திங்கள், 6 மே, 2019

நீட் தேர்வு: உயிரியல், வேதியியல் வினாக்கள் எளிமை! இயற்பியல் பகுதி கடினம்!

nnn.nakkheeran.in - elayaraja : நாடு முழுவதும் இன்று நடந்த நீட் தேர்வில், உயிரியல், வேதியியல் பாடப்பகுதிகளில் இருந்து கேட்கப்பட்ட வினாக்கள் எளிமையாகவும், இயற்பியல் பகுதி வினாக்கள்  சற்று கடினமாக இருந்ததாகவும் தேர்வர்கள் தெரிவித்துள்ளனர். ஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப்படிப்புகளில் சேர, 'நீட்' எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். அதன்படி, நாடு முழுவதும் இன்று (மே 5, 2019) 15.19 நீட் தேர்வு நடந்தது.
இந்தியா முழுவதும் 15.19 லட்சம் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். தமிழகம் முழுவதும் 14 நகரங்களில் 150 மையங்களில் தேர்வு நடந்தது. சேலம் மாவட்டத்தில் சோனா கல்லூரி, காவேரி பொறியியல் கல்லூரி, செந்தில் பப்ளிக் பள்ளி, ஜெய்ராம் பப்ளிக் பள்ளி, வித்யாமந்திர் பள்ளிகள் உள்பட மொத்தம் 17 மையங்களில் தேர்வு நடந்தது. இம்மாவட்டத்தில் 17339 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.
கடந்த இரு ஆண்டுகளாக நீட் தேர்வு காலை 10 மணி முதல் 1 மணி வரை நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு மதியம் 2 மணிக்கு தொடங்கி 5 மணி வரை நடத்தப்பட்டது. தேர்வர்களுக்கு இந்தாண்டும் உடைகள் அணிவதில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. தேர்வு தொடங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாகவே அவரவர் மையங்களுக்கு வந்து விடுமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. பகல் 1.30 மணிக்கு தேர்வுக்கூடத்தின் பிரதான நுழைவு வாயில் மூடப்படும் என்றும் 1.45 மணிக்கு மேல் வருபவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி மறுக்கப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்து இருந்தது.

என்றாலும், இன்றைக்கும் பல தேர்வர்கள் 1.30 மணிக்குப் பிறகும் வந்தனர். சேலத்தில் வித்யா மந்திர் என்ற பெயரில் மெய்யனூர், செவ்வாய்பேட்டை, அம்மாபேட்டை, அயோத்தியாப்பட்டணம் ஆகிய இடங்களில் பள்ளிகள் உள்ளன. அனுமதி சீட்டில் மையத்தின் முழு முகவரியையும் சரியாக கவனிக்காத வெளியூர்களைச் சேர்ந்த தேர்வர்கள், சேலத்தில் எந்த வித்யா மந்திர் பள்ளி என்று தெரியாமல் இந்தாண்டும் தடுமாறினர்.

ஒரு தேர்வர் மெய்யனூர் வித்யாமந்திர் பள்ளிக்குச் செல்வதற்கு பதிலாக தவறுதலாக அம்மாபேட்டை வித்யாமந்திர் பள்ளிக்«கு வந்துவிட்டார். அவருடைய அனுமதி சீட்டை ஆய்வு செய்தபோது தேர்வரின் கவனக்குறைவு தெரிய வந்தது. பின்னர் அந்த மையத்தில் இருந்த ஒரு மாணவியின் தந்தை அந்த தேர்வரை சரியான மையத்திற்கு அழைத்துச்சென்று உதவினார்.

தேர்வர்கள் முழு கை வைத்த சட்டை அணியக்கூடாது என்பதும் விதியாகும். ஆனால், கடலூர் மாவட்டம் எஸ்.நரையூரைச் சேர்ந்த மாணவர் சரண்ராஜ், முழு கை வைத்த சட்டையுடன் தேர்வுக்கூடத்திற்கு வந்திருந்தார். மெட்டர் டிடெக்டர் சோதனை எல்லாம் முடிந்து தேர்வு எழுதும் அறைக்குச் சென்றபோது, அங்கிருந்த பார்வையாளர் அவரை அரைக்கை சட்டை அணிந்து வருமாறு வற்புறுத்தவே, அந்த மாணவர் மீண்டும் பிரதான வாயிலுக்கு ஓடிவந்தார். அங்கு தயார் நிலையில் அவருடைய தந்தை சக்திவேல் அரைக்கை சட்டை ஒன்றையும் பையில் எடுத்து வந்திருந்தார். பின்னர் அந்த சட்டையை அணிந்து கொண்டு மீண்டும் தேர்வு அறைக்குள் சரண்ராஜ் சென்றார்.

தேர்வர்கள் கையில் காப்பு, வளையல், காலில் கொலுசு போன்ற ஆபரணங்களை அணிந்து வரக்கூடாது. இந்நிலையில், ஒரு மாணவி ஒரு கொலுசு அணிந்து தேர்வுக்கூடத்திற்கு சென்றார். கொலுசை கழற்ற அந்த மாணவியின் தந்தை கையில் கட்டிங் பிளேயருடன் வந்திருந்தார். எனினும், அந்த மாணவியை கொலுசுடனேயே தேர்வு  எழுத அனுமதித்தனர்.

அவசரகதியில் ஒரு மாணவர் புகைப்படம் எடுத்து வரத்தவறி விட்டார். பின்னர் உடன் வந்த மாணவரின் நண்பர், அவருக்காக செல்போனில் படம் பிடித்து புகைப்படத்தை பிரிண்ட் எடுத்து வந்து உதவினார்.

இப்படி பல சோதனைகள், கெடுபிடிகளுடன் நடந்த நீட் தேர்வு மாலை 5 மணிக்கு தேர்வு முடிந்தது. வினாத்தாள் குறித்து மாணவ, மாணவிகள் கூறியதாவது: 

அபிநயஸ்ரீ (சேலம்): நீட் தேர்வு மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு நடந்தது. நான் முதன்முதலாக இத்தேர்வை எழுதுகிறேன். இதற்காக தனிப்பயிற்சியும் எடுத்துக் கொண்டேன். இதில், உயிரியல் பாடப்பகுதியில் இருந்த கேட்கப்பட்ட வினாக்கள் எளிமையாக இருந்தன. இயற்பியல் பகுதியில் 25 முதல் 30 வினாக்கள் எளிமையாக விடையளிக்கும் வகையில் இருந்தன. மற்ற வினாக்கள் கணக்கீடு தொடர்பாக இருந்ததால் கொஞ்சம் கடினமாக இருந்தது. உயிரியல் பகுதி வினாக்களும் ஓரளவு எளிமையாக இருந்தன. 



தேர்வுக்கூட கெடுபிடிகள் குறித்து முன்பே அறிந்து இருந்ததால் என் தந்தை ஒரு வாரத்திற்கு முன்பே இந்த மையத்தை நேரில் வந்து பார்த்துவிட்டு வந்தார். தேர்வுக்கு வருவோர் வெளிர் நிற உடைதான் அணிய வேண்டும் என்பதால், இதற்காகவே என் தந்தை, இரு நாள்களுக்கு புதிதாக இப்போது நான் அணிந்திருக்கும் உடையை வாங்கித் தந்தார். முன்கூட்டியே விதிகளுக்கு உட்பட்டு எல்லாவற்றிலும் தயார் நிலையில் இருந்ததால், தேர்வு மைய கெடுபிடிகளால் எந்த தொந்தரவும் எனக்கு ஏற்படவில்லை.

நிர்மல்ராஜ் (சேலம்): இயற்பியல் பாடப்பகுதியில் இருந்து நிறைய வினாக்கள் கணக்கு சம்பந்தமாகவே வந்திருந்ததால், கொஞ்சம் கடினமாக இருந்தன. ஆனால், வேதியியல், உயிரியல் பாடப்பகுதி வினாக்கள் மிக எளிமையாக இருந்தன. தனிப்பயிற்சி வகுப்புக்கு சென்று முறையாக பயிற்சி பெற்றவர்கள் இந்த தேர்வை நன்றாக எதிர்கொண்டிருக்க முடியும். என்றாலும் கடந்த ஆண்டு வினாத்தாளைக் காட்டிலும் இந்தாண்டு நீட் தேர்வு கொஞ்சம் எளிமையாகவே இருந்தது.

உஷா (ஜலகண்டாபுரம்): உயிரியல் பாடப்பகுதி வினாக்கள் 50 சதவீதம் எளிமையும், 50 சதவீதம் சற்று கடினமாகவும் கலந்து இருந்தன. இயற்பியல் பகுதியில் பார்முலா அடிப்படையிலான வினாக்கள் நிறைய வந்திருந்தன. அதனால்தான் பலருக்கும் கொஞ்சம் கடினமாக இருந்தது. அதில் பல வினாக்களை தவிர்த்து விட்டாலும்கூட மற்ற பகுதி வினாக்களுக்கு சரியாக விடையளித்தாலே நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெறும் வகையில்தான் வினாத்தாள் இருந்தது. வேதியியல் பகுதியும் ஓரளவு எளிமையாகத்தான் இருந்தது. 

இவ்வாறு மாணவ, மாணவிகள் கூறினர்.

நீட் தேர்வில், சரியாக எழுதப்பட்ட ஒவ்வொரு விடைக்கும் தலா நான்கு மதிப்பெண்கள் வழங்கப்படும். அதேநேரம், ஒவ்வொரு தவறான விடைக்கும் ஒரு மதிப்பெண் கழிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: