aramonline.in - கே.பாலகிருஷ்ணன் : லட்சத் தீவில் நடக்கும் இந்து ராஷ்டிராவிற்கான முன்னெடுப்புகள்..!
லட்சத்தீவில் நடப்பது நாளை இந்தியா முழுமைக்கும் பாஜக அரசு செயல்படுத்த உள்ள இந்து ராஷ்டிரா திட்டத்தின் முன்னோட்டமா..?
என்ற சந்தேகம் மனசாட்சியுள்ள யாருக்கும் தோன்றக் கூடும்…!
அதி மோசம், படு அநாகரீகம், கெடு நோக்கம் கொண்ட ஒரு இந்துத்துவ நிர்வாகத்திற்கான மாடலை அங்கு நிறுவிக் கொண்டுள்ளது பாஜக அரசு!
இதனால், இந்திய அரசின் உயர் பொறுப்புகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்,ஐ.பி.எஸ், ஐஎப்.எஸ் அதிகாரிகள் 93 பேர் பிரதமர் மோடிக்கு ஆழ்ந்த வருத்ததுடன் ஒரு கடிதம் எழுதியுள்ளனர்.
இவர்கள் அரசியலமைப்புச் சட்டத்தின்வழி நடக்க வலியுறுத்தும் குழு (constituition conduct group)’ என்ற அமைப்பை நடத்தி வருகின்றனர்.
அவர்கள் எழுதியுள்ள அந்த கடிதத்தில், ஓய்வு
மத்திய அரசிலும் மாநில அரசுகளிலும் பணிபுரிந்து ஓய்வுபெற்ற அதிகாரிகளால் மனம் பொறுக்காமல் எழுதப்பட்டுள்ளது இந்தக் கடிதம் ! இவர்கள் எந்தவிதமான அரசியல் தொடர்போ, அரசியல் உறவோ இல்லாதவர்கள்! நடுநிலைமை, சார்பற்ற நிலையில் இருந்து எழுதியுள்ளனர்! லட்சத்தீவில் நடந்து கொண்டிருக்கும் விவகாரங்கள் அனைத்து இந்தியர்களையும் கவலையடைய செய்துள்ளதை போலவே அவர்களையும் கவலை கொள்ள வைத்துள்ளது என நமக்கு தெரிய வருகிறது!
இலட்சத் தீவுகள் அரபிக் கடலில், கேரளத்திற்கு மேற்கே பகுதியில் அமைந்திருக்கும் ஒரு தீவுக் கூட்டம். அதிகளவு பவளப்பாறைகளும், உப்பங்கழிகளும் அடங்கிய தீவுகளாகும். இவற்றில் 36 சிறு தீவுகள் உள்ளன. அதில் ஒன்று நீரில் மூழ்கி விட்டது. மீதமுள்ள 35 தீவுகளில், 10 தீவுகளில்தான் மனிதர்கள் வசிக்கிறார்கள்.
ஜனத்தொகை, மொழி
ஒரு லட்சத்திற்கும் குறைவான மக்கள் இங்கு வசிக்கின்றனர். அவர்களில் 95.6 விழுக்காட்டினர் இஸ்லாமியர்கள். மீதமுள்ளவர்கள் பிற சமூகங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களும் அங்கு வியாபாரம், அரசுப் பணி, சுற்றுலாத் துறை, மற்றும் இதர பணிகளுக்காக வந்து குடியேறியவர்கள். இங்குள்ள மக்கள் தாய் வழிச்சமூகமாக வாழ்கிறார்கள். அதாவது குடும்பத்தின் தலைமைப் பொறுப்பில் பெண்களே இருக்கிறார்கள். மினிக்காய் தவிர மற்ற தீவுகளில் பேசக்கூடிய மொழி மலையாளம். மினிக்காயில் மாலே மொழி பேசப்படுகிறது. அலுவல் மொழியாக மலையாளம் உள்ளது. இலட்சத் தீவுகள் யூனியன் பிரதேசமாகும். இங்குச் சட்டமன்றம் கிடையாது. ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மட்டும் உண்டு. இலட்சத் தீவுகளின் தலைநகரம் கவராட்டி.
கல்வி மற்றும் உணவு பழக்க வழக்கம்
இங்குள்ள அனைவருக்கும் எழுதப்படிக்கத் தெரியும். நாட்டிலேயே முதல் நவோதயா பள்ளி 1986இல் இங்கு ஏற்படுத்தப்பட்டது. இங்கு 2 கல்லூரிகள் உள்ளன. 10 விழுக்காடு வீடுகளில் சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல்கள் உள்ளன. இது நாட்டிலேயே அதிகமான விகிதாச்சாரமாகும்.
தீவுகள் மற்றும் உப்பங்கழிகளில் இருந்து கிடைக்கும் மீன் மற்றும் காய்கள் இவர்களுக்கு முக்கிய உணவாக உள்ளன. ஒப்பீட்டளவில் இவர்கள் சத்தான உணவை உட்கொள்கிறார்கள். இங்கு பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிக அளவு இல்லை. இங்கு ஏழைகள் கிடையாது. இங்கு குற்றச் செயல்கள் மிகமிகக் குறைவு.
தொழில்:
தென்னை நாரில் பொருட்கள் செய்வது, வினிகர் தயாரிப்பது, கொப்பரை தேங்காய், கல்தச்சு, மற்றும் சிறு தோணிகள் செய்வது போன்றவை மரபுரீதியான தொழில்கள் ஆகும்.
எங்கெல்லாம் மக்கள் அமைதியாக இயற்கையோடு இயைந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்களோ, அந்த இடங்களை எல்லாம் யுத்தக் களமாக மாற்றுவதில் தற்போதைய தலைமை அமைச்சருக்கும், உள்துறை அமைச்சருக்கும் நிகரானவர்கள் எவரும் இல்லை என்பதை நமது அனுபவம் உணர்த்துகிறது.
அமைதியாக வாழும் மக்களை ஆட்டிப்படைக்கும் மத்திய நிர்வாகி :
யூனியன் பிரதேசமான இலட்சத் தீவுகளை ஒரு IAS அல்லது IPS அதிகாரியோதான் நிர்வகித்து வந்துள்ளனர். இதற்கு முன்னால் நிர்வாகியாக இருந்த தினேஷ் சர்மா முன்னாள் இந்திய உளவுத்துறை (IB) தலைவராக இருந்தவர். டிசம்பர் 2020ல் இவரது மரணத்திற்குப்பின் இதுவரை பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை காற்றிலே பறக்கவிடப்பட்டது.
பிரபுல் கோடா பட்டேல் என்ற பாஜக நிர்வாகி, அதுவும் தோற்றுப்போன அரசியல்வாதி இலட்சத்தீவுகளின் மத்திய அரசின் நிர்வாகியாக லட்சத் தீவில் நியமிக்கப்பட்டார்., இவர் குஜராத்தில் மோடி அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்தவர். மத துவேஷ செயல்களில் ஈடுபட்டவர் என்ற வகையில் இவர் பல குற்ற வழக்குகள் உள்ளன. இவருடைய தகப்பனார் உள்ளிட்ட குடுமபமே ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்டது.இதன் காரணமாக மோடி-அமித்ஷா இரட்டையரால் இலட்சத்தீவின் நிர்வாகியாக பிரபுல் கோடா பட்டேல் டிசம்பர் 2020ல் நியமிக்கப்பட்டார். ஆர்.எஸ்.எஸ் பின்னணியுள்ள பாஜக நிர்வாகி ஒருவர், பெரும்பான்மை இஸ்லாமியரைக் கொண்ட ஒரு பிரதேசத்தில் நிர்வாகியாக நியமிக்கப்பட்டால், அவர் எவ்வளவு வன்மத்துடன், எவ்வாறெல்லாம் வினையாற்றுவார் என்பதை நாம் விளக்கத் தேவை இல்லை. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
வளர்ச்சி என்ற வார்த்தையின் பின்னால் நடக்கும் ஜித்து விளையாட்டுகள்: இவற்றின் பேராலேயே பலப்பல புதிய சட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன.
1.பசுக்களே இலட்சத்தீவுகளில் கிடையாது! முழுவதுமாக இஸ்லாமியர்கள் உள்ள ஒரு இடத்தில் மாட்டிறைச்சிக்குத் தடை கொண்டு வரப்பட்டுள்ளது.
குற்றச் செயல்களே இல்லாத தீவுகளில் குண்டாஸ் சட்டம் போன்று (Prevention of Anti Social Activity Act) பாசா சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
கிராம பஞ்சாயத்து மற்றும் சட்டங்கள் வலுவாக உள்ள இலட்சத்தீவுகளில், தற்போது அவைகள் பலவீனப்படுத்தப்பட்டுள்ளன.
பூர்வீக பழங்குடி மக்களின் நிலஉரிமை அபகடிக்கும் நோக்கத்துடன் பலவீனப்படுத்தப்பட்டுள்ளது.
அங்குள்ள சாலையின் மிக அதிக நீளம் 11 கி.மீ.தான். அந்தச் சாலையை அகலப்படுத்த மக்களின் நிலங்களைப் பறிப்பதற்கான திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
நாட்டிலேயே கருவுறுதல் விகிதம் மிகக் குறைவாக உள்ள பிரதேசம் இலட்சத்தீவுகள்தான். அங்கு கருவுறுதல் விகிதம் 1.4 விழுக்காடு. நாட்டின் கருவுறுதல் சராசரி விகிதம் 2.2 விழுக்காடு. ஆனாலும் வஞ்சனையாக அங்கு இரண்டு பிள்ளைகளுக்கு மேல் பெற்றவர்கள், பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட முடியாது என்கின்ற சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே எங்கும் அப்படி ஒரு சட்டம் இல்லாத போது இந்திய ஆளுகைக்கு உடப்பட்ட லர்சத் தீவில் கொண்டு வருவதற்கான அவசியமென்ன..?
கடற்கரையைச் சீரமைப்பது (Coastal Regulation Zone Act) என்ற சட்டத்தின் பெயரால், கடற்கரையில் உள்ள மீன்பிடி சாதனங்கள், வலைகள், கூடாரங்கள் உட்பட அனைத்தும் அகற்றப்பட்டுள்ளன.
ஆரம்பம் முதலே அம்மக்கள் மது குடிப்பது கிடையாது. மது விலக்கு அமலில் உள்ள பகுதியில் தற்போது மதுவிலக்குத் தளர்த்தப்பட்டுள்ளது.
இவை மட்டுமல்லாமல்,
உயர்நிலைப் பள்ளிகளில் உள்ள 200 ஒப்பந்த ஆசிரியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எதிர்த்துப் போராடிய மாணவர்கள் மீது தடியடி பிரயோகம். அதுபோல சுற்றுலாத் துறையில் 190 பேர் வேலை நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர்.
தீவுகளில் உள்ள அனைத்து துணைகோட்டாட்சியர்களும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் ஏற்படும் காலி இடங்களில், வடஇந்தியர்கள் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் அங்குள்ள மக்களுக்கு மலையாளம் தவிர வேறு மொழி தெரியாது.
மேலும், அங்குள்ள இரண்டு பால் பண்ணைகளும் மூடப்பட்டன. பால் மற்றும் பொருட்கள் கோழிக்கோட்டிலிருந்துதான் காலங்காலமாக வந்து கொண்டிருந்தன. இனி குஜராத்தில் உள்ள துறைமுகங்களிலிருந்துதான் வரவேண்டுமாம்.
இவர் அங்குப் பொறுப்பேற்கின்ற காலம் அதாவது 2021 ஜனவரி வரை கோவிட் தொற்று யாருக்கும் இல்லை. இலட்சத்தீவுகள் செல்வதற்கான கட்டுப்பாடுகளைப் புதிய நிர்வாகி பிரபுல் கோடா பட்டேல் தளர்த்தியதன் மூலம் தற்போது 8,500 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மருத்துவ சிகிச்சைக்காக ஒருவரை கோழிக்கோட்டிற்குக் கொண்டு செல்ல வேண்டுமானால் கூட, இவரது ஒப்புதல் இல்லாமல் கொண்டு செல்ல முடியாது என்ற அளவுக்கு அங்குள்ள மக்களின் அனைத்து அதிகாரங்களும் குறைக்கப்பட்டு மையப்படுத்தப்பட்டுள்ளன.
சாட்டையை சுழற்றியது உச்ச நீதிமன்றம்,சரணடைந்தது பாஜக அரசு!
மாநில அரசுகள் அடிமைகளா..? மத்திய அரசு எஜமானனா..?
அரசியல் எதிர்வினை
கேரள அரசு, இலட்சத்தீவுகளின் புதிய நிர்வாகியின் நடவடிக்கைகளை எதிர்க்கின்ற அதே நேரத்தில், புதிய நிர்வாகியைத் திரும்பப் பெறவேண்டும் என்று சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகள் புதிய நிர்வாகி பிரபுல் கோடா பட்டேலை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன
கடைசியாக வந்த செய்தி:
மீன்பிடிக்கச் செல்லும் ஒவ்வொரு தோணியிலும் பொறுப்புள்ள ஒரு அரசு ஊழியர் உளவு வேலைக்காக கண்டிப்பாக செல்ல வேண்டும் என்கின்ற உத்தரவை மத்திய நிர்வாகி பிரபுல் கோடா பட்டேல் பிறப்பித்துள்ளதற்கு அங்குள்ள மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த வகையில் ஒரு அமைதி தவழும் பிரதேசமான இலட்சத்தீவுகள் யுத்தக்களமாக மத்திய அரசால் மாற்றப்பட்டு இருக்கிறது என்பது மிக வருத்தமான விடயம். இலட்சத்தீவு மக்களோடு அவர்களுடைய உரிமைப்போரில் அவர்களுடன் இணைந்து நிற்போம்.
கட்டுரையாளர்; கே.பாலகிருஷ்ணன்,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக