உயர்சாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீடு அமலாக்கப்படுவதில் பல சட்ட சிக்கல் இருந்தாலும், சங் பரிவாரங்களின் நீண்ட நாள் திட்டம் அது என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
vinavu கலைமதி : மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கு வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் 10% இடஒதுக்கீட்டை அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது. பொதுப் பிரிவிலிருந்து இந்த 10% இடஒதுக்கீடு செய்யப்படும் எனவும் மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு கூறுகிறது.
ஏற்கனவே உள்ள 50% இட ஒதுக்கீட்டுடன் செயல்படுத்தப்படும் இந்த ஒதுக்கீட்டுக்காக அரசியலமைப்பு விதி 15 மற்றும் 16 ஆகியவற்றில் திருத்தம் செய்யும் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்படும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 50% க்கும் அதிகமாக இடஒதுக்கீடு கொடுக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் சொல்லியிருந்த நிலையில், மத்திய அமைச்சரவையின் முடிவின்படி இடஒதுக்கீடு 60% ஆகிறது.
இந்த அறிவிப்பின் பின்னணி குறித்து, “இடஒதுக்கீட்டின் பலன்களை அனுபவிக்காத, பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழை மக்களுக்கு இந்த இடஒதுக்கீடு” என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது, இந்த ஒதுக்கீட்டின்படி ‘ஏழைகள்’ என்போர் ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சத்துக்கு குறைவாக உள்ளோர், ஐந்து ஏக்கர் நிலமும் 1000 சதுர அடிக்கு குறைவான வீட்டையும் கொண்டவர்கள்!
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே ‘சிறந்த தொடக்கம்’ என்றிருக்கிறார். “இடஒதுக்கீடு தலித்துகள் மற்றும் உயர்சாதியினருக்கிடையே மோதலை உண்டாக்கியது. உயர்சாதி ஏழைகளுக்கு 25% இடஒதுக்கீடு தர வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கையாக இருந்தது. 10% நல்ல தொடக்கம்தான்” என அவர் தெரிவித்திருக்கிறார்.
ஆனால், இடஒதுக்கீடு அறிவிப்பு 2019 மக்களவை தேர்தலுக்காக செய்யப்பட்ட ஏமாற்று அறிவிப்பு என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, “இது ஒரு ஜும்லா (ஏமாற்று) அறிவிப்பு. இதில் நிறைய சட்ட சிக்கல்கள் உள்ளன. நாடாளுமன்ற இரண்டு அவைகளிலும் இந்த மசோதாவை நிறைவேற்ற கால அவகாசம் இல்லை. அரசின் நடவடிக்கை நிச்சயமாக அம்பலமாகும்” என தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
இதேபோன்ற கருத்தை காங்கிரஸ் தலைவர் ஹரீஸ் ராவத்தும் தெரிவித்துள்ளார். “தேர்தலுக்காக அவர்கள் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். பல ‘ஜும்லா’ அறிவிப்புகள் போலத்தான் இதுவும்” என்கிறார்.
“நான்கு ஆண்டுகள் எட்டு மாதமாக உயர்சாதியினரின் இடஒதுக்கீட்டுக்காக சிந்திக்காதவர்கள், இப்போது சிந்திக்கிறார்கள் எனில், அது தேர்தலுக்கான ஏமாற்று வித்தை. 50% மேல் இடஒதுக்கீடு அளிக்க முடியாது என்பது தெரிந்தும்கூட இப்படியான அறிவிப்பு…” என்கிறார் காங்கிரசைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி.
ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ், இடஒதுக்கீடு என்பது பொருளாதார நிலையை உயர்த்துவதற்கல்ல, சமூக ரீதியாக பின் தங்கிய பிரிவினரை பிரதிநிதித்துவம் தர வழங்கப்படுவதே இடஒதுக்கீடு என தெரிவித்துள்ளார். “உண்மையில் பொருளாதார நிலை மேம்படுத்த விரும்பினால், நரேந்திர மோடி ரூ. 15 இலட்சத்தையும் வேலையையும் கொடுத்திருக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
சமூக நீதியை விரும்பும் பல பிராந்திய கட்சிகளும் மோடியின் ‘ஜும்லா’ அறிவிப்பை எதிர்த்திருக்கின்றனர். எதைச் செய்தால் 2019 மக்களவைத் தேர்தலில் வெல்ல முடியும் என இரவு பகலாக சிந்தித்து வருகிறது அனைத்திலும் தோற்றுப்போன மோடி அரசு. அதன்படி, அதிரடி அறிவிப்புகள் இனி வரிசை கட்டும். முதலாவதாக ‘உயர்சாதி’ ஓட்டுக்களை வாங்கும் நோக்கில் வெளியாகியுள்ளது ஏழை உயர்சாதியினருக்கான இடஒதுக்கீடு அறிவிப்பு! உயர்சாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீடு அமலாக்கப்படுவதில் பல சட்ட சிக்கல் இருந்தாலும், சங் பரிவாரங்களின் நீண்ட நாள் திட்டம் அது என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். ஒடுக்கப்படும் சாதிகளுக்கு எதிராக ஆதிக்க சாதிகளைத் தூண்டி விட்டு கலவரம் செய்யும் இந்துத்துவா சக்திகள், ஆதிக்கசாதிகளுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பதாக கூறி இரு வழிகளில் பார்ப்பனிய ஆதிக்கத்தை உறுதிப் படுத்துகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக