தற்போது, தி.மு.க ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், நீர்வளத்துறை மூலமாக மணல் குவாரிகளை மீண்டும் நடத்த மூன்று நிறுவனங்கள் ரகசியமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கான ஒப்பந்தம் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரான துரைமுருகன் வீட்டில் கையெழுத்தாகியிருப்பதாகவும், மணல் கூட்டணியிடமிருந்து 300 கோடி ரூபாய் துரைமுருகன் தரப்புக்கு கைமாறியிருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் உலாவுகின்றன. இதிலும், சேகர்ரெட்டி தலைமையிலான மணல் கூட்டணியின் பெயர்களே அடிபடுகின்றன. இதுதொடர்பாக, அமைச்சர் துரைமுருகன் உதவியாளராக சந்தேகிக்கப்படும் ஒருவருடன் மணல் கூட்டணியின் இடைத்தரகர் ஒருவர் பேசுவதாக சமூக வலைத்தளங்களில் ஆடியோ உரையாடல் ஒன்று வேகமாகப் பரவி வருகிறது.
அந்த உரையாடல் பதிவு அப்படியே…
எதிர் முனையில் பேசுபவர்: ‘‘போய்விட்டார்களா… இருக்காங்களா?’’
உதவியாளர் எனக்கூறப்படும் நபர்: ‘‘முடிந்தது’’
எதிர் முனையில் பேசுபவர்: ‘‘தமிழ்நாடு முழுக்கவா… நாலு மாவட்டம் மட்டுமா? ‘படிக்காசு’ (மணல் மாபியா கும்பலைச் சேர்ந்த ஒரு நபரின் பெயர்) என்னாச்சு?’’
உதவியாளர் எனக்கூறப்படும் நபர்: ‘‘தமிழ்நாடு முழுக்கத்தான். அவருக்கும் பிரிச்சி தருவாங்க.
எதிர் முனையில் பேசுபவர்: ‘‘மொத்தம் மூணு பேரா?’’
உதவியாளர் எனக்கூறப்படும் நபர்: ‘‘இல்லை. நாலு பேர்’’
எதிர் முனையில் பேசுபவர்: ‘‘யார் யாரு?’’
உதவியாளர் எனக்கூறப்படும் நபர்: ‘‘ராமச்சந்திரன், கரிகாலன், ரத்தினம், அப்புறம் வேலூர்காரர் சேகர்ரெட்டி. இதுக்கெல்லாம் சேகர்ரெட்டிதான் ஹெட்டு.’’
எதிர் முனையில் பேசுபவர்: ‘‘சேகர்ரெட்டி வந்தாரா?’’
உதவியாளர் எனக்கூறப்படும் நபர்: ‘‘அவர் வர்லை. முன்ன ஒரே முறை மட்டும் வந்துட்டுப் போனாரு. அவங்களே பிரிச்சி கொடுப்பாங்க.’’
எதிர் முனையில் பேசுபவர்: ‘‘எது இருந்தாலும், ஐயா (துரைமுருகன்) கிட்ட கேட்டுச் சொல்லுங்க.
உதவியாளர் எனக்கூறப்படும் நபர்: ‘‘வாங்கிக்கிலாம்… வாங்கிக்கலாம்’’ என்பதுடன் அந்த உரையாடல் பதிவு முடிகிறது.
இந்த பணப்பரிவர்த்தனை சென்னை கோட்டூர்புரத்திலுள்ள வீட்டில் நடந்ததா அல்லது காட்பாடி காந்தி நகரிலுள்ள வீட்டில் நடந்ததா என்ற தகவல்கள் அதில் இடம் பெறவில்லை. அதேசமயம், துரைமுருகனின் மகனும், வேலூர் எம்.பி-யுமான கதிர் ஆனந்த் மூலமாகத்தான் இந்த ஏற்பாடுகள் நடந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பியிருக்கின்றன.
இதுதொடர்பாக, கதிர் ஆனந்தை செல்போனில் தொடர்புகொண்டு விளக்கம் கேட்டோம். அதற்கு அவர், ‘‘இந்த கேள்விகளையெல்லாம் கேட்டால் எனக்கு எப்படித் தெரியும்? நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறேன். கொரோனா தடுப்புப் பணிகளுக்காக ஊர் ஊராகச் சுத்திக்கிட்டு இருக்கிறேன். சமூக வலைத்தளங்கில் என்ன வருகிறது என்பதைப் பார்க்க நேரமில்லை’’ என்றார்.
தொடர்ந்து, அவரின் வாட்ஸ்-அப் எண்ணுக்கு அந்த தகவல்களை அனுப்பி வைத்தோம். மேலும், சேகர்ரெட்டியின் மணல் கூட்டணியிலுள்ள கரிகாலன் என்பவருடன் துரைமுருகனும், கதிர் ஆனந்தும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் கதிர் ஆனந்த் வாட்ஸ்-அப் எண்ணிற்கு அனுப்பி வைத்து பார்க்கச் சொன்னோம்.
‘‘புகைப்படம் எடுத்துக்கொண்டவருக்கும், உங்களுக்கும் என்ன சம்பந்தம்? அவர் யார்?’’ என்று வாட்ஸ்-அப்பிலேயே கேள்வியைப் பதிவிட்டோம். கேள்வியைப் பார்த்த கதிர் ஆனந்த், நீண்ட நேரமாகியும் எந்த பதிலையும் அளிக்கவில்லை. இதனால், மீண்டும் அவருக்கு போன் செய்தோம். நீண்ட நேரம் ரிங் அடித்ததே தவிர… போனை அவர் எடுக்கவில்லை. சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த விவகாரம் மக்களிடம் பேசுப்பொருளாகியிருக்கிறது. இது தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் தரப்பில் விளக்கம் அளித்தால், அதனையும் உரிய பரிசீலனைக்குப் பின்னர் பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக