புதன், 12 ஜூன், 2019

வித்தியா சாகர் சிலை மீண்டும் நிறுவப்பட்டது .. பாஜக குண்டர்களால் நொறுக்கப்பட்ட சிலை ...

தினமலர் :கோல்கட்டா: மேற்கு வங்கத்தில், பா.ஜ., நடத்திய பேரணியின் போது சேதப்படுத்தப்படுத்தப்பட்ட, சமூக சீர்திருத்தவாதி, வித்யாசாகரின் சிலை, நேற்று, சரி செய்யப்பட்டு, மீண்டும் நிறுவப்பட்டது. சிலைக்கு, முதல்வர் மம்தா பானர்ஜி, மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.
மேற்கு வங்கத்தில், கடந்த மாதம் நடந்த லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, பா.ஜ., வினருக்கும், ஆளும் கட்சியான, திரிணமுல் காங்., கட்சியினருக்கும் இடையே, பல இடங்களில் மோதல் ஏற்பட்டது. கடைசி கட்ட பிரசாரத்தின் போது, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, கோல்கட்டாவில், பிரமாண்ட பேரணி நடத்தினர். அப்போது, பா.ஜ., - திரிணமுல் தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கினர்.

பேரணி சென்ற பகுதியில் இருந்த வித்யாசாகர் கல்லுாரிக்குள், ஒரு கும்பல் புகுந்தது. சமூக சீர்திருத்தவாதியான, மறைந்த, ஈஸ்வர் சந்திர வித்யாசாகரின் மார்பளவு சிலை, அங்கு நிறுவப்பட்டிருந்தது. அந்த வன்முறை கும்பல், சிலையை அடித்து, உதைத்து, சேதப்படுத்தியது. இந்த விவகாரம், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சிலை சேதப்படுத்தப் பட்டதற்கு, இரு கட்சியினரும், ஒருவர் மீது, ஒருவர் குற்றம் சாட்டினர். தேர்தல் பிரசாரத்திலும், இந்த விவகாரம் எதிரொலித்தது.


இந்நிலையில், அந்த சிலை, சரி செய்யப்பட்டு, மீண்டும் அதே இடத்தில், நேற்று நிறுவப்பட்டது. அதற்கு முன், பள்ளி ஒன்றில் வைக்கப்பட்டிருந்த அந்த சிலைக்கு, முதல்வர் மம்தா பானர்ஜி, மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.
அப்போது அவர் பேசியதாவது: லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியானதற்கு பின் நடந்த வன்முறையில், எங்கள் கட்சியை சேர்ந்த, எட்டு பேர் இறந்து விட்டனர். பா.ஜ.,வைச் சேர்ந்த இரண்டு பேரும் பலியாகியுள்ளனர். இறந்தவர்கள் எந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும், அது, பரிதாபத்துக்குரியது. இனியும், இதுபோன்ற வன்முறைகள் தொடரக் கூடாது.மேற்கு வங்கத்தை, குஜராத் போல், வன்முறை களமாக மாற்ற, பா.ஜ., வினர் திட்டமிட்டுள்ளனர். நான் சிறைக்கு சென்றாலும், அதுபோன்ற ஒரு நிலை ஏற்பட அனுமதிக்க மாட்டேன். இவ்வாறு, அவர் பேசினார்.

இதற்கிடையே, 24 பர்கானா மாவட்டத்தில் நேற்று நடந்த வன்முறையில், திரிணமுல் கட்சியினர் இருவர் உயிரிழந்தனர். பா.ஜ., வினர், கையெறி குண்டுகளை வீசி, இந்த உயிரிழப்புகளை ஏற்படுத்தியதாக, திரிணமுல் கட்சியினர் கூறினர். இந்த குற்றச்சாட்டை, பா.ஜ., தலைவர்கள் மறுத்துள்ளனர்

கருத்துகள் இல்லை: