வியாழன், 9 மே, 2019

கமல்ஹாசன் பரப்புரைக்கு தடை கோரி அக்கட்சி உறுப்பினரின் மனைவி மனு.. சூலூர் தொகுதியில் வீடியோ


தினகரன் : கோவை: சூலூரில் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பரப்புரை மேற்கொள்ள தடை விதிக்கக்கோரி அக்கட்சியின் உறுப்பினராக இருந்தவரின் மனைவியே கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ள வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது. இடைத்தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், வேட்பாளர்கள் மற்றும் கட்சியினரின் பிரச்சாரம் அனல் பறந்து வருகிறது. இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தொண்டரின் மனைவி ஒருவர், அளித்துள்ள புகார் மனு அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவர் மக்கள் நீதி மையத்தில் உறுப்பினராக இருந்து வந்தார். கடந்த ஏப்ரல் 18ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற பாலமுருகன் அடுத்த நாள் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.


பாலமுருகன் உயிரிழப்பை சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் அவரது மனைவி விஜயகுமாரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், தேர்தல் பரப்புரைக்கு சென்ற பாலமுருகன் உயிரிழந்ததற்கு கமல்ஹாசன் இரங்கல் கூட தெரிவிக்கவில்லை. தொண்டர்களையே கண்டு கொள்ளாத கமல்ஹாசன் மக்கள் பிரச்சனைகளை எப்படி போக்குவார் என்று கேள்வி எழுப்பி உள்ளார். எனவே, இடைத்தேர்தலையொட்டி சூலூர் தொகுதியில் பரப்புரை செய்ய மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசனுக்கு தடை விதிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்

கருத்துகள் இல்லை: