சனி, 12 ஜூன், 2021

தமிழ்நாடு கோயில் நிலங்களில் 47 ஆயிரம் ஏக்கர் மாயமா? – அறநிலையத்துறை ஆணையர் சொல்வது என்ன?

 ஆ விஜயானந்த்  -       பிபிசி தமிழுக்காக :    அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களின் விவரங்களை, இணையத்தில் பதிவேற்றும் வேலைகள் நடந்து வருகின்றன.
`கோவில் நிலங்களை பயன்படுத்துவோர் குறித்த தகவல்கள் இணையத்தில் இல்லாததால், தவறுகள் நடக்கவே வாய்ப்புகள் அதிகம்’ என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
 என்ன நடக்கிறது?  47,000 ஏக்கர் நிலங்கள் எங்கே?
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார்.
அதில், ` தமிழ்நாட்டில்  அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 38,600 கோவில்கள் இருந்தாலும் இதில் 331 கோவில்களில் மட்டுமே ஆண்டுக்கு 10 லட்ச ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைக்கிறது.


மற்ற கோவில்களில் வருமானம் என்பதே இல்லை. அதேநேரம், இந்தக் கோவில்களுக்குச் சொந்தமாக பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் உள்ளன.  அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சொத்துகள் தொடர்பான விவரங்கள் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.

இதன்படி, கடந்த 1985-87 ஆம் ஆண்டுகளில் தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், கோவில்களுக்கு சொந்தமாக 5.25 லட்சம் ஏக்கர் நிலம் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், 2018-19 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் 4.78 லட்சம் ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 47,000 ஏக்கர் நிலம் எங்கே போனது என்றே தெரியவில்லை. இதுதொடர்பாக அரசு அதிகாரிகளிடம் எந்த விளக்கமும் இல்லை’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த கோவை

மேலும், ` கோவை அன்னூரில் உள்ள கணேசர் கோவில், சூலூர் தண்டபாணி கோவில், கரிவரதராஜ பெருமாள் கோவில், அவினாசியப்பர் கோவில், சென்னிமலை சுப்ரமணியசாமி கோவில் ஆகியவற்றுக்குச் சொந்தமான ஏராளமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக சட்டவிரோத ஆக்ரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தார்.

பட மூலாதாரம்,தமிழ்நாடு  அறநிலையத்துறை வலைதளம்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், தமிழ்ச்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வு, 47,000 ஏக்கர் மாயமான தகவல் உண்மையென்றால், மிகப் பெரிய அதிர்ச்சிக்குரிய தகவல் ஆகும்’ எனக் குறிப்பிட்டு, ` கோவில் நிலங்களை பதிவு செய்ய எந்தத் தடையும் இல்லை’ என்று சூலூர் சார்பதிவாளர் கடிதம் எழுதியுள்ளார். எந்த ஆவணங்களின் அடிப்படையில் அவர் இந்த முடிவுக்கு வந்தார் எனத் தெரியவில்லை. இந்த வழக்கில் அவர் விரிவான பதிலை தாக்கல் செய்ய வேண்டும். மேலும், 47,000 ஏக்கர் நிலம் மாயமானது தொடர்பாக வருவாய்த்துறை, பத்திரப்பதிவுத் துறை செயலாளர், இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் ஆகியோர் விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டு வழக்கை ஜூலை 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    எதிர்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி – அதிமுக தலைமை அலுவலகத்தில் என்ன நடந்தது?
    `சசிகலாவைப் பற்றி கே.பி.முனுசாமிக்கு என்ன கவலை?’ – அ.தி.மு.கவுக்குள் சலசலப்பு

இந்த வழக்கு நடந்து கொண்டிருந்த அதேநேரம், தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 36,861 கோவில்களுக்குச் சொந்தமான நிலங்களை இணையத்தில் பதிவேற்றும் வேலைகளில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்தக் கோவில்களின் கட்டுப்பாட்டில் 4,78,272 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களில் கடை நடத்தும் பலரும் வாடகை தராமலும் குத்தகை தொகையை செலுத்தாமலும் உள்ளனர். இதனால் உரிய வருமானமின்றி கோவில்கள் முடங்கிக் கிடக்கின்றன.
3 வகைகளாக பிரிந்த கோவில் நிலம்

இதில் கோவில் நிலங்களின் உரிமை ஆவணங்கள், வருவாய்த்துறையின் வசம் உள்ள `தமிழ் நிலம்’ என்ற மென்பொருளோடு ஒப்பிட்டுப் பார்த்து ஒத்துப் போகும் இனங்கள், பகுதியாக ஒத்துப்போகும் இனங்கள், புதிய இனங்கள் என 3 வகைகளாகப் பிரித்துள்ளனர். அந்தவகையில் முதல்கட்டமாக 3,43,647 ஏக்கர் நிலங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். இது மொத்த கோவில் நிலங்களில் 72 சதவிகிதம் எனக் கூறப்படுகிறது. இதனை hrce.tn.gov.in<http://hrce.tn.gov.in> என்ற இணையத்தளத்தில் உள்ள `திருக்கோவில்கள் நிலங்கள்’ பகுதியில் சென்று பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் பார்வையிடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ கோவில் நிலங்களை இணையத்தளத்தில் பதிவு செய்கின்றனர். இவையெல்லாம் 10 ஆண்டுகளுக்கு முன்னரே செய்திருக்க வேண்டியவை. ஆனாலும், நிலம் தொடர்பான தகவல்களை முழுமையாக பதிவு செய்யவில்லை. தற்போது பதிவிட்ட தகவலில் தவறான தகவல்களும் உள்ளன. குறிப்பாக, `பொறுப்பு துறத்தல்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளனர். அப்படியானால், தங்களுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என அதிகாரிகள் சொல்ல வருகிறார்களா.. மேலும், புல எண், உட்பிரிவு வாரியாக அந்தச் சொத்தை தற்போது யார் வைத்துள்ளனர் என்ற விவரத்தையும் பதிவு செய்யவில்லை. கோவில் சொத்தை யார் வைத்திருக்கிறார்கள், வாடகை அல்லது குத்தகைதாரர் யார்? எவ்வளவு காலமாக ஆக்ரமிப்பில் உள்ளது என்பதையும் பதிவு செய்யவில்லை. இது கூட்டுக் கொள்ளைக்குத்தான் வித்திடும்” என்கிறார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சேலம் ராதாகிருஷ்ணன்.


மேலும், 47,000 ஏக்கர் நிலம் மாயமானது தொடர்பாக, பிபிசி தமிழிடம் சில தகவல்களைப் பட்டியலிட்டார். “ சட்டமன்றக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் அறிக்கைகள், துறையின் செயலரால் தயாரிக்கப்படுகிறது. இதனை சட்டசபையில் அமைச்சர் தாக்கல் செய்தார். இதில் சிறிதளவும் பொய்யான தகவல்கள் வருவதற்கு வாய்ப்பில்லை. ஆனால், கடந்த காலத்தில் முன்வைக்கப்பட்ட அறிக்கைக்கும் 2018-19 ஆம் ஆண்டு வைக்கப்பட்ட அறிக்கைக்கும் இடையே 47,000 ஏக்கர் நிலம் காணாமல் போயுள்ளது.

இந்த 47,000 ஏக்கர் நிலங்கள் எதனால் காணாமல் போனது என்பது தொடர்பாக எந்த விசாரணைகளும் நடக்கவில்லை. இந்த நிலங்கள் மீட்கப்பட வேண்டும் எனக் கூறப்படுவதில் 2 விஷயங்கள் உள்ளன. ஒன்று, எந்த நோக்கத்துக்காக இவை கோவிலுக்கு ஒப்படைக்கப்பட்டதோ அது நிறைவேற வேண்டும். அடுத்து, திருக்கோவில் நிலங்களில் இருந்து வரக் கூடிய வருவாய் முறைப்படுத்தப்பட்டால் அதன் உபரி நிதியில் இருந்து தமிழக அரசின் நியாயமான அனைத்து தர்ம காரியங்களையும் நடத்த முடியும்” என்கிறார்.

மேலும், “ பொதுவாக கோவிலுக்கு நேரடியாக சொந்தமான நிலம், மறைமுகமாக சொந்தமான வருமானம் என இரு பிரிவுகள் உள்ளன. இந்த நிலங்களை எந்தவகையிலும் விற்க முடியாது. அதையும் மீறி தங்களின் சொந்த சொத்து போல ஆவணத்தைப் பதிவு செய்துள்ளனர். சூலூர் கோவில் விவகாரத்தில் ஒரு பத்திரப் பதிவு அலுவலர், இன்னொரு பத்திரப் பதிவு அலுவலருக்கு எழுதிய கடிதத்தில், `இது கோவில் நிலம் அல்ல’ என எழுதியுள்ளார். இது தவறானது. இதுதொடர்பாக அறநிலையத்துறை அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை. நீதிமன்றம் சென்ற பிறகு, `ஆவணங்களைக் கேட்டிருக்கிறோம்’ என்கிறார்கள். இதுவே தங்களின் சொந்த சொத்தாக இருந்தால் இப்படிச் செய்வார்களா?” எனக் கேள்வியெழுப்புகிறார்.
300 ஆக குறைந்த 7,000 ரூபாய்

அதேநேரம், கோவில் நிலங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பாக, பிபிசி தமிழிடம் பேசிய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர், “ கோவில் நிலங்களை இணையத்தளத்தில் பதிவேற்றுவதை மிகச் சிறந்த நடைமுறையாகப் பார்க்கிறோம். இதை ஏற்கெனவே தயார் செய்து வைத்திருந்தனர். `தமிழ் நிலம்’ என்ற வருவாய்த்துறையின் மென்பொருளில் கோவில் நிலங்களையும் சேர்த்துவிட்டனர்.

இந்த `தமிழ் நிலம்’ மென்பொருளில் புல எண் பதிவிட்டாலே அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ள முடியும். நிலம் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள பெரும் உதவியாக உள்ளது. ஆனால், கோவில் பெயரில் நிலம் உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, வாடகைதாரர் விவரம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. இதனை இன்னும் தெளிவுபடுத்தாமல் உள்ளனர்.

காரணம், ஒவ்வொரு கோவிலுக்கும் ஏராளமான வாடகைத் தொகைகள் நிலுவையில் உள்ளன. பரம்பரை தர்மகர்த்தாக்கள் உள்ள கோவில்களுக்குச் சொந்தமான கடைகளில் மாத வாடகையே 300, 400 ரூபாய்தான். அதுவே, இந்தக் கடைக்கு அருகில் உள்ள கடைகளின் வாடகை 7,000 ரூபாய் என்ற அளவில் உள்ளது.

சேலம் மேச்சேரியில் பசுபதிதீஸ்வரர் கோவில் உள்ளது. அங்குள்ள கோவில் நிலத்தை ஊராட்சி நிர்வாகம் குத்தகைக்கு எடுத்துள்ளது. ஆனால் அங்கு பொறுப்பில் உள்ளவர்கள் உள்வாடகைக்கு விட்டு சம்பாதிக்கின்றனர். அவர்கள், அரசுக்கு 300 ரூபாயை கொடுத்துவிட்டு 5,000 ரூபாய் என நிர்ணயித்து வசூல் செய்கின்றனர். பசுபதீஸ்வரர் கோவிலின் பிரதான வருமானமே வாடகைதான். இதுதொடர்பாக உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்கிறார்.
சேலம் கோவில்களில் என்ன நடக்கிறது?

தொடர்ந்து பேசுகையில், “ சேலம் செவ்வாய்பேட்டையில் வணிகர்கள் மிகுதியாக உள்ளனர். அங்குள்ள பிரசன்ன வெங்கடாசலபதி மாரியம்மன் கோவிலுக்குச் சொந்தமான கடைக்கு பிரதி வாய்தா தொகையாக (வாடகை) மாதம் 750 ரூபாய், 1,200 ரூபாய் எனக் கொடுக்கின்றனர். இந்த வாடகையிலும் ஒருவர் 1,28,000 ரூபாய் வரையில் நிலுவை வைத்துள்ளனர். இந்தப் பிரச்னை அனைத்து மாவட்டங்களிலும் உள்ளது.

அதிலும் விவசாய நிலங்களை குத்தகைக்கு எடுத்துள்ளவர்கள் ஆண்டுக்கு 3,000 ரூபாய்தான் கொடுக்கின்றனர். கேட்டால், `மழை இல்லை, விவசாயம் இல்லை’ எனக் காரணங்களைக் கூறுகின்றனர். சேலம் சுகவனேஸ்வரர் கோவிலுக்கு ஏராளமான நிலங்கள் உள்ளன. வீடுகளையும் வாடகைக்கு விட்டுள்ளனர். இதிலும் இதே பிரச்னைகள்தான்.

    கேரளா கருப்புப் பண விவகாரத்தில் பாஜக தலைவருக்குத் தொடர்பா?
    அதிமுக சட்டமன்ற துணைத் தலைவர், கொறடா யார், பின்னணி என்ன?

இதுதொடர்பாக அதிகாரிகள் கேள்வியெழுப்பினால், சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கின்றனர். இந்த வழக்கு நடக்கும்போதே சிலர் நிலுவைத் தொகையை கொடுக்காமல் ஓடிவிடுகின்றனர். ஆத்தூர் வெள்ளை பிள்ளையார் கோவிலில் லட்சக்கணக்கான தொகைகள் பாக்கி உள்ளன. அதையெல்லாம் தற்போது வசூலித்து வருகின்றனர்.

கோவில் வாடகை மோசடியில் செயல் அலுவலர்களில் 60 சதவிகிதம் பேருக்குத் தொடர்பிருக்கிறது. இதையெல்லாம் சரிசெய்ய வேண்டும் என்றால் வாடகைதாரர் யார்? எவ்வளவு நிலுவைத் தொகைகள்? ஆக்கிரமிப்பாளர்கள் பட்டியல் என அனைத்தையும் இணையத்தில் பதிவேற்றினால்தான் இந்தப் பணிகள் முழுமையடையும்” என்கிறார் விரிவாக.
ஆணையர் சொல்வது என்ன?

கோவில் நிலங்களை இணையத்தளத்தில் பதிவேற்றுவது தொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் ஐ.ஏ.எஸ்ஸிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். “ அரசு, தனியார், கோவில் என எந்த நிலங்களாக இருந்தாலும் அதுதொடர்பான அனைத்து விவரங்களும் வருவாய்த்துறையில் இருக்கும். அவர்களிடம் `தமிழ் நிலம்’ என்ற மென்பொருள் இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நிலங்களும் `தமிழ் நிலம்’ மென்பொருளில் உள்ளன. இதற்கான பணிகள், கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வந்தன.

பட மூலாதாரம்,GETTY IMAGES

நீதிமன்ற உத்தரவின்படி, டவுன் சர்வே, பட்டா, சிட்டா உள்பட அனைத்து ஆவணங்களையும் அவர்கள் டிஜிட்டல் வடிவத்துக்கு கொண்டு வந்துவிட்டனர். அதில், கோவில் நிலங்களும் உள்ளன. எங்கள் நிலத்தைப் பொறுத்தவரையில் நாங்கள் பெரிதாக டிஜிட்டலைஸ் செய்யவில்லை. அந்தக் காலத்தில் இருந்து பட்டா, சிட்டாவை ஆவணங்களை கையிலேயே வைத்திருக்கிறோம். அதேநேரம், `தமிழ் நிலம்’ மென்பொருளில் உள்ள ஆவணங்களில் கோவில் நிலங்கள், வேறு நபர்களின் பெயர்களில் இருப்பதைக் கவனித்தோம்.

இதையடுத்து, கடந்த காலங்களில் பதவி வகித்த அறநிலையத்துறை ஆணையாளர்கள், `தமிழ் நிலம்’ டேட்டா பேஸில் அனைத்து கோவில் நிலங்களையும் கொண்டு வந்தனர். `தமிழ் நிலம்’ மென்பொருளில் மாவட்டத்தின் பெயர், தாலுகா, கிராமம் பெயர், ஏ பதிவு, பட்டா, சிட்டா என அனைத்தையும் ஆன்லைனில் வெளியிட்டனர்.

ஆன்லைனில் உள்ள அனைத்து விவரங்களும் எங்களிடம் இருக்கும் ஆவணங்களோடு பொருந்தினால், `ஒத்துப் போகும் இனங்கள்’ என வகைப்படுத்தினோம். அதில், அனைத்தும் சரியாக இருந்து பரப்பளவும் எண்களும் மாறுபட்டால் `பகுதிவாரியாக ஒத்துப்போகும் இனம்’ என வகைப்படுத்தினோம். இவ்வாறு செய்ததால் மொத்த நிலத்தில் 72 சதவிகிதம் சரியாக ஒத்துப்போனது” என்கிறார்.
நிலங்களை பிரித்தது எப்படி?

தொடர்ந்து பேசுகையில், “ அந்த வகையில் 3.43 லட்ச ஏக்கர் நிலங்களையும் இணையத்தளத்தில் வெளியிட்டுவிட்டோம். கோவில் பெயர் நீங்கள் தேர்வு செய்தாலே, அனைத்து விவரங்களும் ஒத்துப் போகும் தகவல்களை மட்டும் காண்பிக்கும். ஒரு கோவிலுக்கு 8 ஏக்கர் நிலங்கள் இருந்தால் அதில் 5 ஏக்கர் மட்டும் முழுமையாக ஒத்துப் போனால் அந்த 5 ஏக்கர் தொடர்பான தகவல்கள் மட்டும் இருக்கும். மற்ற 3 ஏக்கர் நிலங்களும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகளாக உள்ளன. நாங்களும் நில உரிமையாளர்களும் வழக்கை சந்தித்து வருகிறோம்.

நீதிமன்ற நடவடிக்கைகளை நிறைவு செய்யாமல் இணையத்தளத்தில் பதிவிட முடியாது. அதனால்தான் பாக்கி நிலங்களை நாங்கள் பதிவிடவில்லை. எங்கள் நிலங்களை 72 சதவிகிதம் பதிவு செய்துவிட்டோம். மீதமுள்ள 28 சதவிகிதத்தில் பெரியளவில் உள்ள நிலங்களுக்கு கூடுதல் நேரத்தை ஒதுக்குமாறு உதவி ஆணையர்களுக்கு கூறியுள்ளோம். இந்த 28 சதவிகிதமும் படிப்படியாக குறையும் என நம்புகிறோம். இது மிகப் பெரிய நடைமுறை. நாங்கள் பந்தயத்தைத் தொடங்கிவிட்டோம். அதை அவ்வளவு எளிதில் விடுவதாக இல்லை” என்கிறார்.
மாற்றம் கொடுக்குமா டி.சி.பி?

“வாடகைதாரர்களின் விவரங்களைப் பதிவு செய்யாதது ஏன்?” என்றோம். “ இன்னும் ஒரு மாதம் காத்திருந்தால் அதுதொடர்பான விவரங்களும் பதிவேற்றப்பட்டுவிடும். டி.சி.பி (demand collection balance module) என்ற தலைப்பில் அதனைத் தயார் செய்து வருகிறோம். எவ்வளவு வாடகை, எவ்வளவு நிலுவை, எவ்வளவு பாக்கியுள்ளது என்ற விவரங்களையும் இணையத்தில் பதிவேற்ற உள்ளோம்” என்கிறார்.

“அதேநேரம், வாடகையை நிர்ணயிப்பதில் பெரும் குளறுபடிகள் நடப்பதாகச் சொல்கிறார்களே?” என்றோம். “ 2016 ஆம் ஆண்டு அரசாணையின் அடிப்படையில் வாடகையை நிர்ணயம் செய்யும் வேலைகளில் இறங்கினோம். இதில், 7,000 நிர்ணயிக்க வேண்டிய கடைகளுக்கு சில அதிகாரிகள் 15,000 என தொகையை நிர்ணயித்துவிட்டனர். சில இடங்களில் குறைந்த விலையிலும் சில இடங்களிலும் அதிக விலையிலும் நிர்ணயித்துள்ளனர். இதனை டி.சி.பி செய்தால் ஏன் வசூல் ஆகவில்லை என்ற காரணம் தெரிந்துவிடும். இரண்டு மாதங்களில் இதனையும் சரிசெய்துவிடுவோம்” என்கிறார்.

கருத்துகள் இல்லை: