வெள்ளி, 14 ஜூன், 2019

அசோக் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி வெட்டிக்கொலை.. DYIF மாவட்ட ...

BBC :திருநெல்வேலியில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த 23 வயதான அசோக்
என்பவர் தனது தாயாரை சாதி இந்துக்கள், இரு சக்கர வாகனத்தில் மோதியது தொடர்பாக காவல்துறையில் ஒரு புகார் கொடுத்திருந்தார். அதன் பின்னர் சில தினங்களுக்குப் பின் ஒரு கும்பல் அவரை வெட்டிக்கொலை செய்தது.
கொலை செய்யப்பட்ட அசோக் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் பிரிவான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்தவர். இதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவ்விரு சம்பவங்களிலும் சாதிய மனநிலையே முக்கிய பங்காற்றி இருப்பதாக செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஒரு சம்பவத்தில் 'தீண்டாமை' பிரச்சனையால் பதற்றமும் மற்றொரு சம்பவத்தில் சாதிய மனநிலையும் கொலைக்கும் வித்திட்டதாக கூறுகிறார்கள்.

அசோக் விவகாரத்தில் என்ன நடந்தது? "பல நாட்களுக்கு முன்னர் கரையிருப்பு கிராமத்தைச் சேர்ந்த அசோக் தனது தாயாருடன் இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்றபோது அதில் வைக்கப்பட்டிருந்த புல்கட்டு மற்றொரு சாதியைச் சேர்ந்தவர் மீது மோதியுள்ளது. இது தொடர்பாக அந்நபர் அசோக்கிடம் தகராறு செய்த நிலையில் இரு தரப்புக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அசோக் காவல் நிலையில் புகாரளித்திருக்கிறார்.

சம்பந்தப்பட்ட நபரை தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறை கைது செய்து காவலில் வைத்தது.
இதற்கிடையில் அசோக் மற்றும் அவரது குழுவினர் தங்களை தாக்கியதாக எதிர்தரப்பு கொடுத்த மற்றொரு புகாரில் அசோக் உள்பட நான்கு பேரை கைது செய்தோம். அதன் பின்னர் இந்த விவகாரத்தில் பழிவாங்குவதற்காக அந்தத் தரப்பு அசோக்கை படுகொலை செய்திருக்கிறது'' என பிபிசி தமிழிடம் கூறினார் திருநெல்வேலி நகர துணை காவல் ஆணையாளர் ஃபெரோஸ்கான் அப்துல்லா.
கரையிருப்பு கிராமத்தில் பொதுப்பாதை வழியாக தலித்துகளை செல்லவிடாத ஆதிக்க சாதியினருக்கு எதிராக தட்டிக்கேட்க முன்வருவோர் இடைமறித்து அச்சுறுத்தும் சம்பவங்கள் நடந்துள்ளன என்றும், அசோக் சாதி வெறியால் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று அவரது கொலையைக் கண்டித்து கருத்து தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
ஆனால் காவல்துறை மெத்தனப்போக்கோடு செயல்பட்டது என்கிறார் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் தில்லிபாபு.
''அசோக் புகார் கொடுத்து கைது செய்யப்பட்ட அந்நபர் சில நாள்களிலேயே பிணை கேட்க, காவல்துறை ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்பதால் உடனடியாக பிணை கிடைத்துவிட்டது.
அதன் பின்னரே இந்தக் கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தச்சநல்லூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்த நிலையில் அவர்கள் கறாரான அணுகுமுறையை கடைபிடித்திருந்தால் இந்த கொலை தவிர்க்கப்பட்டிருக்கலாம்'' என்கிறார் அவர்.
இந்த விவாகரத்தை பொருத்தவரை ஆறு பேர் சந்தேகத்தின் பேரில் விசாரணை வளையத்தில் இருப்பதாகவும் இன்னும் சில பேர் மீது சந்தேகம் இருப்பதாகவும் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல்துறை கூறுகிறது.



''நவீன காலத்திலும் ஆதிக்க சாதியினர் வசிக்கும் தெரு வழியாக செல்லக்கூடாது, தீண்டாமை உள்ளிட்டவை இன்னமும் கிராமங்களில் இருக்கிறது. ஆணவப்படுகொலை உள்ளிட்ட பல்வேறு வகைகளில் சாதிய கொடுமை நடைபெறுகிறது. ஆதிக்க சாதியினரின் ஒரு சிலர் மட்டுமே தவறு செய்கின்றனர் ஆனால் அதை தீங்கிழைக்காத பெரும்பான்மை ஆதிக்க சமூகம் இதனை கண்டிக்காமல் கடந்துசெல்கிறது. இது மறைமுகமாக அந்த சிறிய குழுக்களுக்கு ஊக்கமூட்டுகிறது'' என்கிறார் தில்லி பாபு.
''இது ஒரு சிறு தகராறில் ஆரம்பித்த பிரச்சனை. இந்த கொலைக்கு நோக்கம் சாதிதான் என உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் சமூகத்தில் சாதி புரையோடிப்போயிருக்கிறது. ஒரே சாதி எனில் இந்த தகராறுகள் வன்மம் ஆவதில்லை, வேறு சாதியினரிடையே தகராறு ஏற்பட்டால் அது சாதிய வன்மம் ஆகிவிடுகிறது. இந்த பிரச்சனையில் அந்த ஊரில் வசிக்கும் ஆதிக்க சாதியினர் மீது பொதுவாக குற்றம்சுமத்தப்படவில்லை; அவர்களில் ஒரு குடும்பத்தின் மீதுதான் குற்றம் சுமத்துகிறார்கள். சிறிதாக ஆரம்பித்த பிரச்சனை கொலையில் முடிந்துவிட்டது'' என்றார் ஃபெரோஸ்கான்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் என பலர் இந்த விவகாரத்தில் நீதி வேண்டி போராடத் துவங்கியுள்ளனர்.

கருத்துகள் இல்லை: