செவ்வாய், 7 மே, 2019

22 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தங்கச்சிமடம் மீனவர் கொழும்பில்.. யுடியுப் மூலம் கண்டுபிடிப்பு

மீனவர் பரதனின் குடும்பத்தினர்22 ஆண்டுகளுக்கு முன் மீன்பிடிக்க சென்ற போது மாயமான மீனவர் பரதன்.vikatan.com - உ.பாண்டி :  22 ஆண்டுகளுக்கு முன் மீன்பிடிக்கச் சென்று காணாமல்போன மீனவர் மனநலம் பாதிக்கப்பட்டு இலங்கையில் உள்ள நிலையில், அவரை மீட்டுத் தர மீனவர் குடும்பத்தினர் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1996-ம் ஆண்டு மே மாதம் 5-ந் தேதி தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த ஜான்சன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் விஜி, பரதன், சேவியர், ராஜா ஆகிய 4 பேர் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். வழக்கம்போல் மறுநாள் கரை திரும்ப வேண்டிய மீனவர்கள் கரை திரும்பாததால் இவர்கள் நிலை என்னவென்று தெரியாத நிலை இருந்து வந்தது.

இதனிடையே கடந்த மே மாதம் 9-ம் தேதி இலங்கை யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரக்கூடிய யூடியூப் சேனல் ஒன்றில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரிடம் நடத்திய  விசாரணையின்போது கண்பார்வை இழந்தவர் ஒருவர் மாதம் ஒன்றரை லட்சம் சம்பாதிப்பதாகவும் தனக்குச் சொந்தமாக மூன்று வீடுகள் உள்ளதாகவும் அதில் இரண்டு வீடுகளைத் தன் பெண் பிள்ளைகளுக்குச் சீதனமாக வழங்கியுள்ளதாகவும் செய்திகள் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருந்தபோது கொழும்புப் பகுதியில் உள்ள மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பிச்சை எடுப்பவர்களின் புகைப்படங்கள் ஒளிபரப்பப்பட்டன.

இதை யூடியூப் சேனலில் கண்ட ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ரமேஷ் என்பவர் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் நரைத்த தலைமுடியுடன் முகத்தில் தாடியுடன் ஒரு பெரியவரை பார்த்தபோது அது தன் மாமனார் பரதனைப் போல் உள்ளதை அறிந்து உடனே தன் அத்தையிடம் இந்தத் தகவலை தெரிவித்தவுடன் உறவினர்கள் அனைவரும் ஒன்றுகூடி புகைப்படத்தில் இருந்தது மீனவர் பரதன் என்பதை உறுதி செய்தனர்.
இதையடுத்து மீனவர் பரதனின் மனைவி சரஸ்வதி, மகள்கள் சரவண சுந்தரி, முத்துலெட்சுமி, மகன் மாரிமுத்து மற்றும் கடல் தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யு) மாவட்டச் செயலாளர் கருணாமூர்த்தி ஆகியோர், இலங்கையில் மனநலம் பாதிப்படைந்த நிலையில் சுற்றித் திரியும் மீனவர் பரதனை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்கவும், மீனவர் பரதனுடன் காணாமல்போன மற்ற மீனவர்கள் மூன்று பேரின் நிலை குறித்து அறியவும் நடவடிக்கை எடுக்குமாறு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவிடம் இன்று மனு அளித்தனர்.
vikatan.com

கருத்துகள் இல்லை: