செவ்வாய், 7 மே, 2019

ஐ எஸ் பயங்கரவாதிகள் இந்தியாவை குறிவைத்து பின் இலங்கையை தேர்வு செய்துள்ளார்கள் ? பாகிஸ்தான் வெடிமருந்து .. சீனாவும் ?

இந்தியாவுக்கு வைத்த டார்கெட் இலங்கைக்கு மாறியது!
மின்னம்லம் :ஏப்ரல் 21ஆம் தேதி ஈஸ்டர் ஞாயிறு அன்று இலங்கைத் தலைநகர் கொழும்பில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புகளில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக இலங்கை ராணுவப் புலனாய்வுத் துறை மட்டுமல்லாமல், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் புலனாய்வுத் துறையினரும் தீவிர விசாரணையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
இப்படி ஒரு குண்டுவெடிப்புத் தாக்குதல் நடக்க இருப்பதாக இந்தியா முன்கூட்டியே இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்தும் அதை இலங்கை அரசு அலட்சியப்படுத்திவிட்டது என்று கொழும்பில் இந்த விவகாரம் அரசியலாகவும் மாறியிருக்கிறது.
இந்த நிலையில் தேசியப் புலனாய்வு முகமை எனப்படும் என்ஐஏ (NATIOANAL INVESTIGATION AGENCY) அமைப்பினர் கேரளம் உள்ளிட்ட இடங்களில் நடத்திய சோதனைகளில் இலங்கை குண்டுவெடிப்பு பயங்கரவாதிகளுக்குத் தென்னிந்தியாவில் சிலருடன் தொடர்பிருப்பதும் கண்டறியப்பட்டது. இதையே இலங்கையின் ராணுவ தளபதி மகேஷ் சேனநாயகவும் தெரிவித்திருந்தார்.

“இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பான சந்தேகத்துக்குரியவர்கள் கேரளம், பெங்களூரு, காஷ்மீர் ஆகிய பகுதிகளுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்கள், அவர்கள் அங்கே பயிற்சி பெற்றிருக்கலாம்” என்றும் இலங்கை ராணுவத் தளபதி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில்தான், இந்தக் குண்டுவெடிப்பு முதலில் இந்தியாவில் நடத்தத் திட்டமிடப்பட்டதாகவும் பிறகே இலங்கைக்கு மாற்றப்பட்டதாகவும் புலனாய்வு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் குண்டுவெடிப்புத் திட்டத்தை இந்தியாவுக்குத்தான் குறிவைத்துள்ளதாக உணர்ந்துள்ள மத்திய உளவுப் பிரிவினர் இந்தியா முழுவதையும் தீவிரமாகக் கண்காணித்து வருகிறார்கள். இது தொடர்பாக மாநில உளவுத் துறையினரும் எச்சரிக்கப்பட்டிருக்கிறார்கள்.
நியூசிலாந்து மசூதியில் தொழுகையிலிருந்தபோது கிறிஸ்துவர் ஒருவர் இயந்திரத் துப்பாக்கியுடன் உள்ளே சென்று குருவிகளைச் சுடுவதுபோல் 41 பேரைச் சுட்டுக் கொலைசெய்தார். அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா, இலங்கை, அமெரிக்கா போன்ற நாடுகளைத் தாக்குதல் நடத்த தேர்வு செய்திருக்கிறார்கள் பயங்கரவாதிகள்.
“அமெரிக்காவில் பாதுகாப்பு மிக அதிகமாக இருப்பதால் முடியவில்லை. அதையடுத்து இந்தியாவில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் குண்டுவெடிப்பு நடத்தினால் தேர்தலில் பாஜகவினர் வெற்றிபெற்றுவிடுவார்கள் என்பதால் குண்டுவெடிப்பு திட்டத்தை இலங்கைக்கு மாற்றினார்கள். இந்தியாவில் நடத்துவதைவிட இலங்கையில் தாக்குதல் நடத்தினால்தான் மேற்கத்திய நாடுகளில் அதிகளவில் எதிரொலிக்கும் என்றும் பயங்கரவாதிகள் கருதியிருக்கிறார்கள்” என்கிறார்கள் புலனாய்வு வட்டாரத்தினர்.
மேலும் அவர்கள், “இலங்கையில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று தற்கொலைப் படை பெண்கள் இந்துக்களாக இருந்து மதம் மாறியவர்கள் என்று கண்டறிந்துள்ளார்கள். வெடிகுண்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கேரளம் வயநாடு மாவட்டத்திலும், மேற்கு வங்கத்திலும் பயிற்சி பெற்றுள்ளார்கள்.
தீவிரவாதிகளுக்குப் பாகிஸ்தானிலிருந்து வெடிமருந்து சப்ளை செய்ததாகவும், சீனா உதவிக் கரம் நீட்டியதாகவும் இலங்கை ராணுவத்தினருக்குத் தகவல் கசிந்துள்ளது. இந்தியாவுக்கும் குறிவைத்துள்ளார்கள் மத தீவிரவாதிகள் என்பதால் மாநிலக் காவல் துறையினரும், கடலோர பாதுகாப்புப் படையினரும் ராணுவமும் முழுவீச்சில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்” என்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: