வெள்ளி, 10 மே, 2019

கிரண்பேடிக்கு எதிரான தீர்ப்புக்கு தடையில்லை: உச்ச நீதிமன்றம்!

கிரண்பேடிக்கு எதிரான தீர்ப்புக்கு தடையில்லை: உச்ச நீதிமன்றம்!மின்னம்பலம் : புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிரான சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் தீர்ப்புக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கோப்புகளை ஆய்வு செய்ய வழங்கிய கூடுதல் அதிகாரத்தை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ஏப்ரல் 30ஆம் தேதி ரத்து செய்து உத்தரவிட்டது. அரசின் நடவடிக்கைகளில் தலையிடத் துணைநிலை ஆளுநருக்குத் தடை விதிக்க வேண்டும் என்று புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் லட்சுமி நாராயணன் கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடுத்த வழக்கில் உயர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியது. மேலும், அரசின் நடவடிக்கைகளில் அன்றாடம் துணை நிலை ஆளுநர் தலையிடக் கூடாது என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிக அதிகாரம் உள்ளது என்றும் உயர் நீதிமன்றம் கூறியது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு இந்த வாரத் தொடக்கத்தில் அப்பீல் செய்தது. மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ”சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பால், புதுச்சேரி அரசு செயல்படாமல் முடங்கிவிட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை, அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்” என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி தீபக் குப்தா அடங்கிய அமர்விடம் கோரிக்கை வைத்தார். இம்மனுவை இன்று (மே 10) விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் தீர்ப்புக்கு தடைவிதிக்க மறுத்துவிட்டது.
உச்ச நீதிமன்றத்தின் இம்முடிவுக்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். ” புதுச்சேரி அரசின் அதிகாரத்தில் தலையிடுவதற்கு துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் 'தடை விதிக்க மறுத்திருப்பது வரவேற்கத்தக்கது'. அரசியல் சட்டத்துக்கு விரோதமாகச் செயல்பட்ட புதுச்சேரி துணைநிலை ஆளுநரை உடனே திரும்பப்பெற வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.
.

கருத்துகள் இல்லை: