வெள்ளி, 11 ஜனவரி, 2019

பிரசவத்தின்போது குழந்தையின் காலை பிடித்து மிக அழுத்தமாக இழுத்ததால் தலை துண்டிப்பு

Baby split into two during delivery after nurse uses 'brute force' at Jaisalmer government hospital
maalaimalar :ராஜஸ்தான் மாநிலம் ராம்காரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தின் போது குழந்தையின் காலை பிடித்து மிக அழுத்தமாக இழுத்ததால் தலை துண்டான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
#Jaisalmer ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மார் மாவட்டம் ராம்காரை சேர்ந்தவர் திலோக்பதி. இவரது மனைவி தீக்ஷா கன்வர். இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து ராம்காரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தனர். அந்த ஆஸ்பத்திரியில் இருந்த டாக்டர் நிகில்சர்மா அப்போது வெளியே சென்றிருந்தார். பெண் நர்சுகளும் இல்லை.
எனவே ஆண் நர்சுகள் அமிர்த்லால், ஜுன்ஜ்கார்சிங் ஆகியோர் அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்தனர். பிரசவத்தின் போது பெண்ணின் வயிற்றில் இருந்து முதலில் குழந்தையின் தலைதான் வருவது வழக்கம்.


ஆனால் இந்த பெண்ணுக்கு குழந்தையின் கால் முதலில் வெளிவந்தது. இதனால் பிரசவம் ஆவதில் சிரமம் ஏற்பட்டது. அப்போது அவருக்கு பிரசவம் பார்த்த 2 ஆண் நர்சுகளும் குழந்தையின் காலை பிடித்து இழுத்தனர்.

இவ்வாறு மிக அழுத்தமாக இழுத்ததால் குழந்தையின் தலை துண்டாகிவிட்டது. தலை மட்டும் வயிற்றுக்குள் இருக்க உடல் மட்டும் வெளியே வந்தது. 2 ஆண் நர்சுகளும் அப்போது குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. அலட்சியமாக பிரசவம் பார்த்து இப்படி நடந்து கொண்டதால் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

ஆனால் குழந்தையின் தலை துண்டாகி வயிற்றுக்குள் இருக்கும் வி‌ஷயத்தை தாயுக்கோ, உறவினருக்கோ சொல்லவில்லை. வெளியே வந்த உடலின் ஒரு பகுதியை மட்டும் ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர்.

தலை துண்டாகி வயிற்றுக்குள் இருந்ததால் தீக்ஷா கன்வருடைய உடல்நிலை மோசமடைந்தது. இதனால் ஜெய்சல்மாரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு டாக்டர்களிடம் ஆண் நர்சுகள் அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்துவிட்டது. ஆனால் நஞ்சுக்கொடி வெளியே வராமல் வயிற்றுக்குள் இருக்கிறது என்று கூறினார்கள்.

தலை துண்டாகி வயிற்றுக்குள் இருக்கும் வி‌ஷயத்தை சொல்லவில்லை. அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது உள்ளே தலை இருப்பது தெரியவந்தது. அந்த பெண்ணுக்கு அங்கு சிகிச்சை அளிக்க போதிய வசதி இல்லை.

எனவே ஜோத்பூரில் உள்ள பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஆபரே‌ஷன் செய்து குழந்தையின் தலை வெளியே எடுக்கப்பட்டது. தீக்ஷா கன்வர் ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.


இது சம்பந்தமாக திலோக்பதி போலீசார் புகார் கொடுத்தார். இதைத் தொடர்ந்து ஆண் நர்சுகள் அமிர்த்லால், ஜுன்ஜ்கார்சிங் ஆகிய 2 பேர் மீதும் அஜாக்கிரதையாக சிகிச்சை அளித்து மரணத்தை ஏற்படுத்துதல், பாதுகாப்பற்ற முறையில் ஆபத்தான சிகிச்சை அளித்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இருவரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை தேடி வருகிறார்கள்.

இதுதொடர்பாக பெண்ணின் கணவர் திலோக் பதி கூறும்போது, நான் எனது மனைவியை ஆஸ்பத்திரியில் சேர்க்கும்போதே, அங்குள்ள ஊழியர்கள் மிகவும் அலட்சியமாக நடந்து கொண்டார்கள். எங்களை பல்வேறு கட்டங்களில் அவமதித்தார்கள். சரியான சிகிச்சை அளித்து பிரசவம் பார்க்காததே இதற்கு காரணம் என்று கூறினார். #Jaisalmer #Ramgarhgovthospital

கருத்துகள் இல்லை: