திங்கள், 10 ஜூன், 2019

புயல் வந்தாலும் அசராத வீடு: எளிய முறையில் கட்டட கலையை பயிற்றுவிக்கும் சேலத்து இளைஞர்

அடுத்த புயல் வந்தாலும் அசராத வீடு
உறையுள்’ வீட்டின் மாதிரி வடிவம்
ஐஸ்வர்யா ரவிசங்கர் - பிபிசி தமிழ் :
ஐம்பதுக்கும் மேற்பட்ட உயிரிழப்புகளையும், பல லட்சக்கணக்கான மரங்கள் மற்றும் வீடுகள் அழிவதற்கும் காரணமான கஜ புயல் தமிழகத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை நம்மால் எளிதில் மறந்துவிட முடியாது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய நான்கு மாவட்டங்கள் பலத்த சேதமடைந்தன. அரசு தரப்பும் சில தனியார் அமைப்புகளும் பல நிவாரண உதவிகள் செய்திருந்தாலும் தற்போதும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கஜ புயலால் வீடுகளை இழந்த மக்களுக்கு குறைந்த செலவில் வீடுகள் கட்டித்தரும் திட்டத்தை உருவாக்கும் போட்டியை யூடியூப் சேனல் ஒன்று சில மாதங்களுக்கு முன்பு நடத்தியிருந்தது. இந்த போட்டியில் பங்கேற்ற பிறகு இதன்மூலம் கிடைத்த உந்து சக்தியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குறைந்த செலவில் அதிக வீடுகளை கட்டித்தருவதை தனது இலக்காகக் கொண்டு செயலாற்றி வருகிறார் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மதன் ராஜ் என்ற இளைஞர்.

2.5 லட்சத்திம் ரூபாயில் ‘உறையுள்’ வீடு

தனி ஆளாக வளர்த்தெடுத்த தாய், தன்னை நம்பியுள்ள தங்கை தம்பி, வருமானத்தில் பின்தங்கிய குடும்பம், தமிழ் வழி கல்வியில் படிப்பு. இப்படிப்பட்ட பின்புலத்தை கொண்ட மதன், உதவித்தொகை மூலம் கட்டிட கலையில் பட்டம் பெற்றவர். இருபத்து எட்டு வயதாகும் இவருக்கு சிறு வயது முதலே கட்டிட வடிவமைப்பில் அதிக ஆர்வம் இருந்து வந்தது.
இயற்கை பேரிடர் காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவாகவும் தரமாகவும் வீடுகள் அமைத்து தருவது அரசு எதிர்கொள்ளும் பெரிய சவால். இந்த பிரச்சனையை எதிர்கொள்ள நினைத்த மதன், வெறும் வருவாய் மட்டும் ஈட்டித்தரும் சராசரி வேலையை விரும்பாதவர் என்பதால், பல மாத ஆராய்ச்சிகளுக்கு பிறகு ‘உறையுள்’ என்று பெயரிடப்பட்ட மலிவு விலை வீட்டின் இரண்டு பதிப்புகளுக்கான திட்டத்தை இவர் உருவாக்கினார்.
இதன்படி 340 சதுர அடி பரப்பளவில் ஒரு வரவேற்பறை, ஒரு படுக்கை அறை, சமையலறை, குளியலறை, குழந்தைகள் படிக்கும் அறை என ஒரு சராசரி குடும்பம் வசிப்பதற்கு போதுமான வீட்டை 2.5 லட்சம் ரூபாய் மதிப்பில் மதன் உருவாக்கிக் காட்டியிருக்கிறார்.

அடுத்த புயல் வந்தாலும் அசராத வீடு

கஜ முதல் ஃபானி வரை

கடந்த மே மாதம் ஒடிஷா மாநிலத்தை புரட்டிப்போட்ட ஃபானி புயலில் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளினால் பாதுகாக்கப்பட்டது ஒரு புறம் இருக்க, 2000-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்ததால் அங்குள்ள மக்களின் நிலை தற்போதும் மோசமாக இருப்பதாக மதன் கூறுகிறார்.


”நாகப்பட்டினத்தில் ‘உறையுள்’ மலிவு விலை வீட்டின் இரண்டாவது பதிப்பு குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த நானும் எனது குழுவினரும் முகாமிட்டிருந்தோம். அப்போது ஒடிஷாவில் ஏற்பட்ட ஃபானி புயல் குறித்த செய்திகளை கேள்விப்பட்டவுடன் அங்குள்ள மக்களுக்கு என்னால் இயன்ற உதவிகளை உடனடியாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், எனது பைக்கை எடுத்துக்கொண்டு ஒடிஷாவுக்கு தனியாக கிளம்பிவிட்டேன்,” என தனது பயணத்தை விவரிக்கிறார் மதன்.

அடுத்த புயல் வந்தாலும் அசராத வீடு
Image caption ஒடிஷாவில் உள்ளூர் மக்களுக்கு வீடு கட்ட கற்றுத்தரும் மதன் ராஜ்
சுமார் 1800 கிலோமீட்டர் பைக்கில் பயணம் செய்து ஒடிஷாவை அடைந்த இவர், இந்தியா நூறு ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்ததோ அதேபோல் தற்போதைய ஒடிஷா இருப்பதாக கூறுகிறார். ” வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதால், கூடாரத்தில் வசிக்கும் மக்கள் பொது விநியோக முறையில் வாங்கப்படும் அரிசி, பருப்பு போன்றவற்றை வைத்து பொதுவான இடத்தில் சமைத்து அனைவரும் பகிர்ந்து கொள்கின்றனர். குழந்தைகள் படிக்கவும், வயதானவர்கள் ஓய்வு எடுக்கவும்கூட சரியான இடம் இல்லாததை பார்க்க மிகவும் வருத்தமாக இருந்தது,” என்று பிபிசி தமிழிடம் தனது பயண அனுபவத்தை அவர் பகிர்ந்துகொண்டார்.

60,000 ரூபாயில் வீடு சாத்தியமா?

அடுத்த புயல் வந்தாலும் அசராத வீடுசமூக ஆர்வலரும் உள்ளூர்வாசியுமான திலீப் என்பவரின் உதவியுடன் ஒடிஷாவின் பல கிராமங்களுக்கு சென்று தனது ‘உறையுள்’ மலிவு வீட்டை எப்படி கட்டமைப்பது என்பதை விளக்கினார் மதன். ஆனால் அங்குள்ள கள நிலைமையை நேரில் பார்த்த பிறகு மலிவு வீட்டின் மூன்றாவது பதிப்பை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்கிறார்.
”உள்ளூரில் நிலவும் சூழல், கால நிலை, வீடு கட்ட தேவைப்படும் பொருட்கள் எளிதில் கிடைக்கின்றனவா என்பனவற்றை எல்லாம் கருத்தில் கொண்டுதான் இந்த மலிவு வீட்டின் முதல் பதிப்பையும் இரண்டாம் பதிப்பையும் உருவாக்கினேன். எனவே இந்த காரணிகளை மையமாகக் கொண்டு 240 சதுர அடி பரப்பளவில் வெறும் அறுபதாயிரம் ரூபாயில் மலிவு வீட்டின் மூன்றாவது பதிப்புக்கான மாதிரி திட்டத்தை ஒடிஷாவுக்கு சென்ற பிறகு உருவாக்கினேன்.”

 
நாகப்பட்டினத்தில் மதன் குழுவினர் உருவாக்கிய மாதிரி வீடு
”அங்கு ஒரு கிராமத்திற்கு சென்றபோது, உள்ளூர் மக்களை கடற்கரை பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கு எளிதில் கிடைக்கும் பொருட்களை வைத்து தரமான வீட்டை அமைக்க பயிற்சியளித்தேன். இதை ஒரு ஓரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த சில இளைஞர்கள் என்னிடம் வந்து தழு தழுத்த குரலில், ”எப்படி வீடு கட்டுவது என்று எங்களுக்கும் சொல்லித்தருகிறீர்களா? யாரவது வீடு கட்டி தருவார்களா என்று எதிர்பார்த்து ஒதுக்குப்புறங்களில் சிரமப்பட்டு வாழ்வதற்கு பதிலாக எங்களுக்கான வீட்டை நாங்களே கட்டிக்கொள்கிறோம்,” என்று சொன்னது என் மனதை என்னவோ செய்தது என்று கண்கலங்கியபடி நம்மிடம் கூறினார்.

மூங்கில், மண், தண்ணீர் பாட்டில்களால் கட்டப்படும் வீடு

‘மதன் சீவ்’ என்ற பெயரில் நான்கு பேர் கொண்ட சொந்த நிறுவனத்தை நாகப்பட்டினத்தில் தொடங்கியிருக்கிறார் இவர். ஆர்வமுள்ள எவரும் தனது நிறுவனத்தில் இணைந்துகொள்ளலாம் என்று சமூக வலைதள பக்கத்தில் இவர் வெளியிட்ட பதிவைப் பார்த்து பல மாவட்டங்களில் இருந்தும் தன்னார்வலர்கள் விருப்பம் தெரிவித்துவருவது தனக்கு களிப்பூட்டுவதாக மதன் கூறுகிறார்.
“சூரிய சக்தியில் இயங்கும் மின்சாரம், காலநிலைக்கு ஏற்றவாறு வீட்டை அமைப்பது, வீட்டின் கட்டமைப்பில் தொழில்நுட்பத்தை புகுத்துவது போன்றவற்றை செயல்படுத்த வெறும் கட்டிட கலை மட்டும் தெரிந்திருந்தால் போதாது. எனவே தொழில்முறையாக கட்டிட கலையை பயின்றவர்கள் மட்டுமில்லாமல், புவியியல், சூழலியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் போன்றவற்றை பயின்றவர்களையும் எனது நிறுவனம் வரவேற்க தயாராக இருக்கிறது.


இதை நிறுவனம் என்று சொல்வதைவிட ‘கண்டுபிடிப்பு மையம்’ என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறன். ஏனென்றால் எங்கள் நிறுவனத்தில் புதிதாக எதையாவது கண்டுபிடிப்பது, நவீன முறையிலும் மலிவு விலையிலும் வீடுகள் கட்டுவது போன்றவை குறித்துதான் பெரும்பாலும் எங்கள் ஆராய்ச்சி அமைந்திருக்கும்” என்று கூறிய மதன் இந்த வீடு கட்டுவதற்கு தேவையான பொருட்கள் குறித்தும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

அடுத்த புயல் வந்தாலும் அசராத வீடு
Image caption பயிற்சிக்கு பிறகு தங்களுக்கான வீட்டை கட்ட முயற்சிக்கும் மக்கள்
“மூங்கில் அல்லது யூக்கலிப்டஸ் மரங்கள், மண் மற்றும் சிமெண்ட் கலவை, தண்ணீர் பாட்டில்கள் போன்றவை இந்த வீடு கட்ட தேவைப்படும் முக்கியமான பொருட்கள். இயற்கையான முறையில் எல்லா அறைகளிலும் காற்று நுழையும்படி வடிவமைத்திருக்கிறோம். இந்த வீடு எளிதில் வெப்பமாகாது, கரையான் அல்லது பூச்சி போன்றவை வராதது, வளிமண்டல அழுத்தத்தையும் வீட்டில் நிலவும் அழுத்தத்தையும் சமன் செய்ய முயற்சித்துள்ளோம். இதனால் மீண்டும் ஒரு புயல் வந்தாலும் வீட்டிற்கு குறைந்த அளவிலான பாதிப்புகளே ஏற்படும்” என்று விளக்குகிறார்.

உலகளவில் பிரபலப்படுத்த விருப்பம்

தனது நிறுவனத்தில் சேர அழைப்பு விடுத்துள்ளது ஒரு புறம் இருக்க, சாமானியர்களுக்கு புரியும் வகையில் கட்டிட கலையை தமிழில் பயிற்றுவிக்க யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார் இந்த இளைஞர். ”காக்கை குருவி போன்ற பறவைகளும் நத்தை ஆமை போன்ற விலங்குகளும் தனக்கான வீட்டை தானே கட்டிக்கொள்கின்றன. ஆனால் மனிதன் மட்டும்தான் தனக்கான வீட்டை அமைக்க மற்ற மனிதர்களை சார்ந்து இருக்கிறான். எனவே அனைவருக்கும் தங்கள் வீட்டை முழுவதும் வடிவமைக்க தெரியாவிட்டாலும் சில அடிப்படை விடயங்களை பயிற்றுவிக்க வேண்டும் என்பதே என் நோக்கம். இந்த அறிவு வீடு கட்டும்போது ஏற்படும் தேவையற்ற செலவுகளை குறைக்கவும், பொருளாதார ரீதியாக ஏமாறாமல் இருக்கவும் உதவும்.”



இந்த திட்டத்திற்கு எந்த அளவுக்கு ஆதரவு கிடைத்துள்ளது என்று கேட்டபோது, ”நான் செல்லும் இடங்களிலெல்லாம் இந்த மலிவு விலை வீட்டிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. ஆனால் அரசு தரப்பில் இதுவரை எந்த ஆதரவும் கிடைக்கவில்லை. உறையுள் வீட்டின் இரண்டாம் பதிப்பை நாகையிலும் மூன்றாம் பதிப்பை ஒடிஷாவிலும் செயல்படுத்த நிதி உதவி எதிர்பார்த்து காத்திருக்கிறேன். போதிய நிதி கிடைத்தால் ஒரு கோடி ரூபாயில் இருநூறு வீடுகள் வரை எங்கள் குழுவால் அமைத்துத்தர முடியும்” என்கிறார் இவர்.
இந்தியாவோடு மட்டும் சுருங்கிவிடவில்லை மதனின் இலக்கு. பொருளாதார நிலையில் பின்தங்கிய ஆப்பி ரிக்கா போன்ற நாடுகளுக்கும் சென்று அங்குள்ள சூழல் மற்றும் மக்களின் கலாசாரத்திற்கு ஏற்றார் போல் மலிவு விலையில் வீடுகள் அமைக்கவும் உள்ளூர் மக்களுக்கு எளிய முறையில் கட்டட கலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் விரும்புகிறேன். எனது இந்த நீண்ட பாதையில் ‘உறையுள்’ வீடு சிறு தொடக்கம் என்கிறார் இந்த இளைஞர்.
bbc

கருத்துகள் இல்லை: