரபரப்பு குற்றச்சாட்டுகளை வைத்துவருகின்றனர்.
முன்னாள் மாணவிகள் தெரிவித்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விசாரிக்க தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கருக்கு சம்மன் அனுப்பியிருந்தது. பள்ளியின் தாளாளர் வெங்கட்ராமன், நிறுவனர் சிவசங்கர், அவரின் வழக்கறிஞர் நாகராஜ், அதேபோல் பள்ளியின் தலைமை ஆசிரியர், மூன்று ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இன்று (11.06.2021) குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் அவர்கள் ஆஜராகினர். இதில் சிவசங்கருக்கு பதிலாக அவர் சார்பாக ஜானகி என்பவர் ஆஜராகியுள்ளார்.
விசாரணை முடிந்து வெளியே வந்த ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமியிடம் பத்திரிகையாளர்கள் கேள்விகளை எழுப்பினர். அதற்குப் பதில் அளித்த அவர், “ஆணையத்திலிருந்து அப்பள்ளிக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன் மூலம் இன்று நேரில் ஆஜரானார்கள். இதில் அப்பள்ளியின் முதல்வர் ஆஜராகவில்லை. அதற்கு அவரது தரப்பிலிருந்து அவருக்கு கரோனா என மருத்துவச் சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. அவரைத் தவிர்த்து அப்பள்ளியின் தாளாளர், அப்பள்ளி முதல்வரின் வழக்கறிஞர் நாகராஜ் ஆகியோர் ஆஜராகினர். மேலும், சிவசங்கர் சார்பாக ஜானகி என்பவர் ஆஜரானார். சிவசங்கருக்கு நெஞ்சுவலி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் கடந்த 9ஆம் தேதியே டேராடூனில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளனர். இதுவரை மொத்தம் ஆறு பள்ளிகளின் விசாரணை நடைபெற்றுவருகிறது. ஆனால், இன்னும் எந்தப் பள்ளியின் விசாரணையும் முழுமைபெறவில்லை. அதனால், தொடர்ந்து விசாரணை நடைபெறும்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பத்திரிகையாளர்கள், “சிவசங்கர்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக சொல்கிறீர்கள். ஆக அவரிடம்
எழுத்துப்பூர்வமான பதில் பெற நடவடிக்கை எடுக்கப்படுமா? சிவசங்கர் மீது
வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு அவரோ அல்லது அவரது வழக்கறிஞரோ என்ன
பதில் சொல்கிறார்கள்” என கேட்டதற்குப் பதில் அளித்த சரஸ்வதி ரங்கசாமி,
“அதைப் பற்றி அவருக்குத் தெரியாது என அவரது தரப்பிலிருந்து
சொல்லப்படுகிறது” என சொல்லிவிட்டு சரஸ்வதி கிளம்பிச் சென்றார்.
1 கருத்து:
துண்டு சீட்டு கையிலேதான் அதிகாரம் இருக்குல்ல
கருத்துரையிடுக