சனி, 11 மே, 2019

அமேரிக்கா சீன பொருட்களுக்கு வரியை உயர்த்தியது ... திருப்பூருக்கு அடிக்குது லக் - ரூ. 30 ஆயிரம் கோடிக்கு ஆர்டர் குவிகிறது

tamil.goodreturns.in : கோவை: அமெரிக்கா-சீனா இடையில் நடக்கும் வர்த்தகப் போர் தீவிரமடைந்துள்ளதால், ஐரோப்பா மற்றும் கனடா நாடுகளின் பின்னலாடை வர்த்தகர்கள் தங்களின் பார்வையை இந்தியா மீது திருப்பியுள்ளன. இதனால் நடப்பு நிதியாண்டில் சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் வரையிலும் ஆர்டர்கள் குவியும் என்று திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டுமே சுமார் 4400 கோடி ரூபாய்க்கான ஆர்டர்கள் கிடைத்துள்ளது திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது என்று இந்திய பின்னலாடை உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் தெரிவித்தார்.

தினமலர் : வாஷிங்டன்: அமெரிக்கா, ஏற்கனவே அறிவித்தபடி, இன்று(மே 10) சீனப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை, 10 - 25 சதவீதம் உயர்த்தியது.
இதற்கு பதிலடி தரப்படும் என, சீனா தெரிவித்துள்ளால், இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகப் போர் தீவிரம் அடைந்துள்ளது.
அமெரிக்கப் பொருட்களின் இறக்குமதியை அதிகரித்து, வரியை குறைப்பதாக சீனா உறுதி அளித்திருந்தது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன், அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் ஓர் அறிவிப்பை வெளியிட்டார்.  அதில், 'சீனா உறுதி அளித்தபடி நடந்து கொள்ளாததால், அந்நாட்டில் இருந்து இறக்குமதியாகும், 20 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு, 10ம் தேதி வரி உயர்த்தப்படும்' என தெரிவித்திருந்தார்.

 இதையடுத்து, நேற்று, சீன துணை அதிபர், லியு ஹீ தலைமையிலான குழு, அமெரிக்க வர்த்தக பிரதிநிதி, ராபர்ட் லைட்திசர் உள்ளிட்ட, உயர் அதிகாரிகளை சந்தித்துப் பேசியது. இரவு வரை நீடித்த பேச்சில், உடன்பாடு எட்டப்படவில்லை. நேற்று, மீண்டும் பேச்சு நடைபெற்றது. இருந்தபோதிலும், ஏற்கனவே அறிவித்தபடி, சீனப் பொருட்களுக்கான வரி உயர்வு, நேற்று அமலுக்கு வந்தது.


சமைக்கப்பட்ட காய்கறிகள், கிறிஸ்துமஸ் மின் விளக்குகள், குழந்தைகளுக்கான நாற்காலிகள் உள்ளிட்ட, 5,700 பொருட்களின் வரி, 10 - 25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து, அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறியதாவது: டிரம்ப் அறிவித்த ஐந்து நாட்களில், வரி உயர்வு அமலுக்கு வந்துள்ளது. அதனால், சீனாவில் இருந்து ஏற்கனவே ஏற்றுமதி செய்யப்பட்டு, கப்பல்களில் வந்துகொண்டிருக்கும் பொருட்களுக்கு, புதிய வரி உயர்வு பொருந்தாது. இவ்வாறு, அவர் தெரிவித்தார். அமெரிக்காவுடன் பேச்சு நடைபெறும் வேளையில், வரி உயர்த்தப்பட்டிருப்பது, சீனாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என, சீனா தெரிவித்துள்ளது. ஆனால், அது, எந்த வகையில் என்பதை தெரிவிக்கவில்லை. அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கை, சர்வதேச நிதிச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலீடுகள் வெளியேறி வருவதால், பங்குச் சந்தைகள் சரிவைக் கண்டுள்ளன.

கருத்துகள் இல்லை: